பெண்களைப் பற்றி சத்குரு!

சிறு வயதிலிருந்தே தன் வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார் சத்குரு... அது மட்டுமல்லாமல், ஒரு குருவாக, பெண்களுடன் சத்குரு கொண்டுள்ள தொடர்பு என்ன என்பதையும் அவர் இதில் விளக்குகிறார்.
 

சிறு வயதிலிருந்தே தன் வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார் சத்குரு... அது மட்டுமல்லாமல், ஒரு குருவாக, பெண்களுடன் சத்குரு கொண்டுள்ள தொடர்பு என்ன என்பதையும் அவர் இதில் விளக்குகிறார்.

சிறு வயதிலிருந்தே என்னைவிட வயதில் மூத்த பெண்கள் என்னிடம் வெகு நட்பாக இருந்திருக்கிறார்கள். எனக்கு ஏழு, எட்டு வயது இருக்கும்போது, என்னைவிட முப்பது வயது மூத்த அத்தைகள், மாமிகள் போன்றவர்கள் என்னிடம் ஒருவித ஆழமான நட்பு கொண்டிருந்தார்கள்.

என் கொள்ளுப்பாட்டியைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். தனது காலைச் சிற்றுண்டியை எறும்புகள், குருவிகள், அணில்கள் இவற்றுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றின் மொழி தெரிந்தவர்போல் அவற்றுடன் பேசிக் கொண்டு இருப்பார்.

என் கொள்ளுப்பாட்டி எவ்வளவு தூரம் ஆன்மீகத்துடன் ஐக்கியமாகி இருந்தாள் என்பதைத் தியானம் பற்றி அறிந்த பிறகு உணர்ந்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.

என் அம்மாவும் என் வாழ்வில் பெரும்பங்கு வகித்திருக்கிறாள். சமையல் அறையிலிருந்து கழிப்பறை வரை எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பதில் துவங்கி, எத்தனையோ விஷயங்களை வார்த்தைகளால் அறிவுறுத்தாமல், தன் நடத்தையினால் எனக்கு உணர்த்தி இருக்கிறாள்.

மற்றவர்களுக்குத் தாய், சகோதரி, மனைவி, மகள் என்பதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட உறவுகள். நான் ஒருபோதும் எந்த நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளையும் வகுத்துக் கொண்டு உறவுகளை அணுகியது இல்லை.

எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில், தாய்-மகன் என்ற உறவுமுறையைத் தாண்டி ஆழமான உறவு ஒன்று உயிரோட்டமாக இருந்தது. அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. என் மனைவியையும் உறவினள் என்ற எல்லையைத் தாண்டிய உணர்வுடன்தான் பார்த்து வந்தேன். அவளை நான் அம்மா என்று அழைப்பதைப் பார்த்து பலர் விசித்திரமாகவே கருதியிருக்கிறார்கள். என் மகளுக்கும் எனக்கும் இருக்கும் உறவும் அறுதியிட்டு எல்லைகள் இடாத உறவுதான்.

இன்றைக்குப் பல பெண்களுடன் எனக்கு மிக ஆழமானதோர் உறவு இருக்கிறது. ஆண்-பெண் உறவைப் பற்றிப் பேசும்போது, அதைப் பாலுணர்வோடு தொடர்புபடுத்திக் கொச்சையாக மட்டுமே பார்க்கக்கூடிய பலருக்கு, என் வார்த்தைகள் குழப்பத்தை தான் உண்டு பண்ணும்.

அதுவும் குருவாக இருக்கும் ஒருவர், ஒரு பெண் தனக்கு நெருக்கமாக இருப்பதாகச் சொன்னால், அதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவமும், தெளிவும் பலர் மனங்களில் இருப்பதில்லை.

ஆண்-பெண் என்று யாரையும் அவருடைய அங்கங்களுடன் அடையாளப்படுத்தி நான் பார்ப்பதில்லை. என்னையே அவர்களில் பார்க்கிறேன். என்னை எப்படி நடத்துவேனோ, அதேபோல்தான் எனக்கு நெருக்கமாக இருப்பவர்களையும் நடத்துகிறேன். அதே அளவு பிரியமாக... அதே அளவு முரட்டுத்தனமாக...!

குளிப்பது, பாத்ரூம் போவது போல் உடல்ரீதியான வேறுபாடுகள் பேணப்பட வேண்டிய சமயங்களில் மட்டுமே பெண்கள் வித்தியாசப்படுத்திப் பார்க்கப் படுகிறார்கள். மற்றபடி, பெண்கள் என்ற வேறுபாடு பாராட்டாததாலேயே, என்னுடன் இருக்கும்போது, அவர்கள் எந்த அசௌகரியமும் இன்றி நிம்மதியாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வேலை வரும்போது, இதை ஆணிடம் கொடுக்கலாமா, பெண்ணிடம் கொடுக்கலாமா என்று யோசிப்பதில்லை. அந்த வேலைக்குப் பொருத்தமானவர் யார் என்று எனக்குத் தோன்றுகிறதோ, அவரிடம் அதை ஒப்படைக்கிறேன்.

உடல்ரீதியாகப் பலவீனமாக இருப்பதால் பெண்கள் தாழ்ந்து போய்விடுவது இல்லை. மனைவியாக இருப்பதோ, தாயாக இருப்பதோ ஒரு மாபெரும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது அல்லவா?

தாய்மை என்பது சும்மா இனவிருத்தி செய்வதில்லை. அந்த விதத்தில் பெண்கள் அடுத்த தலைமுறையையே உருவாக்கும் மிகப்பெரும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் ஏற்றிருக்கிறார்கள்.

ஒரு கழுகுக்குஞ்சு முதல்முறையாகத் தன் இரையைத் தானே தேடிப் பறந்தது. ஒரு வாத்துக் குஞ்சைக் கால்களால் கொத்தி எடுத்து வந்தது.

"இந்த குஞ்சை நான் கவ்வி எடுத்தபோது, அதன் தாய் முதலில் தன் குஞ்சைக் காப்பாற்ற முயற்சி செய்தாள். முடியாதபோது, மௌனமாக இருந்துவிட்டாள்" என்றது கழுகுக் குஞ்சு.

"அந்த வாத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதை கொண்டுபோய் எடுத்த இடத்திலேயே விட்டுவிடு. வேறு இரை தேடி எடுத்து வா!" என்றது அம்மா கழுகு.

குஞ்சு மறுபடி பறந்து போய், இந்த முறை ஒரு கோழிக்குஞ்சை அள்ளி வந்தது.

"அம்மா! கோழி என்னை எகிறி எகிறி துரத்தப் பார்த்தது. முடியாதபோது, எனக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தது. பேசாமல் விட்டுவிட்டு வந்துவிடலாமா என்றுகூட யோசித்தேன்" என்றது குஞ்சு.

"அந்தக் கோழியால் பிரச்சனை இருக்காது. இதை நீ சாப்பிடலாம்" என்றது தாய்க் கழுகு.

எதற்காகக் கூப்பாடு போடுகிறீர்கள்? உங்கள் இயலாமையை உங்களால் ஏற்க முடியாதபோது, கத்துகிறீர்கள்... கூச்சலிடுகிறீர்கள். சூழ்நிலையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்போது, நீங்கள் கத்துகிறீர்களா? இல்லை.

நல்ல தாய் எப்படி இருக்க வேண்டும்? ஒரு குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல, நல்ல பெற்றோரின் வேலை. அதன் வளர்ச்சிக்கு ஓர் அருமையானச் சூழலை உருவாக்கித் தந்தால் போதும்.

ஒரு பூச்செடியை வளர்க்க வேண்டுமானால், விதையை எப்படிப் போட வேண்டும், எப்படித் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று நிலத்திடம் பேசிக் கொண்டா இருப்பீர்கள்? அதற்கான சூழலை உருவாக்கித் தந்தால் போதும். நிலம் தானாகவே சிறப்பான செடியைப் பூத்துக் காட்டும்.

தங்கள் குழந்தைகள் தங்களைச் சார்ந்து இல்லாமல் வாழும்படி வளர்ப்பவர்களையே நல்ல பெற்றோர் என்று சொல்வேன். அன்பு என்பது விலங்கிட்டுப் பிடித்து வைத்துக் கொள்வதாக இருக்கக்கூடாது. முழுமையான சுதந்திரம் தருவதாக அமைய வேண்டும். மாபெரும் பொறுப்பு இருப்பதாலேயே, பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

உண்மை என்னவென்றால், யாரும் 24 மணி நேரம் ஆணும் இல்லை. 24 மணி நேரம் பெண்ணும் இல்லை. உடல், மனம் இரண்டையும் தாண்டி உள்ளே போனால், உயிர் ரீதியாக அவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது. உங்கள் உள்நிலையில் இருக்கும் உன்னதத்தை உணர்வதற்கு ஆண் என்ன? பெண் என்ன?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1