பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கேள்வி கேட்பதும், தலையிடுவதும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் மட்டுமல்லாமல், பொதுமக்களிடத்திலும் சகஜமாக உள்ளது. தான் அபிமானம் கொண்ட ஒருவர் ஒழுக்கம் இல்லாதவர் என தெரியவரும்போது அவர் தகுதியில்லாதவர் என முத்திரை குத்தப்படுகிறார். ஒருவர் தனது அனுபவத்தைக் கூறி, இதுகுறித்து கேட்கும் கேள்விக்கு சத்குருவின் பதில்களின் தொகுப்பு இங்கே!

Question: என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை, என் மூத்த சகோதரி போல் நினைத்திருந்தேன். வாழ்க்கையில் நான் எடுத்த பல முக்கியமான முடிவுகளுக்கு அவர்தான் வழிகாட்டியாக இருந்தார். அப்படிப்பட்டவரை அண்மையில் முன்னறிவிப்பின்றிச் சந்திக்கச் சென்றேன். வாசல் கதவைத் தட்டியதும், அவர் வந்து திறந்தபோதே போதையில் தள்ளாடுவதைப் பார்த்து திடுக்கிட்டேன். உள்ளே ஆண்களின் குரல்கள் கேட்டன. 'எதுவாயிருந்தாலும் நாளைக்கு வா!" என்று வாசலோடு என்னை அனுப்பி, கதவைச் சாத்திவிட்டார். அந்த கணத்திலேயே அவர் மீது எனக்கு இந்த மரியாதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நொறுங்கிவிட்டது. அதற்குப்புறம் அவரைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டேன். ஆனால், மனம் எதையோ இழந்து விட்டதுபோல் தவிக்கிறதே...?

சத்குரு:

உங்களிடம் மட்டுமல்ல. நம் நாட்டில் இருக்கும் பலரிடம் நான் காணும் பிரச்சனை இது.

கிரிக்கெட்டில் ஒருவரை உங்கள் அபிமான வீரராக நினைக்கிறீர்கள். அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்? தேவையான ரன்கள் எடுக்கிறாரா? அவசியமான விக்கெட்களைக் கைப்பற்றுகிறாரா? கேட்சுகளைக் கோட்டை விடாமல் பிடிக்கிறாரா? அவ்வளவுதானே?

ஆனால், அவருடைய குடும்பம் பற்றி, அவருடைய முதல் காதலி பற்றி, அவர் சேர்த்த சொத்து பற்றி, அவருக்கும், அவர் மனைவிக்கும் பிரச்சனையா என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு ஏன் கவலை?

கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே அவர் உங்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்குப் பொறுப்பானவர். மைதானத்துக்கு வெளியே நடப்பது அவருடைய பிரத்யேகமான, அந்தரங்கமான வாழ்க்கை. அதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள், ஆசிரியர்கள் என்று அத்தனை பேருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமை உண்டு.

பேராசிரியர் உங்கள் பிரச்சனைகளுக்குச் சரியானத் தீர்வு தருகிறார் எனும்போது, அவர் அவருடைய வீட்டுக்குள் குடித்தால் என்ன? ஆண்களோடு நட்பாக இருந்தால் என்ன, கயிற்றில் தொங்கினால் என்ன, காற்றில் நடந்தால்தான் உங்களுக்கு என்ன?

அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் சரிவர நிறைவேற்றுகிறாரா என்பதை மட்டும் கவனியுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: அதெப்படி சத்குரு, ஒழுக்கம் இல்லாத ஒருவர் எனக்கு அறிவுரை தர முடியும்? அதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

சத்குரு:

அவரென்ன உங்களையும் தன்னுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லி வற்புறுத்தினாரா? அல்லது குடித்துவிட்டு உங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தாரா? அப்படி ஏதாவது நடந்திருந்தால், அது வேற விஷயம்.

தான் போதையில் இருக்கையில் உங்களுக்கு எந்தத் தர்மசங்கடமும் தரக்கூடாது என்று மறுநாள் வரச்சொல்லி அனுப்பினாரே, உங்களைப் பொறுத்தவரையில் அவரிடம் அதைவிடப் பெரிய ஒழுக்கம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்தவர் விஷயத்தில் அவசியத்துக்கும் அதிகமாக மூக்கை நீட்டுவது மட்டும் எந்த ஒழுக்கத்தில் சேர்த்தி?

Question: அப்படியானால், அவர் செய்வது சரியா?

சத்குரு:

அது வேறு பிரச்சனை. அவருடைய வாழக்கையைப் பற்றி சரியா, தவறா என்று தீர்ப்பு சொல்ல, நான் தயாராக இல்லை. உங்களுக்கும் அது அவசியமில்லை என்கிறேன்.

உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அடுத்தவர் நடக்கவில்லை என்பதற்காக, அவரைக் குறையுள்ளவர் என்று முடிவு கட்ட உங்களுக்கு உரிமையும் இல்லை.

சங்கரன் பிள்ளையின் பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் மாம்பழங்கள் கனிந்து தொங்கின. யாரும் இல்லாத சமயத்தில், சங்கரன் பிள்ளை ரகசியமாக அங்கே புகுந்தார்.

முதல் பழத்தை அவர் பறித்ததும், "கடவுள் உன்னைக் கவனிக்கிறார்" என்று ஒரு குரல் வந்தது.

திடுக்கிட்டார். அக்கம் பக்கம் பார்த்தார், யாரும் இல்லை. பிரமையென்று நினைத்து, அடுத்தடுத்து பழங்களைப் பறித்தார்.

"நான்கு பழங்களுக்கு மேல் கடவுள் சும்மா இருக்க மாட்டார்" என்று மறுபடியும் அதே குரல் கேட்டது.

சங்கரன் பிள்ளை சட்டெனத் திரும்பினார். குரல் வந்த திசையில் ஒரு கிளி உட்கார்ந்திருப்பதைக் கவனித்தார், புன்னகைத்தார்.

"கடவுள் கவனிப்பதாக மிரட்டியது நீதானா?"

"ஆமாம்" என்றது கிளி.

"செல்லக்கிளியே, உன் பெயர் என்ன?"

"தேவதை!"

"கிளிக்கு தேவதை என்று பெயரா? விநோதமாக இருக்கிறதே?" என்றார் சங்கரன் பிள்ளை.

"டாபர்மேன் நாய்க்குக் கடவுள் என்று பெயர் வைத்திருப்பதை விடவா?" என்று திருப்பிக் கேட்டது கிளி.

சங்கரன்பிள்ளைக்கு அங்கே என்ன ஆனது என்பது முக்கியமல்ல. தேவதை என்ற பெயரின் மீதோ, கடவுள் என்ற பெயரின் மீதோ சங்கரன்பிள்ளை சில எதிர்பார்ப்புகளைச் சுமத்தியிருந்தால், அது யார் குற்றம்?

அந்தச் சகோதரி திடீரென்று மாறிவிடவில்லை. அவரைப் பற்றி நீங்கள் வைத்திருந்த பிம்பம்தான் மாறிவிட்டது. கண்ணாடி எதிரே ஒருவர் நிற்கிறார். திடீரென்று கண்ணாடி நொறுங்கிவிட்டது. அதில் தெரிந்த அவருடைய பிம்பம் நொறுங்குமே தவிர, அவரே நொறுங்கிவிட்டார் என்று எப்படித் தீர்மானிப்பது?

நீங்கள் ஒரு மலர்ச் செடியைப் பார்க்கிறீர்கள். அதில் மலர்ந்து மணக்கும் பூக்களை அன்றாடம் பறித்து ரசிக்கிறீர்கள். ஒருநாள் தற்செயலாகக் குனிந்து பார்க்கிறீர்கள். செடியின் வேர்கள் அழுக்கிலும், அசிங்கத்திலும் ஊன்றியிருப்பதைக் கவனிக்கிறீர்கள். உடனே, பூக்களே அருவருப்பாகிவிடுமா?

செடிக்குத் தண்டனை தருவதாக நினைத்து, மணம் மிக்க மலர்களை வேண்டாம் என்று ஒதுக்குவதால் யாருக்கு நஷ்டம்?

அமுதம் தேடிப் போகையில் விஷத்தில் ஏன் கவனம் போகிறது?