ஏதோ ஒருவிதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தலைவராகிவிடுவது இயல்பானதுதான். ஆனால், மக்கள் அபிமானம் பெற்றவர்களெல்லாம் நல்ல தலைவராக செயல்படுவதில்லை! ஒரு பெரும் கூட்டத்திற்கு தலைவனாக பொறுப்பேற்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: ஒரு நல்ல தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன? இந்த குணங்களை நான் வளர்த்துக் கொள்வது எப்படி?

சத்குரு:

ஒரு துறையில் நாம் தலைவனாய் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கான முதற்படி: வெறும் வார்த்தைகளாலோ, தந்திரங்களாலோ மனிதர்களை அடிபணிய வைக்க நினைக்காமல், அங்குள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டும். அடிப்படையாக ஒரு தலைவனின் தகுதி என்னவென்றால், அவர் நினைக்கும் வழியில், அவர் நினைக்கும் இலக்கை நோக்கி மக்களை வழிநடத்தும் திறன்தான். இது நடக்கவேண்டும் என்றால், தாங்களாகவே அவர்கள் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செல்வதற்கு நீங்கள் தூண்டுதலாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல், தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து, அவர்களை வேலை வாங்கவேண்டி இருக்கிறது என்றால், தலைவனாய் இருப்பது பெரும் பாடாக ஆகிவிடும்.

ஒரு துறையில் நாம் தலைவனாய் இருக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கான முதற்படி: வெறும் வார்த்தைகளாலோ, தந்திரங்களாலோ மனிதர்களை அடிபணிய வைக்க நினைக்காமல், அங்குள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டும்.

நீங்கள் வழிநடத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அல்லது ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நீங்கள் பழக நேரம் இல்லாமற் போகும்போது, நீங்கள் அவர்களை வழிநடத்துவது மிகமிகக் கடினம். அந்த நிலையில் நீங்கள் அளிக்கும் ஊக்கமும் உதாரணமும் மட்டுமே அவர்களுக்கு ஆர்வத்தை அளித்து வழிநடத்தும். தொடர்ந்து கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவைப்படும் மனிதர்களை உங்களால் வழிநடத்திச் செல்லமுடியாது. நீங்கள் எதிர்பார்க்கும் செயலை செய்வதற்கான ஊக்கம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்களை நீங்கள் வழிநடத்தமுடியும். அவர்கள் சரியான அளவில் ஊக்கம் பெற்றிருந்தால், உங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி செயல்படுவார்கள். அப்போதுதான் தலைமையேற்று நடத்துவது என்பது ஒரு எளிய செயலாக இருக்கும்.

மக்களை இந்த அளவிற்கு ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படச் செய்ய வேண்டுமெனில், முதலில் நீங்கள் அவ்வாறு இருக்கவேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக செயல்படும்போது, இயல்பாகவே மற்றவரும் உங்களுக்குத் தோள் கொடுத்து, அதைச் செய்வதற்கு முன்வருவர். இது நடக்காவிட்டால், அங்கு தலைமை என்று எதுவும் இல்லை.