ஒரு மனிதனுக்கு எது முக்கியமான பொறுப்பு?
கல்வி, தொழில், திருமணம், சேவை என நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்புகள் வைத்திருப்போம். நம் வாழ்வில் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு என்று சத்குரு எதைச் சொல்கிறார்? தொடர்ந்து படியுங்கள்...
 
 

கல்வி, தொழில், திருமணம், சேவை என நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்புகள் வைத்திருப்போம். நம் வாழ்வில் செய்ய வேண்டிய முக்கியமான பொறுப்பு என்று சத்குரு எதைச் சொல்கிறார்? தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

எதையோ சாதிப்பதால் மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, இயல்பாகவே மகிழ்ச்சியாக இருந்தீர்கள். மகிழ்ச்சியாக இருக்க அப்போது எந்த காரணமும் தேவைப்படவில்லை. உண்மையில் அதுதான் உங்கள் தன்மை. ஒவ்வொரு ஷணத்திலும், ஒவ்வொரு செயலிலும், நாம் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஏனெனில், நம் இயல்பான தன்மையே அதுதான். உங்களுக்குத் தத்துவங்கள், கடவுள்கள், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சியைப் பற்றி யாரும் கற்றுத்தரவில்லை.

உங்களுடைய உள்தன்மை மாறினால் மட்டுமே, உங்களுக்கு உண்மையான நலன் ஏற்படும் என்பதை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நீங்கள் தெளிவாகப் பார்த்திருக்க முடியும்.

உங்கள் இயல்பான தன்மைக்குப் புறம்பாக செல்லும்போது, நீங்கள் எங்கும் போய் சேரமுடியாது. மகிழ்ச்சியாக இருப்பது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. மகிழ்ச்சியாக இருப்பது வாழ்வின் அடிப்படையான தன்மை. நீங்கள் மகிழ்ச்சியாகக் கூட இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு என்ன செய்துவிடப் போகிறீர்கள்?

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, வாழ்க்கையின் மிகச் சிறந்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்க முடியும். ஒரு மனிதனுக்கு முதலும் முக்கியமுமான பொறுப்பு என்னவென்றால், அவன் மகிழ்ச்சியாக இருப்பதுதான். நீங்கள் வாழ்வில் தொழில், பணம், பதவி, கல்வி, சேவை என்று எதை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும், அதன் மூலம் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற உணர்வு இருப்பதால்தான் அப்படிச் செய்கிறீர்கள்.

இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான். ஆனால் மகிழ்ச்சியைத் தேடி நாம் செய்யும் செயல்களால் இன்று இந்த பூமியின் இருப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

இயல்பாகவே நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது, அதாவது மகிழ்ச்சிக்காக ஏதும் செய்தாக வேண்டும் என்ற தேவை இல்லாதபோது, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணமும் மாறிவிடும். நீங்கள் வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை மிகவும் மாறிவிடும்.

எந்த ஒரு வேலையையும் எந்த எதிர்பார்ப்புடனும் செய்ய மாட்டீர்கள். ஒரு செயல் செய்யும்போது, அதிலிருந்து ஏதாவது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நடந்தாலும் நடக்காவிட்டாலும் அது உங்களை பாதிக்கப் போவதில்லை. ஏனெனில், நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில், உங்கள் செயல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உயர்ந்துவிடும்.

உங்களுடைய உள்தன்மை மாறினால் மட்டுமே, உங்களுக்கு உண்மையான நலன் ஏற்படும் என்பதை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நீங்கள் தெளிவாகப் பார்த்திருக்க முடியும். நீங்கள் தற்போது உடுத்தியிருக்கும் உடையோ, கற்ற கல்வியோ, குடும்பப் பின்னணியோ, வங்கி இருப்போ உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதில்லை. மாறாக, உங்கள் வாழ்க்கையின் தரம் நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு சாந்தமாக, ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகவே இருக்கிறது.

உங்களுக்கு ‘உள்ளே’, உண்மையான, மதிப்புமிக்க விஷயம் எதுவும் நிகழவில்லை என்றால், உங்களால் இவ்வுலகிற்கு எந்தவொரு பிரமாதமான விஷயத்தையும் செய்ய முடியாது. உங்களின் ஒவ்வொரு செயலிலும், உங்கள் உள்தன்மைதான் வெளிப்படப் போகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை. எனவே நீங்கள் உலகின் மீது உண்மையான அக்கறை கொண்டவராக இருந்தால், உங்களை ஆனந்தமான மனிதராக மாற்றிக் கொள்வதுதான், நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1