பழமொழிக்கு சத்குருவின் புதுமொழி!
'நெய்யில்லாத உணவும், திருநீறில்லாத நெற்றியும் பாழ்' என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு விதத்தில் இது உண்மை போலத் தோன்றினாலும், இன்னொரு பக்கம், இதற்கு எதிராக சமூகத்தில் பல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள ஆழமான உண்மையைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
 
 

'நெய்யில்லாத உணவும், திருநீறில்லாத நெற்றியும் பாழ்' என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு விதத்தில் இது உண்மை போலத் தோன்றினாலும், இன்னொரு பக்கம், இதற்கு எதிராக சமூகத்தில் பல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள ஆழமான உண்மையைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

"நெய் இல்லாத உண்டி பாழ்; நீறில்லாத நெற்றி பாழ்!" இதில் ஓரளவு உண்மை இருக்கிறது.

நம் தேசத்தில் காரமான உணவை ரசிப்பவர்கள் அதிகம்; புசிப்பவர்கள் அதிகம்.

காரமான உணவுக்கு ஜீரண உறுப்புகளைத் தயார் செய்வதற்காக, உணவில் முதலில் நெய்யைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் அதனால்தான் உருவானது. வயிற்றின் மிருதுவான உள்பகுதியை மிளகாய் போன்ற வெகுகாரமான உணவு வகைகள் சிதைக்கக்கூடும் என்பதற்காக முதலில் நெய் எடுத்துக் கொள்ளப்பட்டது. நெய் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருக்கையில், ஜீரண உறுப்பு காயமாகாது.

மோசமான உணவுப் பழக்கம் காரணமாக மேற்கத்திய நாடுகளில் குடல் தொடர்பான நோய்கள் அதிகம். உணவு வெகுநேரம் குடலில் தங்கியிருந்தால், இந்த ஆபத்து நேரலாம். பெருங்குடல் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், அது மிக மோசமான நோய்களில் கொண்டுவிடும்.

இயந்திரத்துக்கு எண்ணெய் இடுவது போல், பெருங்குடல் பாதையில் எண்ணெய்ப் பசையை நெய் தருகிறது. குடலில் உணவு தங்காமல், சுலபமாக வெளியேறுவதற்கு உதவி செய்கிறது. அந்த விதத்தில் நெய் ஆரோக்கியத்துக்கு நல்லது.

புருவங்களுக்கு நடுவில் நெற்றியில் பூசும் திருநீறு உங்களை உணரும் ஆற்றலை மேம்படுத்துகிறது. அதற்காக திருநீறு இல்லாத நெற்றியே பாழ் என்பது கேள்விக்குரியது. எதற்கு என்று தெரியாமல், சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதுபோல் நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொள்வதால் மட்டும் உணரும் தன்மை மேம்பட்டுவிடாது.

'உன்னை உணராமல் உன் வாழ்வைப் பாழடித்து விடாதே' என்பதைச் சொல்ல முனைந்து இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆண், பெண் இருபாலருக்குமே, நெற்றிப்புருவங்களுக்கு மத்தியில் திருநீறு இருந்தால், உணரும் தன்மை கூடும்.

முன்பு, ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. குடும்பப் பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள முனைந்தால், எங்கே அவர்களது காதல் உணர்வுகள் குறைந்து போகுமோ என்று ஆண்கள் பயந்தார்கள். அதனால், பெண்கள் நெற்றியில் திருநீறு பூசுவது தவறு என்று விதியமைத்தார்கள்.

கணவனை இழந்த பெண், திருநீறு மட்டுமே பூச வேண்டும் என்று அவளுடைய மற்ற சுகங்களைத் தவிர்க்கவும் முனைந்தார்கள்.

அதற்காக நெற்றியில் திருநீறு இருக்கிறதா, இல்லையா என்பது, வாழ்க்கை பாழா, இல்லையா என்பதை முடிவு செய்யும் விஷயமல்ல. அது உணர்தலை மேம்படுத்தும் ஒரு கருவி. அவ்வளவுதான்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1