"ஒரு வீட்டில் பசு இருந்தால், அந்த வீடு மிகவும் செழிப்பாக இருக்கும், குழந்தைகள் நன்றாக வளர்வார்கள்" என்று சொல்வதுண்டு. இது எதனால்? பசு ஏன் இவ்வளவு புனிதமாகக் கருதப்படுகிறது? இதற்கு சத்குருவின் பதில்...

சத்குரு:

எப்போதும் கிடைக்கும் உணவு...

மனித சரித்திரத்திலேயே, இன்று, உணவு ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில், முன்னர் எப்பொழுதும் அமைந்ததில்லை. உங்களிடம் பணம் இருந்தால், இன்று நீங்கள் எந்த கடைக்கு வேண்டுமானாலும் சென்று, உங்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று, பின்னர் வீட்டை விட்டு வெளியேறவே வேண்டிய அவசியமில்லாமல் வாழலாம். 25, 30 வருடத்திற்கு முன்னர், இப்படி ஒரு விஷயம் சாத்தியமாயிருக்கவில்லை. மனித சரித்திரத்தின் பல ஆயிரம் வருடங்களில், உணவு தான் எப்பொழுதுமே, மனிதர்களிடம் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றது. ஆனால் இப்பொழுதோ உணவு வருடம் முழுவதும், எப்பொழுது வேண்டுமானாலும் கிடைப்பதால், நமது கவனம் வேறு பல விஷயங்களுக்கு செல்கிறது. முன்னர் எப்பொழுதும் இப்படி இருந்ததில்லை.

வீட்டில் ஒரு பசு இருந்தால்...

ஒவ்வொரு கலாச்சாரத்திலும், ஒவ்வொறு சமூகத்திலும், பஞ்சம் என்பது மிகவும் சாதாரணமாக இருந்தது. இந்த கலாசாரத்தில் பஞ்சம் வந்தால், எளிமையான கிராமப்புற மதிநுட்பத்தின்படி, "உங்கள் வீட்டில் ஒரு பசு இருந்தால், உங்கள் குழந்தைகள் உயிருடன் வாழ்வார்கள். உங்கள் வீட்டில் பசு இல்லையென்றால், அவர்கள் இறந்து விடுவார்கள்" - இது அவ்வளவு எளிதானது. அதனால் நமக்கு இயற்கையாகவே, பசு ஒரு தாயைப் போல் ஆனது. பசு நமக்கெல்லாம் ஒரு செவிலித் தாயாக இருக்கிறது. நமது தாயிடமிருந்து நமக்கு முலைப்பால் கிடைக்காதபோது, அடுத்த உணவும் நமக்கு கிடைக்காத பட்சத்தில், பசு எல்லோருக்கும் தாயைப் போல ஆனது. நாம் எல்லோருமே, ஏதோ ஒரு நேரத்தில், பசுவின் பாலால் பேணி வளர்க்கப்பட்டோம். பசு, தனது கன்றுக்குட்டிக்குப் போகவேண்டிய உணவை நமக்கு தந்து, நமது உயிரைப் பேணிக் காப்பதால், அது தூய்மையானதாக கருதப்படுகிறது. நமக்கு இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறது, ஆனாலும் அது கொடுக்கிறதோ இல்லையோ, நாம் எடுத்துக் கொள்கிறோம். அது நம்மை இப்படியெல்லாம் பேணிக் காப்பதால், இது நமது வாழ்க்கையில் இரண்டாவது தாயாக வணங்கப்படுகிறது. அதனால் இந்த கலாச்சாரத்தில், பசுவிற்கு ஒரு புனிதமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பசுவின் உணர்வுகள்...

இன்னொரு காரணமென்னவென்றால், பசுவிற்கு ஒரு மனிதனைப் போல உணர்வுகள் இருக்கின்றன. பசுவிற்கு நமது துயரங்களை உணரும் சக்தி இருக்கிறது. நீங்கள் துயரத்தில் இருந்தால், அதனை உணர்ந்து, நமது வலிக்காக அது கண்ணீர் வடிக்கும். பசுவின் உணர்வுகள் ஒரு மனிதனை ஒத்து இருப்பதனால் தான் நமது இந்தியாவில், பசுவைக் கொல்லக் கூடாது என்கிறோம்.

மக்களுக்கு, பசுவுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால் இப்பொழுது அதெல்லாம் போய்விட்டது. அவையெல்லாம் பால்பண்ணைகளில், பால் கறப்பதற்காக மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கிராமப்புரங்களில், மக்களுக்கு பசுவுடன் நெருங்கிய தொடர்பு இன்னமும் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.