பல் போனால் சொல் போகும், சொல் போனால்..?
சத்குரு சொல்லும் குட்டிக்கதைகளில் சுவாரஸ்யமான இரு கதைகள் இங்கே...
 
 

சத்குரு சொல்லும் குட்டிக்கதைகளில் சுவாரஸ்யமான இரு கதைகள் இங்கே...

சத்குரு:

பல் போனால் சொல் போகும், சொல் போனால்..?

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

யாருக்கு விடுதலை?

யாருக்கு விடுதலை?, yarukku viduthalai

ஒரு நாள் பிரெஞ்சு இளவரசர் அல்ஜீரியா வந்திருந்தார். அப்போது அல்ஜீரியாவில் பிரெஞ்சு ராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்தது. அல்ஜீரிய சிறைகளில் மிகவும் மோசமான குற்றவாளிகள் பல வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். பிரெஞ்சு இளவரசர் இந்த சிறையை பார்வையிட வருவதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சிறைவாசியை விடுதலை செய்யலாம் என்று சிறை நிர்வாகிகள் முடிவெடுத்தனர். சிறைவாசிகள் எல்லாருக்கும் தங்களில் ஒருவர் விடுதலையாகப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. அதனால் ஒவ்வொருவராக இளவரசரிடம் வந்து, எப்படி தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டனர் என்று விளக்கி கூறினர். ஒவ்வொரு சிறைவாசியும் தான் குற்றமே செய்யவில்லை என்பதை விளக்க ஒரு கதை வைத்திருந்தார். ஒரு சிறைவாசி மட்டும் “ஆம் நான் பலரை கொலை செய்திருக்கிறேன். நான் பலரிடம் கொள்ளை அடித்திருக்கிறேன். எனக்கு இப்படித்தான் வாழத் தெரியும், இப்படித்தான் வாழ்ந்தேன்” என்று கூறினார். உடனே இளவரசர், “இப்படிப்பட்ட நேர்மையான மனிதர்களுக்கு நடுவில் இந்த குற்றவாளி என்ன செய்கிறான்? இவனை விடுதலை செய்யுங்கள். இங்கிருக்கும் அனைவரும் குற்றமற்றவர்கள். எதற்கு இங்கே இந்த குற்றவாளி? அவன் இங்கே என்ன செய்வான்? அவன் இங்கு தனியாக இருப்பான். அவனை வெளியே அனுப்பினாலாவது அவனுக்கு பலபேர் துணை இருப்பார்கள்” என்றார்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1