ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால்தான் முழுமை அடைகிறாளா?

சிலர் தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான விஷயம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். தாய்மை அடையாத பெண்கள் அபசகுனத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையும் ஒருகாலத்தில் இருந்தது. குழந்தை பெறாதவர்கள் முழுமையடையாதவர்கள் என்பதில் உண்மை உள்ளதா? ஆனால், தாய்மை பற்றி சத்குருவிடம் எப்படிக் கேட்கமுடியும்?! அவர் ஒரு ஆண் ஆயிற்றே! ஒரு பெண்ணிற்கு வந்த இந்த ஐயத்தைப் போக்கி பதிலளிக்கிறார் சத்குரு!
 

பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! - பகுதி 8

சிலர் தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான விஷயம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். தாய்மை அடையாத பெண்கள் அபசகுனத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையும் ஒருகாலத்தில் இருந்தது. குழந்தை பெறாதவர்கள் முழுமையடையாதவர்கள் என்பதில் உண்மை உள்ளதா? ஆனால், தாய்மை பற்றி சத்குருவிடம் எப்படிக் கேட்கமுடியும்?! அவர் ஒரு ஆண் ஆயிற்றே! ஒரு பெண்ணிற்கு வந்த இந்த ஐயத்தைப் போக்கி பதிலளிக்கிறார் சத்குரு!

கேள்வியாளர்ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக் கொண்டால்தான் முழுமை அடைகிறாளா? நீங்கள் ஒரு ஆணாக இருப்பதால் உங்களுக்கு தாய்மை உணர்வு பற்றி எந்த அளவுக்கு புரியும்?

சத்குரு:

நான் இல்லை (அனைவரும் சிரிக்கிறார்கள்) உங்களுக்கு அது தெரியவில்லையா? நான் ஒரு ஆண் இல்லை.

கேள்வியாளர்நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். (அனைவரும் சிரிக்கிறார்கள்)

சத்குரு:

ம். (அனைவரும் சிரிக்கிறார்கள்) எந்த ஒரு ஆணும் தான் ஆண் இல்லை எனச் சொல்ல வெட்கப்படுவான் இல்லையா? நான் சொல்கிறேன். நான் ஒரு ஆண் அல்ல. அப்படியானால் நான் ஒரு பெண்ணா? இல்லை. இல்லவே இல்லை. உங்களுக்கு இது ஒரு சிக்கலாகத் தெரிகிறதா? (கூட்டத்தில் சிரிப்பு) ஆணாக இருந்தாலோ, பெண்ணாக இருந்தாலோ அது உடலளவில்தான். "நான் ஒரு ஆண்" அல்லது "நான் ஒரு பெண்" என்று நீங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொன்னால் நீங்கள் உங்களை ஒரு சில உடல் பாகங்களால் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் கொடுக்கிற ஒரு சில உடல் பாகங்களால் நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்.

குழந்தை பெற்றுக் கொண்டால் வாழ்வு முழுயைடையும் என்று இயற்கை உங்களை ஏமாற்றி நம்ப வைக்கிறது. அவ்வளவுதான். சமூகத்திலும் உங்களை இவ்வாறு ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறார்கள்.

இனப்பெருக்கம் செய்வதற்காக இருக்கிற இந்த சில வித்தியாசங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்களை ஒரு சில உடல் பாகங்களாகக் குறைத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் உங்களை ஒரு உடல்பாகத்தால் அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்தால் உங்கள் மூளையையாவது உபயோகப்படுத்துங்கள். ஏன் இனப்பெருக்கம் செய்வதற்கான பாகங்களை உபயோகிக்கிறீர்கள்? (அனைவரும் சிரிக்கிறார்கள்)

நீங்கள் உங்களை ஆணாகவோ, பெண்ணாகவோ அடையாளப்படுத்திக் கொண்ட ஷணத்திலிருந்து உங்களது சுரப்பிகள் உங்களது அறிவுத்திறனைக் கடத்திச் சென்று விடுகின்றன. இந்த உடல்பாகங்களைக் கடந்து வாழ்க்கையைப் பற்றி புரிந்துக் கொண்டுவிட்டால், உங்கள் உடல்பாகங்களால் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்து விட்டால், நீங்கள் ஆண் அல்லது பெண் என்ற எல்லைக்குள்ளேயே இருக்கமாட்டீர்கள். இனப்பெருக்கம் செய்தால்தான் முழுமையடைய முடியும் என்று நினைக்க மாட்டீர்கள். இனப்பெருக்கம்தான் முழுமையானது என்றால் இந்த உலகம் இதுவரை எவ்வளவு முழுமை அடைந்திருக்கும்? (சிரிக்கிறார்) அவ்வாறு நடக்கவில்லை அல்லவா?

குழந்தை பெற்றுக் கொண்டால் வாழ்வு முழுயைடையும் என்று இயற்கை உங்களை ஏமாற்றி நம்ப வைக்கிறது. அவ்வளவுதான். சமூகத்திலும் உங்களை இவ்வாறு ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறார்கள். பல காலங்களாக சமூகங்களில் இவ்வாறு சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். "ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நீ ஒரு பெண்ணே அல்ல. நீ ஒரு மலடி, நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை". இந்தியாவில் ஒரு காலக்கட்டத்தில் குழந்தையில்லாத பெண்ணை யாரும் பார்க்கக் கூட மாட்டார்கள். அவள் எல்லோருக்கும் ஒரு கெட்ட சகுனமாக இருந்தாள். இந்த விஷயங்களின் சுமைகளெல்லாம் இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கிறது. ஒரு சமூக அவப்பெயரே இதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஒரு தடவை இவ்வாறு நடந்தது. ஒருநாள் ஒரு அரசன் காட்டில் வேட்டையாடப் போனார். அது அவருக்கு ஒரு விளையாட்டு, இதைச் செய்ய அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சங்கரன்பிள்ளை, தன் தலையில் ஏதோ ஒரு நோய்தொற்று இருந்ததால் தலையை மழித்துவிட்டிருந்தார். அவர் அரசன் இருந்த அந்தச் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். இந்தியாவின் சில பாகங்களில் மொட்டைத் தலையுடன் ஒருவரைப் பார்த்தால் அது கெட்ட சகுனம் என்று கருதியிருந்தனர். நீங்கள் ஏதாவது வேலையாகப் போனால் அது நடக்காது. இதனால்தான் யாராவது தங்கள் தலையை மழித்துக் கொண்டால் அவர்கள் தலையின் மேல் ஏதாவது தடவிக் கொள்வார்கள். மொட்டைத்தலை ஒரு நல்ல சகுனமல்ல. நீங்கள் பாருங்கள். நான் எவ்வாறு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளேன் என்று... (தன்னுடைய தலைப்பாகையைக் காட்டுகிறார், எல்லாரும் சிரிக்கிறார்கள்)

இந்த அரசன் அந்த மழித்துவிடப்பட்ட தலையைப் பார்த்தவுடன் சொன்னார். "ஓ! என்னுடைய வேட்டை இன்றைக்கு கெடப்போகிறது. அந்த மனிதனுக்கு சாட்டையடிக் கொடுத்து அவனை துரத்தி விடுங்கள். எனக்கு அவனைப் பார்க்க வேண்டாம்" அந்த சிப்பாய்கள் அவனை அடித்துத் துரத்தி விட்டார்கள். அந்த அரசன் வேட்டையாடச் சென்று நன்றாக வேட்டையாடிவிட்டு திரும்பி வந்தான். திரும்ப வந்தவுடன் அந்த அரசருக்கு சங்கரன்பிள்ளையின் மேல் அனுதாபம் ஏற்பட்டது. அவர் சங்கரன்பிள்ளைக்கு ஏதாவது வெகுமானம் தருவதற்கு அவரைக் கூப்பிட்டார். அரசன் சொன்னார், "நான் வருந்துகிறேன். நான் உன் மொட்டைத்தலையைப் பார்த்து விட்டு அது கெட்ட சகுனம் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய வேட்டை மிக நன்றாக அமைந்துவிட்டது. அதனால் நீ எனக்குக் கெட்ட சகுனமாகவில்லை." அதற்கு சங்கரன்பிள்ளை, "ஆமாம், நீங்கள் என்னுடைய மொட்டைத் தலையைப் பார்த்ததனால் உங்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அதனால் நான் கண்டிப்பாக ஒரு கெட்ட சகுனமில்லை. ஆனால் நான் உங்கள் முகத்தைப் பார்த்தேன். அதனால் எனக்குச் சாட்டையடிக் கிடைத்தது" என்றார். (எல்லோரும் சிரிக்கிறார்கள்)

இப்படித்தான் குழந்தையில்லாத பெண் எப்பொழுதுமே கெட்ட சகுனமாக இருந்திருக்கிறார். ஆனால் இனிமேல் இல்லை. தற்பொழுது குழந்தைப்பேறு இல்லாத பெண்கள்தான் இந்த உலகத்திற்கு நல்லது. ஏனென்றால் நமது உலக மக்கள் தொகை எழுநூறு கோடியையும் தாண்டிவிட்டது. பாதி மனித உயிர்கள் கொடிய நிலைமையில் இந்த உலகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் பொறுப்பில்லாமல் இனப்பெருக்கம் செய்கிறார்கள். நிலைமை இந்த மாதிரி இருக்கும்பொழுது குழந்தையில்லாப் பெண்கள் இந்த உலகத்திற்கு ஒரு ஆசிர்வாதம் அல்லவா?

(முற்றும்)


பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1