குரு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை அறியாத சிலர், தங்களுக்கு நான்கைந்து குருக்கள் இருப்பதாக சொல்கிறார்கள்! உண்மையில், அவர்கள் சொல்பவர்களெல்லாம் குருவாக உள்ளனரா? ஒரு குருவுடன் இருக்கும் அனுபவம் எப்படிப்பட்டது? யார் குரு என்பதை கண்டுகொள்ள சில அறிகுறிகளை சத்குரு இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, இன்றைய காலக்கட்டங்களில் நாங்கள் நிறைய ஆன்மீக குருமார்களை பார்க்கிறோம். ஒரு ஆன்மீக பாதையில் நடையிடும் சாதகராக ஒரு குருவை எப்படி நான் கண்டுகொள்வது?

சத்குரு:

உங்கள் வாழ்க்கையில் ஒரு குருவை, ஒரே ஒரு குருவை நீங்கள் சந்தித்தால் உண்மையில் நீங்கள் பாக்கியசாலி. நிறைய குருமார்களை நீங்கள் எப்படி சந்தித்திருக்க முடியும்? எனக்குத் தெரியவில்லை. பகவத்கீதையின் இரண்டு அத்தியாயங்களை படித்து கதை சொன்னவர்கள் எல்லாம் இன்று குருமார்களாகி விட்டார்கள். பைபிளில் ஒரு அத்தியாயத்தை படிப்பவர்கள் எல்லாம் குருமார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதுபோன்ற இதிகாசங்களையும், புராணங்களையும் பாதி படித்திருந்தாலே அவர்கள் குருமார்கள் என்கிறார்கள். நீங்கள் அந்த விதமாக பேசுகிறீர்கள் என்றால் அது வேறு விஷயம். உலகில் நடப்பவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை யார் உங்களுக்குத் தந்தாலும் அவர்கள் உங்களுடைய குருமார்கள் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். காலம் முழுவதும் பலர் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இல்லையா? ஆனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கே எந்த அளவு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

குரு என்பவர் இதமான மனிதராக இருக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரது நோக்கம் உங்களுக்கு மிகவும் இனிமையானவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரது நோக்கம் உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுதான். உங்களை உறங்கச் செய்வது அல்ல.

இந்த நாட்டில் இன்னமும் பாதி மக்கள் அவர்களுடைய அரை வயிற்று உணவுக்குக் கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரண மனிதராக வாழ்வது எப்படி என்பது கூட நமக்குத் தெரியவில்லை. எனவே நீங்கள் குரு என்று சொல்லும்போது இப்படி ஆறுதல் தருபவர்களையும் சேர்த்துதான் குரு என்று சொல்கிறீர்கள். ஆறுதலைத் தரக்கூடியவர்களை ‘சாதுக்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்கள் ஒருவிதமான இதமான சூழலில் இருக்கிறார்கள். இதமான மனிதர்கள் அவர்கள். சாதாரணமான மனிதர்களை விட அவர்கள் இதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல நோக்கங்களும், இதமான தன்மையும் உங்களை ஒரு குருவாக ஆக்கிவிடாது. அவர்களை ‘சாதுக்கள்’ என்றோ ‘புனிதமானவர்கள்’ என்றோ சொல்லலாம்.

ஒரு குரு என்பவர் இதமானவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. என்னைப் பாருங்கள் நான் அப்படியா இருக்கிறேன்? குரு என்பவர் இதமான மனிதராக இருக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரது நோக்கம் உங்களுக்கு மிகவும் இனிமையானவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரது நோக்கம் உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுதான். உங்களை உறங்கச் செய்வது அல்ல. நான் உங்களிடம் மிகவும் இனிமையானவனாக இருந்தால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக தூங்கிப்போய் விடுவீர்கள். ஒரு குரு என்பவர் உங்களுடைய அடிப்படை அம்சங்களை ஆட்டிப் பார்ப்பவராக இருக்க வேண்டும். உங்களுடைய எல்லா முடிவுகளையும் அசைத்துப் பார்ப்பவராக இருக்க வேண்டும். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவர் அசைத்துப் பார்க்க வேண்டும். அவர் உங்களை தூங்கிப்போக அனுமதிக்கக்கூடாது.

ஒரு குரு என்பவர் ஆறுதலை தரக்கூடியவர் அல்ல. உங்களுடைய விடுதலை நோக்கி உங்களை அழைத்துச் செல்ல உங்களுக்கு துணைபுரிபவர்தான் அவர். இப்போது இந்த உலகத்தில் உங்களுக்கு ஆறுதல்தான் தேவையென்றால் ஒரு குருவை தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆறுதலை தருவதற்கென்று சில மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை தேடிப் போகலாம். உங்களுக்குள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால் மட்டும்தான் ஒரு குருவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் மாற்றமடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்தான் ஒரு குருவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து வாழ்வின் இன்னொரு பரிமாணத்திற்குள் நீங்கள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்குள் இருந்தால்தான் ஒரு குருவை தேடிச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஏக்கம் உங்களுக்குள் இன்னும் வரவில்லையென்றால் நீங்கள் குருவைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு சினிமாவிற்கோ அல்லது ஏதோ நல்ல உணவு சாப்பிடவோ அல்லது ஒரு கடற்கரைக்கோ செல்லலாம். அது உங்களுக்கு உதவும்.

என்னுடைய குருவை எப்படித் தெரிந்து கொள்வது? உங்களுடைய குருவை நீங்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை. உங்களுக்குள் ஆழமாக ஏக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அறியாமையின் வலி ஆழமாகும்போது உங்கள் வாழ்வில் குரு தென்படுகிறார். நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அப்படியே பார்த்தாலும் எப்படி அவரை அடையாளம் கண்டு கொள்வது? நீங்கள் அவருடன் அமர்ந்திருக்கும்போது உங்களுக்குள் உள்ள எல்லாமே அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது. நீங்கள் அவரை விட்டு ஓடிவிட நினைக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒன்று உங்களை மீண்டும் மீண்டும் அவரிடமே இருக்கச் செய்கிறது. உங்களுக்கு அங்கே இருக்க விருப்பமில்லை. ஆனால் உங்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று அவர் இருக்கும் திசையை நோக்கி மீண்டும் மீண்டும் ஈர்க்கிறது. அப்படியிருந்தால் அவர்தான் உங்கள் குரு. அவரால் நீங்கள் அச்சுறுத்தப்படாமல் மிகவும் சௌகரியமாக இருப்பதாக உணர்ந்தால் அவர் உங்களுடைய குரு அல்ல. ஒருவேளை அவர் உங்கள் நண்பராக இருக்கலாம். ஒரு நல்ல மனிதராக இருக்கலாம். அவருடைய ஆசிர்வாதத்தை வேண்டுமானால் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் உங்களுடைய குருவாக அவர் இருக்க முடியாது.

நீங்கள் தேர்ந்தெடுத்தால் எப்படிப்பட்ட ஒன்றைத் தேர்ந்தெடுப்பீர்கள்? எதை நீங்கள் எப்போதுமே விரும்புகிறீர்கள்? உங்கள் அகங்காரம் எப்படி சௌகரியமாக இருக்கிறதோ அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் அகங்காரத்தை ஓட்டைப்போடும் விஷயங்களை நீங்கள் விரும்புவதில்லை. உங்கள் அகங்காரத்திற்கு யார் ஆதரவாக இருக்கிறாரோ அவர்தான் உங்கள் நண்பர். உங்கள் அகங்காரத்தை யார் துளையிட்டுக் கொண்டிருக்கிறாரோ அவர் உங்கள் எதிரியாகிவிடுகிறார், இல்லையா? எனவே உங்களுடைய அகங்காரத்திற்கு யார் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர் ஒரு நல்ல குருவல்ல. நீங்கள் அவருடன் அமர்ந்திருக்கும்போது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இருந்தாலும் அவரை நோக்கி ஈர்க்கப்படுகிறீர்கள். அப்படியென்றால் அவர்தான் உங்கள் குரு.