பயம், பயம், பயம் - நின்றால் பயம், தொட்டால் பயம், படுத்தால் பயம் என்று காண்பதிற்கெல்லாம் அலறுவோர் ஏராளம். இதில் பல சமயம், மூத்த தலைமுறை இளைய தலைமுறையிடம் "கொஞ்சம்கூட பயமில்லாம இருக்கியே" என பயத்தையும் புகுத்தித்தான் பார்க்கிறது. முக்கியமாய் இளம் நெஞ்சுக்குள் புகுத்தப்படும் பரிட்சை பயம் சமுதாயத்தை பாடாய் படுத்துகிறது. இதனை எப்படி கையாள்வது? வழி சொல்கிறது இக்கட்டுரை...

Question: சத்குரு நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கிறேன், என் ஞாபக சக்தியை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்? பரிட்சை பயத்திலிருந்து விடுபடுவது எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

பரிட்சை பயமா? பரிட்சை பயமறியாதவரிடம் இந்தக் கேள்வியை நீ கேட்கிறாய்! என் தந்தைக்கு தன் மகனுக்கு பரிட்சை பயமில்லையே என்ற பயம். "இந்தப் பையனுக்கு பயமே இல்லையே இவனை என்ன செய்ய?" என்று அவர் சொல்வார்.

நீங்கள் பள்ளிக்கு செல்வது படிக்கவா? அல்லது எதையாவது நிரூபிக்கவா?

பயம் என்பது ஒருவிதமான நற்குணம் என்று சமூகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. பயம் என்பது நற்குணமல்ல, பயம் இருக்கையில் ஒருவர் மிக அருவருப்பான ஒரு உயிராக மாறிவிடுகிறார். நாம் வாழும் இந்த வாழ்வில் மிக மிக இனிமையற்ற ஒரு அனுபவம் பயமாகத்தான் இருக்கும். நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி, இல்லாத விஷயத்தைப் பற்றியே ஒருவருக்குள் பயம் ஏற்படுகிறது. எனக்கு என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ என உள்ளம் துடிக்கிறது. எனக்குள் பயம் என்றொரு விஷயம் ஏற்படாதது, என் வாழ்வினை மிக இனிமையானதாக மாற்றியிருக்கிறது.

படிக்கவா? நிரூபிக்கவா?

நீங்கள் பள்ளிக்கு செல்வது படிக்கவா? அல்லது எதையாவது நிரூபிக்கவா? இதனை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களை நிரூபிக்க எதையாவது செய்யும்போது, தோல்வி, வெற்றி எனும் வியாதி உங்களை பீடித்துக் கொள்ளும். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளவருக்கு வெற்றியோ தோல்வியோ ஒரு பொருட்டல்ல. அது முயற்சியால் கிட்டிவிடும். ஒருவர் வெற்றி பெற ஒரு நாள் ஆகலாம், மற்றொருவருக்கோ பத்து நாட்கள் பிடிக்கலாம், இன்னொருவருக்கு நூறு நாட்கள் கூட ஆகும். முயற்சி அளிக்கும் கூலி இது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், விடாமுயற்சியே பெருத்த பாடங்களைச் சொல்லித் தரும்.

உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் பள்ளிக்கு செல்வது, எதையோ குப்பைகளை நினைவில் வைத்துக் கொள்ளவல்ல, உங்கள் வாழ்வின் எல்லைகளை விஸ்தரிக்க. உங்களைச் சுற்றியுள்ள இந்த வாழ்வைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான முயற்சியையே அறிவியல், கணிதம், சமூக அறிவியல், பூகோளம் எனும் பாடங்கள் மூலம் செய்கிறோம். அதனை நமக்கு பிடிக்காத வகையில் செய்தாலும், அது வாழ்க்கைதான். உங்கள் வாழ்வின் நோக்கத்தையும் வாழ்வு நடக்கும் விதத்தையும் மேன்மையடையச் செய்ய நீங்கள் எதையோ கற்கிறீர்கள். நீங்கள் கற்பதை நினைவில் வைக்க முயன்றால், அது உங்கள் வாழ்வை எவ்விதத்திலும் மாற்றமடையச் செய்யாது. நீங்கள் செல்வது கற்பதற்காக, கற்பதை கற்றுக் கொண்டீர்கள், கல்லாததை கற்கவில்லை.

காப்பி அடிப்பதா, வேண்டாமா?

உங்கள் திறனை மேம்படுத்துங்கள், Paritchai bhayama vidupada-sila vazhigal

பல இடங்களில் ஆசிரியர்களே மாணவர்களை காப்பி அடிக்க உற்சாகப்படுத்துவதாக நான் கேள்விப்பட்டதுண்டு. வாழ்வின் இந்தக் கட்டத்தில், போலித்தனம் உங்கள் வாழ்வில் புகவேண்டாம் என நினைக்கிறேன். நான் நேர்மையைப் பற்றி பேசவில்லை, வாழ்க்கையோடு உண்மையாக இருப்பதைப் பற்றி பேசுகிறேன். சின்னச் சின்ன விஷயங்களால் நாளை உங்கள் வாழ்க்கையே திசை திரும்ப வேண்டாம் என நினைக்கிறேன். "நான் இப்படித்தான். நான் 35 மார்க் வாங்கினாலும் பரவாயில்லை" என்ற உறுதியுடன் இருக்கும்போது, உங்கள் வாழ்வின் தரம் மேம்படும்.

ஒரு சில மதிப்பெண்கள் கூடவோ குறையவோ பெறுவது பெரிய மாற்றத்தை விளைவிக்கப் போவதில்லை.

இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயித்து விடாது. உங்கள் வாய்மை குணம் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும். அதனால், காப்பி அடிக்க வேண்டாம், சரியா? உங்களுக்கு எதுவுமே தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அங்கே சந்தோஷமாக அமர்ந்துவிட்டு வாருங்கள். கொஞ்சம் யோகா கற்றுக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையும் நீளும், கற்பதற்கு மற்றொரு ஆண்டும் கிடைக்கும். அற்ப காரணங்களுக்காக உங்கள் வாய்மை குணத்தை நீங்கள் இழக்கக் கூடாது. பின்னாட்களில், பெரிய பெரிய விஷயங்கள் தலையெடுக்கும்போது, உங்களால் எழுந்து நிற்க முடியாமல் போய்விடும்.

உங்கள் திறனை மேம்படுத்துங்கள்

ஒரு சில மதிப்பெண்கள் கூடவோ குறையவோ பெறுவது பெரிய மாற்றத்தை விளைவிக்கப் போவதில்லை. நீங்கள் எவ்வளவு கற்றீர்கள், எவ்வளவு கிரகித்துக் கொண்டீர்கள் என்பதே மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பல மாணவர்கள் புத்தகங்களை தின்று அப்படியே வாந்தி எடுத்து விடுகின்றனர். பரிட்சை முடிந்தவுடன், கல்வி வாடையே அவர்கள் மீது வீசாதவாறு சுத்தமாக இருப்பார்கள். இதுபோல் ஆகிவிட வேண்டாம். பள்ளியை விட்டு வெளியேறும்போது, உங்களால் எந்த அளவிற்கு கிரகித்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு நீங்கள் கிரகித்துக் கொண்டிருக்க வேண்டும். அறிவுடையவராகவும், தகுதியுடையவராகவும், போட்டித் திறன் உடையவராகவும் நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறுவதை நான் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் இப்படி வாழும் பட்சத்தில், நாளை நீங்கள் உலக வாழ்க்கையில் கால் பதிக்கையில், உங்கள் வாழ்வில் அர்த்தமுள்ள ஏதோ ஒன்றை உங்களால் செய்ய முடியும்.

ஞாபக சக்தியை பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் செய்வீர்கள், தெரியாததை செய்ய மாட்டீர்கள். நான் எந்தவொரு விஷயத்தையும் ஞாபகத்துக்குள் திணித்துக் கொள்ள விழைவதில்லை. அதனால்தான் எந்த விஷயத்தைப் பற்றியும் இங்கு அமர்ந்துகொண்டு என்னால் உங்களுடன் அளவளாவ முடிகிறது. ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சுமை என்னுள் இல்லை. எவ்வளவு ஞாபகம் வைத்துக் கொள்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, வாழ்வை எவ்வளவு அழகாக, அறிவார்ந்த அணுகுமுறையுடன், போட்டியிடும் திறனுடன் வாழ்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.