இவ்வுலகில் பலர் பிரச்சனைகளுக்கு காரணமாகத்தான் இருக்கிறோமே தவிர, தீர்வுக்கு மூலமாக இருப்பதில்லை. அப்படி வாழாமல், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நம் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக பயன்படுத்திட சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...

சத்குரு:

இன்றைய உலகில் நம் வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டப் பந்தயம் (ரிலே ரேஸ்) போன்று உள்ளது என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்துக்கொள்ள வேண்டும். நம் கையில் ஒருவர் கொடுக்கும் அந்த தடியை வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நாம் சுமந்து செல்கிறோம். நமக்கு யாரோ ஒருவர் கொடுத்தார், நாம் சில காலம் வைத்திருப்போம், நம் நேரம் முடிந்ததும் இன்னொருவரிடம் கொடுத்துவிட்டுச் செல்வோம். நாமே எல்லாம் என்று நாம் சிந்திக்க துவங்கிவிட்டால், ஓடும் தடத்தை விட்டு விட்டு தடம் மாறிச் சென்று விடுவோம்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு கருவியாய் கொண்டு, நீங்கள் பிரச்சனைகளுக்கு ஊற்றாக இல்லாமல், தீர்விற்கு ஊற்றாக இருக்க வேண்டும்!

வாழ்க்கை என்பது ‘நான் தனியாக ஓடும் ஓட்டப் பந்தயமல்ல, ஒரு தொடர் ஓட்டப் பந்தயம்‘ என்பதை ஒருவர் புரிந்துகொண்டுவிட்டால், நம் வாழ்க்கை மிகச் சிறியது என்பதை நாம் உணர்ந்து விட்டால், இந்த சிறிய பயணத்தை நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், ஆனந்தமாகவும் செய்வோம் அல்லவா?

உங்களைச் சுற்றி வாழும் உயிர்களிடத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துங்கள். இது மிக மிக முக்கியம். நீங்கள் கால் பதிக்கும் இந்த பூமியுடன், இந்த மரங்களுடன், இந்த பசுமைப் பரப்புடன், இந்த விலங்குகளுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது, உங்கள் மன வளர்ச்சிக்கும் உங்கள் உடல் வளர்ச்சிக்கும் மிக மிக உறுதுணையாய் இருக்கும்.

இவ்வுலகுடன், இங்குள்ள உயிர்களுடன், இந்த விலங்குகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் இயல்பான நிலையாய் இருக்கும். உடலளவில் மட்டுமல்ல நமக்குள் சமநிலை ஏற்படவும் இது உறுதுணையாய் இருக்கும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு கருவியாய் கொண்டு, நீங்கள் பிரச்சனைகளுக்கு ஊற்றாக இல்லாமல், தீர்விற்கு ஊற்றாக இருக்க வேண்டும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.