நிலையான ஆனந்தம்... உறவிலா? உள்நிலையிலா?
உங்களுக்கென்று உறவுகள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, மனிதர்கள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, பணம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, வேலையிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, உங்களால் இயல்பாகவே ஆனந்தத்தில் இருக்கமுடியும்.
 
நிலையான ஆனந்தம்... உறவிலா? உள்நிலையிலா?, Nilaiyana anandam uravila ulnilaiyila?
 

சத்குரு:

எல்லா உறவுகளையுமே மனிதர்கள் பற்றுக்களாகத்தான் பார்க்கிறார்கள். குறிப்பாக, பாலியல் சார்ந்த உறவுகளில் இந்தப் பற்று அதிகமாகவே இருக்கிறது. பற்று என்பது அறியாமையின் வெளிப்பாடு. இதற்கு அடிப்படைக் காரணம் உங்கள் உடலோடு உங்களை நீங்கள் ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுதான். எனவே, இரண்டு மனிதர்களின் உடல் சார்ந்து ஓர் உறவு அமைகிறபோது அந்தப் பற்று இன்னும் ஆழமாகிறது. ஆன்மீகப் பாதையின் ஒரு பரிமாணம் பிரம்மச்சரியம் குறித்துப் பேசுகிறது. ஆன்மீகம் உறவுகளுக்கோ, உடல் சார்ந்த இன்பங்களுக்கோ எதிரானதல்ல. ஆனால், இவையெல்லாம் பற்றினை ஆழப்படுத்தும் என்பதுதான் விஷயம். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பற்று இன்னொருவர் மீதல்ல. உங்கள் உடலின் மேல் உங்களுக்கிருக்கும் ஆழமான பற்று உங்களை இன்னொருவர் மேல் பற்று வைக்கச் செய்கிறது. உங்கள் உடல் மீது உங்களுக்கு பற்றில்லாத பட்சத்தில் இன்னொருவர் மேல் உங்களால் பற்று வைக்க முடியாது. எனவே, மற்றவர்கள் மேல் இருக்கும் பற்றை அகற்ற நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் உடல்மீது உங்களுக்கிருக்கும் பற்றை அகற்றினால் போதும். இந்த விடுதலை அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்கும்.

35 வயதைத் தாண்டும்போது உடல் இன்பத்தைவிட நேசம், அன்பு போன்ற உணர்வுகளே முக்கியம் என்று கருதுகிறீர்கள். உணர்வுகளும் உங்களைப் பிணைக்கத் தொடங்கும்போது கடவுளை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்குகிறீர்கள். ஏனென்றால் மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் எவ்வித உறவுகளை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லாதது போல் தோன்றினாலும், சிலருக்கு அவரவர் வாழ்வை சரிவர நடத்த இத்தகைய துணைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய உறவுகள் இல்லையென்றால் பெரும் பதட்டத்திற்கு ஆளாகிவிடுவார்கள். ஒரு சிலர் லௌகீக வாழ்விற்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாமல், ஆன்மீக வாழ்விற்கும் தங்களை ஆயத்தபடுத்திக் கொள்ளாமல் தடுமாறக்கூடும். அவர்களுக்கு இத்தகைய உறவுகள் பெரும் துணையாக அமையும்.

உங்கள் வாழ்வில் நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கேற்ப உறவுகள் உங்களுக்கு துணைசெய்யும். இளமைப்பருவத்தில் உடல்மீது உங்கள் பற்று மிக ஆழமாக இருக்கிறது. வயதாக வயதாக உங்கள் பற்று உடலிலிருந்து மனதுக்கோ, உணர்வுக்கோ தாவுகிறது. உடல் மீதான பற்று மெல்லமெல்லக் குறைகிறது. ஏனெனில் வயது ஏறஏற உடல் மரணத்தை நோக்கிச் செல்கிறது. இதை முழு விழிப்புணர்வோடு நீங்கள் உணர்கிறீர்களோ, இல்லையோ வாழ்க்கையை உங்கள் விருப்பங்கள் திசைமாற வழிகாட்டுகிறது. உங்கள் கொள்கைகள், தத்துவங்கள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை நோக்கி நகர்கிறது. இளமைப்பருவத்தில் உடல் சார்ந்த சுதந்திரத்தை விரும்பியிருப்பீர்கள். பிறகு 35 வயதைத் தாண்டும்போது உடல் இன்பத்தைவிட நேசம், அன்பு போன்ற உணர்வுகளே முக்கியம் என்று கருதுகிறீர்கள். உணர்வுகளும் உங்களைப் பிணைக்கத் தொடங்கும்போது கடவுளை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்குகிறீர்கள். ஏனென்றால் மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள்.

எப்படியாவது வாழவேண்டும் என்கிற வேட்கை உங்களுக்குள் இருக்கிறது. ஒன்றைப் பற்றுகிறீர்கள், அது பலவீனமடைகிறபோது இன்னொன்றைப் பற்றுகிறீர்கள். அதுவும் பலவீனமாகிறபோது எதைப் பற்றுவது என்று தெரியாத அச்சத்திலேயே மரணம் வந்து சேர்கிறது. அப்போது அச்சம் ஒன்றே மிச்சமாக இருக்கிறது. அதுவரை கடவுளின் பெயரை உச்சரித்து வந்தவர்கள் அச்சம் வரும்போது கடவுளையும் மறந்து விடுகிறார்கள். வாழ்வில் வசதிக் குறைவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறையாகத்தான் பலரும் கடவுளைப் பயன்படுத்துகிறார்களே தவிர ஆன்மீகத் தேடல் காரணமாய் கடவுளை நாடுவதில்லை. சொர்க்கம் என்பது சந்தோஷம் என்று சொல்லப்பட்டதால் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறீர்கள். சொர்க்கமே துன்பமயமாக இருக்கும் என்று சொல்லியிருந்தால் சொர்க்கத்திற்குப் போக விரும்பமாட்டீர்கள். எனவே, கடவுளைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு பலரும் மகிழ்ச்சியைத்தான் தேடுகிறார்கள்.

உங்கள் உள்நிலையைக் கையாளத் தெரியாததால் வெளிச்சூழலின் துணையை பாலியல் உறவுகள் வழியே நாடுகிறீர்கள். இது தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தரமானதல்ல. உங்கள் அச்சங்களையும், போராட்டங்களையும் கையாள வேறு வழியில்லை என்று நினைக்கிறீர்கள். இனப்பெருக்கம் என்பது உலகின் நியதி. பூக்கள் மலர்வதைப் பார்த்து ஒருவருக்கு கவிதை எழுதத் தோன்றுகிறது. ஆனால், பூக்கள் மலர்வதே இனப்பெருக்கத்திற்காகத்தான். அவற்றின் நிறங்களும், மணங்களும் அதற்கான தந்திரங்கள்தான். இந்த உலகில் நீங்கள் மேற்கொள்ளும் பாலியல் உறவும் இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது அது ஒருவிதமான குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. உடல் சார்ந்த அளவில் உங்களையே முழுமையாக இன்னொருவருக்குத் தருகிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக பலருக்கும் இதுதான் மிக உயர்ந்த பகிர்தலாக இருக்கிறது. வேறெவரோடும் பகிர்ந்து கொள்ள முடியாததை குறிப்பிட்ட இந்த மனிதரோடு பகிர்ந்து கொள்வதால் பரஸ்பரம் ஒரு நெருக்கம், ஒரு வலை இருவரிடையே பின்னப்படுகிறது. இதுவும் ஒருவகையான தந்திரம்தான். ஏனெனில் அதே உறவை இன்னொருவரோடு பகிர்ந்துகொண்டால் அது மோதலை ஏற்படுத்துகிறது. இந்த உறவு உங்களுக்குள் நிரந்தரமான நிறைவை ஏற்படுத்தாது. வாழ்வை ஒருவிதத்தில் கையாள உதவுமே தவிர விடுதலை தராது.

உங்கள் உள்நிலையைக் கையாளத் தெரியாததால் வெளிச்சூழலின் துணையை பாலியல் உறவுகள் வழியே நாடுகிறீர்கள். இது தற்காலிகமான தீர்வே தவிர நிரந்தரமானதல்ல. உங்கள் அச்சங்களையும், போராட்டங்களையும் கையாள வேறு வழியில்லை என்று நினைக்கிறீர்கள்.

உறவுகளின் விசித்திரமான இயல்பே, மூன்றாவது மனிதரிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ளக் கூடிய உண்மைகளை உங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என்பதுதான். ஈஷாவின் பாவ ஸ்பந்தனா வகுப்புகளில் யாராவது உறவினர் இருந்தால், அவரோடு தம் ரகசியங்களை பெரும்பாலானவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எல்லோருக்குமே இந்த தந்திரம் தெரியும். உங்கள் வெளிச்சூழலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நான் முடிவு செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த செயலின் விளைவை மகிழ்ச்சியோடு ஏற்க உங்களால் முடிந்தால் மட்டுமே அத்தகைய செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். மாறாக அந்த விளைவுகளுக்காக அழப்போகிறீர்கள் என்றால் அத்தகைய செயல்களைச் செய்ய உங்களுக்கு உரிமையில்லை. இன்று திருமண வாழ்வின் மகிழ்ச்சி உங்களுக்குத் தெரிகிறது. நாளை அதன் வலி தெரியக்கூடும். அது நோயாக வரலாம், கருத்து வேறுபாடாக வரலாம், மரணமாக வரலாம், குழந்தை வடிவில்கூட வரலாம். ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் அதன் விளைவை மகிழ்வோடு ஏற்கிற மனநிலை இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் மட்டுமே அந்த செயலை மேற்கொள்ளுங்கள்.

உறவுகளை இன்னதென்று வரையறுக்கும் அவசியம் கூட இல்லை. இரண்டு பேரிடையில் உண்மையான அன்பு இருக்கிறதென்றால் அது கணவன்-மனைவி உறவாகட்டும், பெற்றோர்-குழந்தை உறவாகட்டும், நண்பர்கள் மத்தியிலான உறவாகட்டும், குரு-சிஷ்ய உறவாகட்டும் அவற்றை வரையறை செய்யவேண்டிய தேவையில்லை. அன்பு தொலைந்து போகிற இடங்களில்தான் வரையறைகளும், விளக்கங்களும் வேண்டியிருக்கின்றன. சமூகச்சூழல் கருதி இருவரிடையிலான உறவை வரையறை செய்து அறிவிக்க வேண்டி வரலாம். ஆனால், உண்மையான அன்பு நிலவுமேயானால் அந்த இருவரிடையில் வரையறைகளுக்கும், விளக்கங்களுக்கும் வேலையில்லை. பரஸ்பரம் அன்பு நிலவாத இடங்களில் விளக்கங்கள் மட்டுமே அவர்களை ஒன்றாக வைத்திருக்கின்றன. இது ஒரு வசதி கருதி மட்டும்தான்.

அதற்காக தாம்பத்ய வாழ்க்கையே இப்படித்தான் என்றில்லை. ஆனால் பலருக்கும் இந்த நிலைதான். பலரும் தங்கள் வாழ்க்கைத் துணைவரை "என் உயிர்த்துணை" என்கிறார்கள். இது அவ்வளவு எளிதில்லை. அத்தகைய உறவுகள் வெறும் உடல் துணைகளாகவும், உணர்வுத் துணைகளாக மட்டுமே இருக்கின்றன. ஒருவரோடு நெருங்கியிருப்பதென்றால் உடல்ரீதியான பகிர்தல்தான் உடனே உங்கள் நினைவுக்கு வருகிறது. ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை அவருக்கு உங்கள் உடலைத்தான் வழங்க முடியும் என்று கருதுகிறீர்கள். சிலர் உணர்வுரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கலாம். சிலர் அறிவுரீதியாக உங்கள் தேடல்களுக்கு ஈடுகொடுக்கலாம். திருமணபந்தம் மகிழ்ச்சியாகவோ, சிக்கல் மிக்கதாகவோ இருப்பதற்கும், உங்கள் ஆன்மீகத் தேடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆன்மீகம் என்பது உள்நிலையில் நிகழ்வது. உறவுகளுக்கான தேவைகள் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வேறுபடுகிறது.

ஒருகாலத்தில் நம் நாட்டில் 70% பேர் திருமணபந்தத்திற்குள் நுழைந்தார்கள். 30% பேர் துறவு வாழ்வை மேற்கொண்டார்கள். ஒருவேளை அவர்களுக்கு இளமைப்பருவத்தில் சில போராட்டங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களுக்குரிய பாதையை சுதந்திரமாகத் தேர்வு செய்தார்கள். எப்போதுமே சமூகத்தில் 30% - 40% பேர் பாலியல் தேடல்கள் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலருக்கு தீவிரமான பாலியல் வேட்கைகள் இருப்பதுபோலவே, சிலருக்கு அத்தகைய தேவைகள் இல்லாமலும் போகின்றன. எனவே, உறவு வாழ்க்கையோ, துறவு வாழ்க்கையோ உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, சமூக நியதிகள் சார்ந்து முடிவெடுக்கக் கூடாது. உணர்வுரீதியாக யாரையாவது சார்ந்திராவிட்டால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்கிற தவறான போதனை உங்கள் மனதிற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிர்பந்தங்களால் பலர் அத்தகைய உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

திருமண வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டு காலம் முழுவதும் மோதல்களிலும், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதிலும் பலர் தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். திருமணத்தில் ஏதோ தவறு என்று பொருளல்ல. அவர்கள் மனமுதிர்ச்சியில்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம். உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற செயல்முறையில் புனிதம் சேர்த்ததின் விளைவாகத்தான் திருமணம் என்கிற அமைப்பே உருவானது. மேற்கண்ட தேவைகள் இல்லையென்றால் திருமணத்தை நீங்கள் தவிர்த்துவிடலாம்.

நீங்கள் எதைச் செய்தாலும் அதன் விளைவை மகிழ்வோடு ஏற்கிற மனநிலை இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் மட்டுமே அந்த செயலை மேற்கொள்ளுங்கள்.

தங்களுக்கு திருமணம் தேவையா? இல்லையா? என்பதை பலரும் யோசிப்பதே இல்லை. ஆட்டுமந்தைகள் போல் நடந்து கொள்கிறார்கள். "மற்றவர்களுக்கு மணமாகிறது எனவே நானும் மணம் செய்து கொள்கிறேன்" என்கிறார்கள். மூன்று நாட்களுக்கு மேல் அவர்களால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க முடிவதில்லை. ஒருவருடைய 25-வது திருமணநாள் கொண்டாடப்பட்டது. அன்று அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "திருமண வாழ்க்கையை நினைத்துப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறீர்களா?" என்று அவர் மனைவி கேட்டார். அவர் சொன்னார், "உன் தந்தை ஒரு நீதிபதி. உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஏதாவது வழக்கில் என்னை கைது செய்து 25 ஆண்டுகள் சிறையில் அடைப்பேன் என்றார். அதற்கு நான் துணிந்திருந்தால் இன்று விடுதலை கிடைத்திருக்கும். அதை நினைத்துதான் அழுதேன்" என்றார். திருமணம் என்பது இரண்டு பேர் இணைந்து வாழ்வதற்கு வழங்கப்படுகிற வாய்ப்பு. முறையாக வாழ்ந்தால் அது மகிழ்ச்சியானதாக அமையும். ஆனால் மனமுதிர்ச்சியில்லாமல் வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை தோல்விமயமாக்கிக் கொள்கிறார்கள். ஒன்று முழு முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது மற்றவரிடம் முழுமையான அன்பில் சரணடைபவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மணவாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். இரண்டும் இல்லாமல் சமூக நியதிக்காக சேர்ந்து வாழ்பவர்கள், ஒருவர் வாழ்வை ஒருவர் சீரழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

காதலர்களாக இருக்கிற காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோர்களையும் எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. ஒருவரையொருவர் பயன்படுத்த நினைப்பதால் ஒருகாலத்தில் மிக அற்புதமான மனிதராக உங்கள் கண்களுக்குத் தெரிந்தவர் மிக மோசமான மனிதராக இப்போது தெரிகிறார். எந்த செயலை செய்தாலும் அதற்கென்று ஏற்படக்கூடிய விளைவுகளையும் முன்கூட்டியே யோசித்துப் பார்க்கிற மனிதராக நீங்கள் இருந்தால் இத்தகைய இடர்பாடுகள் ஏற்படாது.

பலரும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை குறித்து கேட்பதுண்டு. உள்நிலையில் மகிழ்ச்சியிருந்தால் அது வெளிப்படும். உங்களுக்குள் சில தன்மைகளை நிலைநிறுத்திக் கொண்டால்தான் உங்களால் ஆனந்தமாக இருக்க முடியும். உங்கள் உடல் உங்கள் முழு கட்டுப்பாட்டில் இருக்குமேயானால் உங்கள் வாழ்வின் 30% உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் மனமும் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் உங்கள் வாழ்வு, உங்கள் விதி ஆகியவற்றை 60% நீங்களே நிர்ணயிக்கமுடியும். உங்கள் சக்திநிலையும் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் உங்கள் வாழ்வையும், விதியையும் முழுமையாக 100% உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். உங்கள் பிறப்பையும், இறப்பையும் நீங்களே முடிவு செய்யமுடியும்.

எனவே உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்திநிலை ஆகியவற்றில் முழு ஆளுமை செலுத்தக் கற்றுக்கொண்டால் ஆனந்தம் இயல்பாக ஏற்படும். உங்களுக்கென்று உறவுகள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, மனிதர்கள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, பணம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, வேலையிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, உங்களால் இயல்பாகவே ஆனந்தத்தில் இருக்கமுடியும். ஏனெனில் வெளியிலிருந்து நீங்கள் ஆனந்தத்தைப் பெறுவதில்லை. மற்றவர்களால் நீங்கள் எதையும் பெறுவதில்லை. நீங்கள் வருத்தமாக இருக்கிறீர்களென்றால் அதற்கு மோசமான உறவு காரணமல்ல. அந்த உறவை நீங்கள் கொண்டு செலுத்துகிற விதம்தான் உங்கள் வருத்தத்திற்குக் காரணம்.

உங்களுக்கென்று உறவுகள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, மனிதர்கள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, பணம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, வேலையிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, உங்களால் இயல்பாகவே ஆனந்தத்தில் இருக்கமுடியும்.

அதற்காக வாழ்வியல் உண்மைகளை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென்று பொருளில்லை. வெளிச்சூழல்களுக்கு ஒரு தாக்கம் உண்டு. அந்தத் தாக்கம் உங்களைத் தொட அனுமதிக்கிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. உங்கள் உடல், மனம், சக்திநிலை ஆகியவற்றின் மீது உங்களுக்கு ஓரளவு ஆளுமையிருந்தால் அவை உங்களை பாதிக்காது. அதற்காக யாராவது மரணமடைந்தால் நீங்கள் கைகொட்டி நடனமாட வேண்டும் என்று பொருளில்லை. சுனாமியில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். அதற்காக நாம் ஆர்ப்பரித்து அதைக் கொண்டாடவா முடியும்? ஆனந்தம் என்பது உள்நிலையில் இருக்கும் ஓர் இணக்கமான தன்மையைக் குறிக்கும். அது எந்த பாதிப்பிற்கும் ஆளாகாது.

இந்தக் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு முனிவர் இருந்தார். அவர் நதியில் நீராடியபோது ஒரு தேள் மிதந்து வந்தது. அதை எடுத்து கரையில் விடப்போனார். அது கொட்டியது. கையை உதறினார். மீண்டும் நீரில் விழுந்தது. இதுவே பலமுறை தொடர்ந்தது. "அதை விட்டுவிட வேண்டியதுதானே?" என்று சீடர்கள் கேட்டனர். "தேள் தன்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறது, நான் என்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறேன்" என்றார் முனிவர். வெளிச்சூழல்களால் பாதிக்கப்படாத தன்மையில் இருப்பவர்களுக்குத்தான் அது சாத்தியம். எனவே உங்கள் ஆனந்தம் அடுத்தவர்கள் தந்து வருவதாய் அமையக்கூடாது.

யாரோ ஒருவர் எப்போதோ ஒரு நகைச்சுவைத் துணுக்கைச் சொல்கிறார். நீங்களும் சிரிக்கிறீர்கள். அதற்காக வினாடிக்கு வினாடி யாராவது உங்கள் வாழ்க்கை முழுவதும் நகைச்சுவைத் துணுக்குகளை சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்திற்குப் பிறகு உங்களுக்கு எரிச்சல் வரும். எல்லாமே இப்படித்தான். இசை, நடனம், அன்பு, உறவுகள் எல்லாமே ஓர் எல்லையைத் தாண்டிப் போனால் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் உங்கள் தன்மை உங்களுக்கு ஒருபோதும் எரிச்சலை ஏற்படுத்தாது.

எனவே ஆனந்தமாய் இருப்பதை உங்கள் தன்மையாகவே கொள்வீர்களென்றால், உறவுகளை ஆனந்தத்தின் தேடலுக்காக பயன்படுத்த மாட்டீர்கள். வெளியே ஆனந்தத்தைத் தேடுவதை விட்டு, உங்களையே ஆனந்தத்தின் ஊற்றாக உருவாக்கிக் கொள்வீர்களேயானால், இந்த மகத்தான மாற்றம் உங்களை சுதந்திரமானவராக ஆக்கும். உங்கள் வாழ்வில் எவ்விதமான நிர்பந்தங்களும் இருக்காது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1