ஒருவர் எப்படி சத்குரு ஆக முடியும்?
சத்குருவுடன் வெகு சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் அவர்கள், தன் மனதில் தோன்றும் கேள்விகளை ஒளிவு மறைவு ஏதுமின்றி சத்குருவிடம் கேட்கிறார். குருவாக மாறுவதை தொழில் வாய்ப்பாக பார்க்கலாமா என்ற அவரது கேள்வியும் அதையே காட்டுகிறது. அதற்கு சத்குருவின் பதில் எப்படி அமைந்தது?! தொடர்ந்து படித்து அறியுங்கள்!
 
 

ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 3

சத்குருவுடன் வெகு சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் அவர்கள், தன் மனதில் தோன்றும் கேள்விகளை ஒளிவு மறைவு ஏதுமின்றி சத்குருவிடம் கேட்கிறார். குருவாக மாறுவதை தொழில் வாய்ப்பாக பார்க்கலாமா என்ற அவரது கேள்வியும் அதையே காட்டுகிறது. அதற்கு சத்குருவின் பதில் எப்படி அமைந்தது?! தொடர்ந்து படித்து அறியுங்கள்!

சித்தார்த்: எங்கள் தலைமுறையினருக்கு இருக்கும் தொழில் ரீதியான வாய்ப்புகள் பற்றி முன்னதாக குறிப்பிட்டீர்கள். இன்று மாலை நாம் சந்தித்ததில் இருந்து என்னையே நான் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு 12 அல்லது 13 வயது சிறுவனாக இருந்தால், உங்களை ஒரு முன் உதாரணமாக பார்த்து, "சத்குரு என்று ஒரு சிறந்த மனிதர் இருக்கிறார், நான் வளர்ந்த பின் அவரைப் போல ஆக வேண்டும்." என்று சிந்திக்கிறேன். எனவே ஒருவர் எப்படி சத்குரு ஆக முடியும்? குரு என்பது ஒரு தொழில் வாய்ப்பாக இருக்க முடியுமா?

ஒரு யோகியாக இருப்பது அற்புதமாக இருக்கிறது, ஆனால் குருவாக இருப்பதோ விரக்தியடைய செய்வதாக இருக்கிறது

சத்குரு: இது ஒரு அமெரிக்கத்தனமான கேள்வி (சிரிக்கிறார்). ஒரு அமெரிக்க பெண்மணி என்னிடம் "சத்குரு கடந்த 5 வருடங்களாக உங்களோடு இருப்பது எனக்கு அற்புதமாக இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு குருவாக அமைந்தது அற்புதமாக இருக்கிறது. நாங்கள் உங்கள் சீடர்களாக இருப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். ஒரு இந்திய மனதால் இப்படி ஒரு கேள்வியை நினைத்தும் கூட பார்க்க முடியாது. அதற்கு நான் "ஒரு யோகியாக இருப்பது அற்புதமாக இருக்கிறது, இதை விடுத்து வேறு ஒன்றை நான் தேர்வு செய்யவும் மாட்டேன். ஆனால் குருவாக இருப்பதோ விரக்தியடைய செய்வதாக இருக்கிறது" என்றேன்.

ஏனென்றால், மிகவும் எளிதான ஒரு விஷயத்தை, ஒரு கணத்தில் உங்களுக்கு புரிய வேண்டிய ஒன்றை, வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான முறையில் நான் சொன்னாலும் நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை (சிரிக்கிறார்). மிகவும் எளிமையான, அடிப்படையான ஒரு விஷயம், ஆனால் வேறு பரிமாணத்தில் இருக்கிறது. நான் எது சொன்னாலும் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தின் மூலம் ஒரு பரிமாணத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் அனுபவத்தின் பரிமாணத்தை தள்ளி வைத்து விட்டு வேறு ஒரு அனுபவ பரிமாணத்தை உங்களுக்கு கொண்டு வருவது என்பது எளிதான ஒன்றாக இருந்தாலும், அனைவருக்கும் இது எத்தனை தொலைவாக தோன்றுகிறது என்பதை பார்க்கும் பொழுது குரு என்பதை ஒரு தொழில் வாய்ப்பாக இன்னொருவர் தேர்வு செய்வதை நான் விரும்ப மாட்டேன்.

மேலும் இது தொழிலாக இருக்க முடியாது. ஏனென்றால், தொழில் என்பது வாழ்க்கைக்கான ஒரு வழி மட்டுமே. உங்கள் வாழ்க்கைக்கான வழி வகையாக மட்டும் இருப்பதை வைத்து மனிதர்களை வாழ்வின் குறிப்பிட்ட பரிமாணங்களில் வழி நடத்த முடியாது. உங்கள் வாழ்க்கையை விட அது மேலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியம். மேலும், இது நீங்கள் தேர்வு செய்யும் ஒன்று அல்ல. உங்களுக்குள் ஒரு விதமான தெளிவு எழும் பொழுது, உங்களுக்குள் ஒரு விதமான திறன் எழும் பொழுது, இயல்பாகவே அது பல வழிகளில் வெளிப்படும். நீங்கள் அதை மறைக்க நினைத்தாலும் அது வெளிப்படும். பிறகு மக்கள் அதை நாட தொடங்குவார்கள்.

உங்களைச் சுற்றி மக்கள் கூடும் பொழுது, துவக்கத்தில் ஒழுங்கு முறை இல்லாமல் செயல்பட முற்படுவீர்கள். முறையாக செய்வது திறம்பட இருக்கிறது என்பதை உணர்ந்து அதை முறையாக செய்ய துவங்குவீர்கள். முறைப்படுத்தும் பொழுது முதலில் எனக்கு கலக்கமாகத் தான் இருந்தது. ஆனால் மக்கள் இதற்காக ஏங்குவதைப் பார்க்கும் பொழுது அந்த படியை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் நிச்சயம் இது ஒரு தொழில் வாய்ப்பு இல்லை, ஏனென்றால் இது ஒரு நல்ல தொழில் இல்லை. (சிரிக்கிறார்)

அடுத்த வாரம்...

சத்குருவின் தனிப்பட்ட சந்தோஷம், அவருக்கென்று தனிப்பட்ட நேரம் இதை பற்றி சித்தார்த்தோடு நாமும் தெரிந்து கொள்ளலாம் அடுத்த வாரம்...

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1