சங்கரன்பிள்ளையின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுவாரஸ்யமான கதைகள் சத்குருவின் வாய்வழியாக இங்கே...

சத்குரு:

பேசும் நாய்!

“பேசும் நாய் விற்கப்படும்”- சங்கரன்பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர்,“நாயைப் பார்க்கணும்” என்றார்.

“கொல்லைப்பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன், போய்ப் பாரும்!” என்றார் சங்கரன் பிள்ளை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வந்தவர் கொல்லைப்பக்கம் போய் நாயைப் பார்த்து, ”நீ பேசுவியாமே?”என்று கேட்டார்.

நாயும், “ஆமா, ஆமா!” என்றது.

“உன்னைப்பற்றி சொல்லேன்” என்றார் நாய்ப் பிரியர்.

“சின்ன வயசிலயே என்னால் பேசமுடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடுவிட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கள்ல. எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்ப களைப்பாயிருச்சு. அதனால், விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுகளை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கௌரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறைய குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப்போறேன்” என்றது.

வந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர் ‘‘200 ரூபாய்’’ எனச் சொல்ல, “அப்படியா! 200 ரூபாய் தானா? ஏன் இவ்வளவு மலிவான விலை?’’ எனக் கேட்டார்.

“ஏன்னா, இது நிறைய பொய் பேசும்” என்றார் சங்கரன்பிள்ளை!

கண்ணிலே நீர் எதற்கு?

Sadhguru Story - Kannil neer

மதியம் சங்கரன்பிள்ளை தன் மனைவிக்கு போன் செய்து தன் நண்பனை மாலை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் ஏதாவது செய்து வைக்கும்படியும் கூறினார். அவரது மனைவிக்கோ உடல்நிலை சரியில்லை. இது சங்கரன்பிள்ளைக்கும் தெரியும்.

அப்படி இருந்தும் நண்பனை எதற்காக சாப்பிட அழைத்து வர வேண்டும் என்று மனைவிக்குக் கோபம். முந்தைய நாள் அவர்களது திருமண நாளை முன்னிட்டு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் வேறு முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டார். அந்த வருத்தமே இன்னமும் தீரவில்லை.

இருந்தாலும் கணவனிடம் பயம். எனவே, மனதில் திட்டிக்கொண்டே முதலில் சூப் செய்ய ஆரம்பித்தார். சூப்பில் பாதிக்கு மேல் மிளகாய். எதற்கும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்ப்போம் என்று வாயில் ஊற்றிப் பார்த்தார், ஒரே காரம். அவரால் தாங்க முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது.

சரியாக அந்த நேரம் பார்த்து சங்கரன் பிள்ளை வந்தார். தன் மனைவியின் கண்களில் கண்ணீரைக் கண்டவர், ‘‘ஏன், என்னாச்சு?’’ என்றார். அதற்கு அவர் மனைவி, “என் அம்மா இறந்துபோய் மூன்று வருடமாகிவிட்டது, அவருக்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். அதை நினைத்தேன், கண்களில் நீர் வந்துவிட்டது” என்றார்.

‘‘ஓ, சரி... நானும் சூப் குடித்துப் பார்க்கிறேனே...’’ என்று அப்படியே எடுத்து வாயில் கொஞ்சம் ஊற்றினார். பயங்கரக் காரம். கண்களிலிருந்து கண்ணீர் கொட்டத் துவங்கியது. இப்போது சங்கரன் பிள்ளையைப் பார்த்து அவரது மனைவி கேட்டார், “நீங்களும் என் அம்மாவை நினைத்துதான் கண்ணீர் விடுகிறீர்களா?”

அதற்கு சங்கரன் பிள்ளை, “ஆமாம், அவர் மிகவும் நல்லவர், ஆனால் உன்னைத் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் தனியாகப் போய்விட்டாரே என்று நினைத்தேன், கண்ணீர் வந்துவிட்டது” என்றார்.