Question: சத்குரு, நான் பண வசதியில்லாதவன், நான் எவ்வாறு தான தர்மங்கள் செய்யமுடியும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

தான தர்மம் செய்கிறேன் என்று நினைத்து நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தை மற்றவர்களுக்கு வினியோகிக்கலாம். அல்லது சூழ்நிலைக்குத் தேவையாக இருக்கிறது என நினைத்து பணத்தை வழங்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் தான தர்மத்தை கேவலமாகவே நினைக்கிறேன். ஏனெனில் எங்கு அன்பு இல்லையோ அங்கு மட்டுமே தான தர்மம் இருக்க முடியும். தங்கள் சொந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்தால் அதை தான தர்மம் என சொல்லிக் கொள்வார்களா? ஆனால் தெருவிலுள்ள ஒரு ஏழைக் குழந்தைக்கு ஏதாவது செய்து விட்டால் பெருமிதம் அடைகிறார்கள். தானமோ தர்மமோ செய்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அந்தக் குழந்தை மேல் அவர்களுக்கு அன்பு இல்லை. அவனுடைய முன்னேற்றத்திற்கு தானும் ஒரு பொறுப்பு என அவர்கள் நினைக்கவில்லை. எனவேதான் அவனுக்கு செலவழிப்பதை ஒரு பரந்த மனப்பான்மை கொண்ட செயலாக கருதிக் கொள்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் சூழ்நிலைக்கு உதவும்படியாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் சூழ்நிலைக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருப்பது என்பது வேறு. ஒருவருக்கோ அல்லது ஏதாவது ஒரு செயலுக்கோ பொறுப்பு ஏற்கும்போது, அந்த சூழ்நிலைக்கு ஏதோ ஒரு வகையில் உதவ நினைப்பீர்கள். செய்வதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என நினைப்பீர்கள். உதவ அதிக வாய்ப்புகள் கிடைக்கும்போது மேலும் மேலும் திருப்தி அடைவீர்கள். நம் வாழ்க்கை முழுவதிலுமே இப்படி நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு உதவியாக ஏதாவது ஒரு வகையில் இருக்க முடியும். பணமாக கொடுப்பதை மட்டுமே உதவி என்று நினைக்கத் தேவையில்லை.

ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். ஒரு திருமணத்திற்கு செல்கிறீர்கள். நன்றாக உடை உடுத்தி சென்றீர்கள். அது அந்த சூழ்நிலைக்கு உதவியாக இருந்தது. இதுவே நீங்கள் அலங்கோலமாக உடை உடுத்தி சென்றிருந்தால் அந்த சூழ்நிலை வேறுவிதமாக இருந்திருக்கும். நல்ல உடையை தேர்வு செய்தீர்கள், ஏனெனில் அந்த சூழ்நிலைக்கு உதவியாக இருக்க விழிப்புணர்வுடன் முடிவு செய்தீர்கள்.

இது போல வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் சூழ்நிலைக்கு உதவியாக நீங்கள் செய்ய முடியும். இதுபோன்ற சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையில் கிடைத்துக் கொண்டே இருக்கும். அவற்றை பூரணமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். எனவே யாருக்காவது பணமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. ஒரு பேருந்து ஓட்டுனரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எவ்வளவு உபயோகமானவர். பேருந்து ஓட்டுனர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? நீங்கள் பேருந்தில் உட்கார்ந்திருக்கும்போது, இந்த மனிதருக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதா என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? உங்கள் பெற்றோர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட இந்த ஓட்டுனர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அவர் பேருந்தை ஓட்டும்போது நீங்கள் உங்கள் உயிரை அவர் கையில் ஒப்படைத்துவிடடு பேருந்தில் தூங்குகிறீர்கள்.

நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முழுமையாக உணர்ந்தால் அவர் பேருந்து ஓட்டும் செயலை எவ்வளவு அற்புதமாக உணர்வார்? ஆனால், ஊதியம் கொடுக்கிறார்கள், அதற்காக ஓட்டுகிறேன் என்று அவர் நினைக்க முடியும். ஆனால் சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதாக நினைத்து ஓட்டும்போது அந்த செயலின் தன்மையே முழுக்க மாறிவிடுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் சூழ்நிலைக்கு உதவும்படியாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். அப்படிச் செய்யும்போது உங்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே ஒரு பெரிய வித்தியாசத்தை உணர்வீர்கள். எனவே ஒவ்வொரு சூழ்நிலையையும் பயன்படுத்தி மேன்மையான வாழ்க்கை வாழமுடியும்.