நான் பயிற்சிகளைச் செய்யும்போது மனம் சிதறுகிறது. என்ன செய்ய?
ஷாம்பவி பயிற்சி செய்யும்போது, வாழ்வில் கடைசி செயலாக எதைச் செய்வோமோ அதைச் செய்வதுபோல் பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லி இருந்தீர்கள். ஆனால், நான் பயிற்சிகளைச் செய்யும்போது மனம் சிதறுகிறது. ஏதாவது அட்வைஸ் கொடுங்களேன்?
 
 

Question:ஷாம்பவி பயிற்சி செய்யும்போது, வாழ்வில் கடைசி செயலாக எதைச் செய்வோமோ அதைச் செய்வதுபோல் பயிற்சி செய்யுங்கள் என்று சொல்லி இருந்தீர்கள். ஆனால், நான் பயிற்சிகளைச் செய்யும்போது மனம் சிதறுகிறது. ஏதாவது அட்வைஸ் கொடுங்களேன்?

சத்குரு:

நீங்கள் அழிவற்றவரா?

இயற்கையையும், இந்தப் படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் பார்க்கும்போது, நம் இறப்பு, பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும். ஆனால், படிப்பு தலைக்கு ஏறியவுடன் நமக்குள் ஒருவிதமான வேகம் புகுந்து கொள்கிறது. அத்தனை தகவல்கள் உங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நான் அழிவுடையவன் என்ற அடிப்படை சிந்தனை கூட மறக்கடிக்கப்பட்டு விடுகிறது.

நீங்கள் உயிரோடு இருப்பதன் மகத்துவத்தை அறிந்துகொண்டால் மட்டுமே, நீங்கள் எதைச் செய்தாலும் உங்களை முழுமையாக அந்தச் செயலிற்குக் கொடுப்பீர்கள்.

இன்று உலகில் அதிகளவிலான மரணங்களுக்கு காரணம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். அதாவது, 30 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நோய்கள் இதனால் நிகழ்கின்றன. இந்தக் கணக்கின்படி இன்றைய பொழுது 50,000 இதயங்கள் துடிப்பதை நிறுத்திக் கொள்ளும். வேறுசில இதயங்களை உந்தச்செய்து துடிப்பூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனாலும், அது சொல்பேச்சு கேட்காமல் துடிப்பதை நிறுத்தும். வேறு சிலரோ அமைதியாக உயிர் இழப்பர்.

தற்சமயம் நம் இதயங்களெல்லாம் துடிக்கின்றன. ஆனால், அடுத்த கணமும் துடிக்கும் என்ற உறுதி இருக்கிறதா என்ன? மரித்துப் போனவர்களும் இன்று நாம் இறப்போம் என நினைத்திருப்பார்களா என்ன? அவர்களுக்கும் வாழ வேண்டும் என்ற கனவு இருந்திருக்கும், வாழ்க்கையைப் பற்றி திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், திடீரென இதயம் நின்றதே! உங்கள் உயிர் மீது சிறிது கவனம் செலுத்தினால், அது எளிதில் இறக்கக் கூடியது என்பதை உணர்வீர்கள். பல சூழ்நிலைகளில், இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் மடிந்து போகின்றனர். நானும், நீங்களும் இன்னும் இருக்கத்தானே செய்கிறோம். வாழ்வு நடக்கும் விதத்தை, உயிர் நடக்கும் விதத்தை நாம் சுவைப்போம் வாருங்கள். இந்த நினைவு நம் உள்ளங்களில் இருக்கும் அதே சமயத்தில், நாம் அழிவுடையவர்கள், நமக்கு அழிவுண்டு என்ற நினைவும் நமக்குள் இருக்கட்டும்.

நீங்கள் நிரந்தரமில்லாதவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், ஷாம்பவி அல்ல, நீங்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும், செய்யும் கடைசி செயல் போல் அல்லவா செய்ய வேண்டும்? நான் செய்யும் இந்தச் செயல், நான் செய்யும் கடைசி செயல் எனப் பாருங்கள் - இதனை நினைவூட்டிக் கொள்ளும்போது அழவேண்டாம், அதனுடன் உணர்வுகளை இணைத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு கணமும் இதனை நினைவூட்டிக் கொள்ளுங்கள். உங்கள் படைப்பின் ஒரு அம்சமான மரணத்துடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள். அதனுடன் விழிப்புடன் வாழப் பழகாவிட்டால், என்றோ ஒருநாள் மரணம் உங்கள் வழி வருகையில் அது உங்களை மிரட்டும், நீங்களும் அரண்டு போவீர்கள். அதுவே நீங்கள் ஒவ்வொரு கணமும் விழிப்பாய் இருந்தால், உயிருடன் வாழ்வதே வானுயரத்திற்கு மதிப்புடையதாய் இருக்கும்.

ஷாம்பவி பயிற்சியை உங்கள் வாழ்வின் கடைசி விஷயம் போல் செய்வது, அதைச் செய்து உங்களை நீங்களே கொன்று கொள்ளுங்கள் என்பதற்காக அல்ல. அதனை கடைசி விஷயத்தை செய்வதுபோல் செய்ய சொல்வதற்கு காரணம், உங்கள் உயிர் பற்றிய உங்களது கண்ணோட்டம் மிகுந்த மதிப்புடையதாய் ஆகிவிடும். உங்கள் உயிருக்கு நீங்களே மதிப்பளிக்காதபோது, காலையில் எழுவது எதற்காக, எழுந்தவுடன் உண்ணாமல் காத்திருந்து யோகா செய்வதெல்லாம் எதற்காக? அதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா என்ன? நீங்கள் இங்கு உயிர் வாழ்வதன் மகத்துவத்தை உணர்ந்தாலே ஒழிய, உச்சக்கட்ட சாத்தியத்தை நோக்கி நடைபோடுவீர்களா என்ன?

செய்யும் செயலில் ஈடுபாடு...

நீங்கள் உயிரோடு இருப்பதன் மகத்துவத்தை அறிந்துகொண்டால் மட்டுமே, நீங்கள் எதைச் செய்தாலும் உங்களை முழுமையாக அந்தச் செயலிற்குக் கொடுப்பீர்கள். இல்லாது போனால், நீங்கள் செய்யும் செயலில் ஈடுபாடு என்பதே இருக்காது. நீங்கள் செய்யும் செயலில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்குக் காரணமே, நீங்கள் இந்தப் பூமியில், இங்கு உயிரோடு இருப்பதன் அருமையை உணரவில்லை என்பதால்தான். அதன் அருமை புரிந்திருந்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அத்தனை ஈடுபாடு இயல்பாகவே இருக்கும். ஒருவர் எத்தனைக்கு எத்தனை தன்னை ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அத்தனைக்கு அத்தனை அவரது வாழ்க்கை சுவை மிகுந்ததாக இருக்கும். வங்கியில் பணம் இருந்தால் உலகைச் சுற்றி வரலாம், வாழ்வின் சுவை அறிய வேண்டும் என்றால் ஈடுபாடு மட்டுமே கைகொடுக்கும்.

இங்கு வாழும் ஒவ்வொரு உயிரும் வாழ்வைச் சுவைப்பதற்காகவே வாழ்கின்றன. வாழ்வைச் சுவைப்பதற்கான ஒரே வழி ஈடுபாடு. உங்களுடன் உள்ள சில மனிதர்களை உங்களுக்கு பிடிக்காமல், "மிக சரியான" மனிதர்களுடன் வாழ்வதற்காக நீங்கள் காத்திருந்தால், அந்த "மிகச் சரியான" மனிதர்களுடன் வாழ்வதற்கும் எத்தனை பிரச்சனை என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாய் பார்ப்பீர்கள். நீங்கள் கடவுளைப் பார்க்கும்போது அதிக ஈடுபாடு கொள்வதற்காகக் காத்திருக்கலாம். ஆனால், அதுவரை உங்களுடன் வாழும் மனிதர்களுடன் ஈடுபாடு கொள்ளுங்கள். சூழ்நிலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, அது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதோ இல்லையோ, ஈடுபாடு கொள்ளுங்கள்.

ஈடுபாடு என்றால்...

ஈடுபாடு என்று சொல்லும்போது, பிறர் செய்வதையே நீங்களும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈடுபாடு என்றால், நீங்கள் எதையும் தட்டிக் கழிக்காமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஏதோ ஒரு செயலைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நீங்கள் இருக்கும் விதம், வாழும் விதம் அவ்வாறு இருக்க வேண்டும். வாழ்வில் பரிபூரண ஈடுபாடு கொள்ளும்போது, ஒவ்வொரு கணத்திலும் புதிதாய் ஒரு வாசல் திறக்கும், வழி பிறக்கும். நாளை காலை ஷாம்பவி மகத்தான ஒரு அனுபவமாய் விடியும். ஆனால், ஷாம்பவி செய்யும்போது கிடைக்கும் அற்புதமான அனுபவம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாளும் புதுப்புது சாத்தியங்கள் உங்களுக்கு திறக்கப்படுவதே முக்கியம். ஈடுபாடு கொள்ளுங்கள், வாழ்க்கை முழுமையாய் திறக்கட்டும்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
2 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

shambo....

2 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

nice message