சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 3

இந்த வாரம் சேகர் கபூர் அவர்கள் சத்குருவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், பாம்பு, நந்தி, குரு என்று பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். சிறிய கேள்வி, சிறிய பதிலே ஆனாலும் நமக்கு சுவாரஸ்யமான தகவல்களையும் நிஜத்தையும் உணர்த்துகிறது இந்த உரையாடல்...


சேகர் கபூர்: பாம்பு மேற்கத்திய நாடுகளில் திகில் தரும் விஷயமாகவும் ஒரு தீமையான விஷயமாகவும் பார்க்கப்படுகிறதே...?
பாம்பு ஏவாளை அறிவுப்பழம் சாப்பிடத் தூண்டிய பிறகுதான் உயிர்களும் வாழ்க்கையும் உருவாகின. எனவே வாழ்க்கையின் அடிப்படைக்கே எதிராக இருப்பவர்கள்தான் பாம்பை பிசாசின் பிரதிநிதியாகக் கூறுவார்கள்.

சத்குரு: ஆதாம் ஏவாள் கதைப்படி சென்றாலும் கூட அவர்கள்தான் முதல் ஆண், பெண். அடுத்தவருடன் எப்படி உறவு கொள்வது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அப்புறம் பாம்பு வந்தது, அவர்களை அறிவுப் பழத்தை சாப்பிட வைத்தது. உங்களை ஒருவர் அறிவுப்பழம் சாப்பிட வைக்கிறார் என்றால், அவர் உங்களைப் பொறுத்த வரையில் தீய ஆவியா? தெய்வீகமா?

சேகர் கபூர்: தெய்வீகம் என்றுதான் சொல்வேன்.

சத்குரு: பாம்பு ஏவாளை அறிவுப்பழம் சாப்பிடத் தூண்டிய பிறகுதான் உயிர்களும் வாழ்க்கையும் உருவாகின. எனவே வாழ்க்கையின் அடிப்படைக்கே எதிராக இருப்பவர்கள்தான் பாம்பை பிசாசின் பிரதிநிதியாகக் கூறுவார்கள். வாழ்க்கை உருவாகக் காரணமாக இருந்தவர் தெய்வத்தின் பிரதிநிதியாகத்தானே இருக்க முடியும்? நமது கலாச்சாரத்தில் பாம்பை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். இங்கு பாம்பு உருவம் இல்லாமல் ஒரு கோவில் கூட இருக்காது.

இங்கு சிவனின் தலையில்தான் பாம்பு இருக்கிறது, காலடியில் அல்ல. பாம்பு என்பது அடிப்படை சக்திநிலையைக் குறிக்கிறது. சக்திநிலையில் அவர் உச்சத்தை அடைந்துவிட்டார் என்பதைத்தான் அது குறிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சேகர் கபூர்: இந்த நந்தி (தியானலிங்கத்தின் முன்புள்ள நந்தியை சுட்டிக் காட்டி) நான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் பெரியது. அற்புதமாகவும், பிரம்மாண்டமானதாகவும், முரட்டுத்தனம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நந்தி உலோகத்தால் செய்யப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்த நந்தி பற்றி சிறிது சொல்லுங்களேன். இந்த நந்தியை சுற்றி நடக்கும் போது, சில சக்தி அதிர்வுகளை என்னால் உணர முடிகிறது.

சத்குரு: இது மிகவும் தனித்தன்மையான முறையில் செய்யப்பட்டிருக்கிறது. பல சிறிய பகுதிகளாக செய்து அனைத்தையும் ஒன்று சேர்த்திருக்கிறோம். அனேகமாக ஒரு கோவில் நந்தி முதன்முறையாக இப்படி செய்யப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நந்தி எள், மஞ்சள், விபூதி, சில எண்ணெய் வகைகள், மணல், சில மண் வகைகள் என்று சுமார் 20 டன்கள் கொண்ட பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட முறையில் நிரப்பப்பட்டிருக்கிறது. இதனால் இந்த நந்தி ஒருவிதமான சக்தி அதிர்வுகளைக் கொண்டதாக உள்ளது. நந்தியின் அருகில் யாராவது செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சக்தி அதிர்வுகளை வெளிப்படுத்துகிறது.

சேகர் கபூர்: நான் அறிந்த வரையில் நந்தி என்பது சிவனின் வாகனம். சிவனின் வருகைக்காக அது காத்துக் கொண்டிருக்கிறது.

சத்குரு: காலத்திற்கும் காத்திருப்பதுதான் நந்தியின் அறிகுறி. ஏனெனில் இந்தக் கலாச்சாரத்தில் காத்திருப்பது என்பது ஒரு மிகப் பெரிய நற்செயலாகக் கருதப்படுகிறது. வெறுமனே உட்கார்ந்து காத்திருக்கத் தெரிந்தவர் இயல்பாகவே தியானத் தன்மையில் இருப்பார். சிவா நாளை வெளியில் வருவார் என்று நந்தி காத்திருப்பதில்லை. அது வெறுமனே காத்திருக்கிறது, அவ்வளவுதான். இந்த நிலை உள்வாங்கும் தன்மையின் சாரம்.

எனவே நீங்கள் தியானலிங்கத்திற்குள் செல்வதற்கு முன் நந்தியின் இயல்பைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே போய் வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டும். அதைத்தான் இந்த நந்தி சொல்கிறது. உள்ளே போய் அதையும் இதையும் கேட்காதே. என்னைப் போல் வெறுமனே எந்த எதிர்பார்ப்புமில்லாமல் விழிப்புணர்வுடன் உட்கார் என்று சொல்கிறது.

சேகர் கபூர்: நந்தி என்பது ஆணா பெண்ணா?

சத்குரு: இரண்டுமில்லை, நந்தி பூத கணங்களுள் ஒன்று. அதே நேரத்தில் ஆண் தன்மையின் முழு பிரதிநிதியாகவும் பார்க்கப்படுகிறது.

சேகர் கபூர்: இங்கு அனைவரும் உங்களை ஒரு குருவாகப் பார்க்கிறார்கள். குரு என்பவர் யார்? அவருடைய அவசியம் என்ன?

சத்குரு: கு என்றால் இருட்டு. ரு என்றால் போக்குபவர். உங்கள் இருட்டை போக்குபவர் யாரோ அவர்தான் குரு. அல்லது அவர், பயணத்திற்கான ஒரு வரைபடம் போல. உயிருள்ள வரைபடம். திக்குத் தெரியாத நிலப்பகுதியில் வரைபடம் என்பது கடவுளுக்கும் மேலே. அந்த ஒரு வரைபடமாகத்தான், வழிகாட்டியாகத்தான் குரு இருக்கிறார்.

தொடரும்…


அடுத்த வாரம்...

ஈஷாவில் பக்தி கற்றுத் தரப்படுகிறதா? விநாயகரின் பெயர் கணபதியா? கஜபதியா? போன்ற கேள்விகளுக்கு விடை தருவதாக அமைகிறது...