ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?
தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்...
 
ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?, Oru pennukukedarkku rudraksham?
 

தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்...

Question: பல ஆன்மீகத் தலைவர்கள் பெண்கள் ருத்ராக்ஷம் அணிவதை தடை செய்கிறார்கள். ஆனால் இங்கு ஈஷாவில் பெண்களும் ருத்ராக்ஷம் அணிகிறார்களே?

சத்குரு:

இங்கு யாரும் அவர்கள் ருத்ராக்ஷம் அணிவதை கட்டுப்படுத்துவதில்லை. இங்கு எந்த தலைவர்களும் இல்லை. (சிரிக்கிறார்)

நம்முடைய வாழ்க்கையில் பிழைப்பு மட்டுமே முக்கியமான அம்சமாக இருந்தால், பிறகு அந்த சூழ்நிலையை இயல்பாகவே ஒரு ஆண்தான் கட்டுப்படுத்துவான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்புறச் சூழ்நிலைகளும், சமூக சூழ்நிலைகளும் சரியான முறையில் இல்லாமல், எப்போதும் உயிர் ஆபத்தும், பூசல்களும் இருந்து கொண்டே இருந்தால், அங்கு ஆணினுடைய ஆதிக்கம்தான் இருக்கும்.

ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலைகளை அவனால் சிறப்பாகக் கையாள முடியும். ஆனால் சமூகங்கள் வளர்ச்சியடைந்த பிறகு, பிழைப்பு, உயிர்வாழ்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாதபோது, வாழ்வின் மென்மையான அம்சங்களின் பக்கம் நம் கவனம் திரும்பும். அப்போது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது.

ருத்ராக்ஷம் அணிவதை ஆன்மீகத் தலைவர்கள் தடை செய்வதாகச் சொன்னீர்கள். நீங்கள் ஆன்மீகத் தலைவர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, மதத்தலைவர்கள் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் இருக்கும் யாரும் இதைத் தடுப்பதில்லை. சில மதவாதக் குழுக்களில் இதை தடைசெய்கிறார்கள்.

மனிதர்களில் ஆண் வர்க்கம் முழு ஆதிக்கம் செலுத்தி, பெண்கள் அடிமைத்தளையில் மூழ்கி இருந்தபோது, சில வகையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களது வசதிக்காகத்தான் சட்டங்கள் உருவாக்கப்படும், இல்லையா? துரதிருஷ்டவசமாக, இதுதான் மனித இனத்தின் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது.

உலகத்தில் மிகச் சிலர்தான் அனைவரின் நல்வாழ்வையும், மற்ற அனைத்து உயிரினங்களின் நலனையும் பற்றி யோசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராகக் கருதி, தங்களைச் சுற்றியிருக்கும் அனைவரது தேவைகளுக்கும் ஏற்ப சட்டதிட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, பெரும்பாலான மனிதர்கள் எப்போதும் தங்களுடைய வசதிக்காகத்தான் சட்டங்களை இயற்றியிருக்கிறார்களே தவிர, பிறருக்காக அல்ல.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அப்படியென்ன பெரிய பிரச்சனை? அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டது ஒரு பெரிய பிரச்சனை. இன்னொரு பிரச்சனை, அவர்களுடைய புத்திசாலித்தனத்தை அவர்களது ஹார்மோன்கள் மூடி மறைத்து விட்டது.

அவர்களால் ஓர் உயிரை உயிராக மட்டும் பார்க்க முடிவதில்லை. ஆண்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அளவுக்கு ஹார்மோன்களால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் அவள் அவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. 'எப்போது பார்த்தாலும் என் தலைக்குள்ளேயே இருக்கிறாள். அவள் என்னை எதுவும் செய்ய விடமாட்டாள்' என்ற நிலை வந்துவிட்டது. அதனால் அவள் ஒரு மாயப் பிசாசு என்பது போன்ற ஒரு முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

ஒருவருடைய புத்திசாலித்தனம், அவருடைய ஹார்மோன்களாலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே அவள் தூய்மையற்றவள் என்று சொல்லத் துவங்கிவிட்டார்கள்.

பெண்ணின் தூய்மையின்மைக்கும், ருத்ராக்ஷம் அணியக்கூடாது என்பதற்கும் அவர்கள் சொல்லும் முக்கிய காரணம், பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி இருப்பதுதான். உங்கள் தாய் உங்களை கருவில் சுமந்து கொண்டிருந்தபோது, அவருக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை.

அப்படி என்றால் அதுதான் உங்களை உருவாக்கியுள்ளது. அதனால்தான் உங்கள் உடலும் உருவாகியுள்ளது. நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். ஆகவே அவரும் அவரது மாதவிலக்குச் சுழற்சிகளும் அசுத்தமானவையாக இருந்தால், அதிலிருந்து உருவாகியுள்ள நாம் அனைவரும், இந்த மொத்த மனித இனமுமே அசுத்தமானது என்றுதான் சொல்லவேண்டும் (சிரிக்கிறார்).

அப்படிப் பார்த்தால், அசுத்தமானவராக இருக்கும் அனைவருமே தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள கண்டிப்பாக ருத்ராக்ஷம் அணியத்தான் வேண்டும்! இல்லையா?

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

அற்புதமான விளக்கம்!!!!

5 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

great explanation

5 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

s.now i can clear my mother-in laws doubt about wearing rudhrasha
thank u Sadhguru