'நன்றி மறப்பது நன்றன்று' என்று வள்ளுவர் சொல்கிறார்; அதற்காக, 'ரொம்ப தேங்க்ஸ்', 'மிக்க நன்றி!' என்று சொல்லிக் கொண்டே இருப்பதுதான் நன்றியை வெளிப்படுத்தும் விதமா? நன்றியை வெளிப்படுத்தும் விதம் குறித்து இங்கே சத்குரு பேசுகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று நான் அந்த கடிதத்தை பெற்றேன். அது ஒரு நன்றிக் கடிதம். ஒருவர், தன் நன்றியை எனக்கு வெளிப்படுத்தி இருந்தார். தினசரி எனக்கு இதுபோன்ற நன்றிக் கடிதங்கள் வந்தவாறு உள்ளன.

நன்றியை வெளிப்படுத்துதல் என்பது பழக்கதோஷமே! “நன்றி, நன்றி, நன்றி” என்று பதறுபவர்களிடமிருந்து எல்லாம் நன்றி பிரவாகமாக பொழிகிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். “நன்றி, என்னை மன்னித்து விடுங்கள், நான் உன்னை காதலிக்கிறேன்” இவையெல்லாம் வெறும் பழக்க தோஷங்கள் என்று சொல்லலாம்! ஆனால் ஒரு கணம் நன்றியுணர்வோடு இருத்தல் என்பது ஒரு அளப்பரிய சாத்தியம். அந்த ஒரு கணம் உங்கள் வாழ்வையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஆனால் “நன்றி, நன்றி, நன்றி” என நீங்கள் ஓராயிரம் முறை உச்சரித்தாலும் கூட அது உங்களுக்கு எதையும் வழங்கப் போவதில்லை. ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்வதால் உங்கள் குரல்வளம் வேண்டுமானால் குறைந்து போகலாம்.

நன்றியுணர்வு என்பது ஒரு குணம் அல்ல. ஆனால் இன்றோ மேற்கத்திய நாடுகளில் இது ஒரு வழக்கமாகிவிட்டது. தொட்டதற்கு விட்டதற்கு எல்லாம் நன்றி, நன்றி என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நம் பாரதத்தில் அவ்வாறு இல்லை. மேற்கத்திய கலாச்சாரத்தில் உங்கள் தாய் உங்களுக்கு ஏதோ ஒன்றை வழங்கினால் அதற்கு நீங்கள் நன்றி கூறுவீர்கள். ஆனால் இங்கோ என் தாய் எனக்கு செய்யும் ஒரு செயலுக்கு நான் நன்றி கூறினால் அவர் அதை ஒரு அவமரியாதையாகவே பார்ப்பார்.

எனவே நன்றியுணர்வு என்பது ஒரு தத்துவம் அல்ல, போதனை அல்ல, அது நீங்கள் வாழும் முறையாகவே ஆகிவிட வேண்டும். உங்கள் ஒவ்வொரு மூச்சும் நன்றியுணர்வோடு துடிக்க வேண்டும். இதனை நீங்கள் ஒரு தத்துவமாக மாற்றும்போது மெல்ல மெல்ல அது அசிங்கமானதாகிவிடும். உங்கள் உள்ளிருந்து பொழிய வேண்டிய நன்றியுணர்வு கொச்சையாக வெளிப்படும். எனவே நீங்களே நன்றியுணர்வாக மாறுங்கள், அது உங்களிலிருந்து பிரவாகமாக பொழியட்டும்!

Love & Grace