பலருக்கும் அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களே பெரும் பிரச்சனையாகி, அவர்களைத் துரத்துகின்றன. சிலர் தூய்மையான எண்ணங்களை உருவாக்க முயற்சித்து மனநோயில் விழுகிறார்கள். மனதில் உருவாகும் எண்ணங்களின் அடிப்படையை புரிந்துகொண்டு, நம் எண்ணத்தை ஒரு கத்திபோல் ஆக்குவதற்கு இங்கே சத்குரு சொல்லும் சில குறிப்புகள் நல்ல பலனளிக்கும் என்பது நிச்சயம்!

Question: நமது எண்ணங்களைத் தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு எண்ணம் அழுக்காக இருக்கமுடியும் என்று யார் உங்களுக்கு சொன்னது? ஒரு எண்ணம் என்பது வெறும் எண்ணம் மட்டுமே. அது தூய்மையானதும் அல்ல, அழுக்கானதும் அல்ல. நீங்கள் ஏற்கெனவே சேகரித்து வைத்துள்ள தகவல்களிலிருந்தும், உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்களிலிருந்தும், உங்களுக்குள் நீங்களே சேகரித்துக் கொண்ட விஷயங்களிலிருந்தும்தான், உங்களது ஒவ்வொரு எண்ணமும் எழுகிறது. இந்த அடிப்படைகளிலிருந்து ஏற்படும் எண்ணங்கள் தவிர, வேறு புதிய எண்ணம் உங்களுக்கு நிகழ்வதே இல்லை. இதே எண்ணங்களைக் கூட்டிக் கழித்து புதிய கலவையான எண்ணங்களை வேண்டுமானால் நீங்கள் உருவாக்கலாம். ஆனால், வேறு புதிய எண்ணம் உங்களிலிருந்து வருவதேயில்லை. ஏனெனில் “எனது மனம்” என்று நீங்கள் கூறுவது உண்மையில் உங்களது மனம் அல்ல. சமூகத்தின் குப்பைத் தொட்டிதான் உங்கள் மனம். உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரும், உங்கள் தலைக்குள் அர்த்தமற்ற குப்பையை வீசிவிட்டுச் செல்கின்றனர். எதை வாங்கிக் கொள்வது அல்லது எதைத் தவிர்ப்பது என்னும் தேர்வு உங்களிடம் இல்லை. “எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, எனக்கு அவரிடமிருந்து எந்தக் குப்பையும் வேண்டாம்”, என்று உங்களால் கூறமுடியுமா? அது சாத்தியம்தானா? உங்களுக்கு யாரைப் பிடிக்கவில்லையோ, அவர்தான் உங்கள் மனத்திற்குள் அதிகமான குப்பையை வீசிவிட்டுச் செல்வார். ஆகவே “எனது மனம்” என்று நீங்கள் கூறுவது எதுவோ, அது ஒரு குவியல் மட்டுமே.

குப்பைக் கூடையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து, அது தேவைப்படும்போது மட்டும் திறந்து, தேவைப்படாத நேரங்களில் மூடி வைத்தால், இது ஒரு அற்புதமான கருவியாக இருக்கும். ஆனால் எல்லா நேரமும் குப்பைக்கூடையே கதி என்றிருப்பதுதான் பிரச்சனையாக உள்ளது.

மனம் ஒரு குப்பைக்கூடை என்று கூறும்போது, அது பயனற்றது என்று நான் கூறவில்லை. உதாரணமாக, உங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியோ அல்லது தொலைபேசியோ கூட இல்லாமலிருக்கலாம், ஆனால், நிச்சயம் ஒரு குப்பைக்கூடை இல்லாமலிருக்க முடியாது. அந்தக் குப்பைக் கூடையின் உபயோகம்தான் உங்கள் வீட்டின் தரத்தை முடிவு செய்கிறது. ஆனால் அது மிகவும் பயனுள்ளது என்பதற்காக, அதிலேயே படுத்துத் தூங்குவதற்கு முடிவெடுத்தால், அதுதான் மோசமானது.

தற்போது உங்களுக்கு நிகழ்ந்திருப்பதெல்லாம் இதுதான். குப்பைக்கூடைக்குள்ளேயே தூங்குவதும், வாழ்வதுமாக இருக்கிறீர்கள். ஆகவே அது கடினமாகத் தோன்றுகிறது. குப்பைக் கூடையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து, அது தேவைப்படும்போது மட்டும் திறந்து, தேவைப்படாத நேரங்களில் மூடி வைத்தால், இது ஒரு அற்புதமான கருவியாக இருக்கும். ஆனால் எல்லா நேரமும் குப்பைக்கூடையே கதி என்றிருப்பதுதான் பிரச்சனையாக உள்ளது.

உங்கள் மனதில் உள்ள எந்த விஷயமும் தவறானது கிடையாது. உலகின் அத்தனை மோசமான விஷயங்களும் உங்கள் மனதில் இடம் பெறுவது நல்லதுதான். இல்லையென்றால், அவற்றைக் குறித்து நீங்கள் அறியாத நிலையில், தற்செயலாகவோ அல்லது மற்றவர்களாலோ நீங்கள் அதற்குள் செல்ல நேரிடலாம். ஆனால், நீங்கள் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டால், உங்களுக்குத் தேவையில்லாதவற்றை இது எனக்கானதல்ல என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். ஆகவே நீங்கள் எதனுடனும் அடையாளம் கொள்ளாதவரை, உங்கள் மனதில் எந்த விஷயமும் இடம் பெறலாம், எதுவும் தவறானது அல்ல. ஆனால் அந்தக் குப்பைகளுடன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால், பிறகு அது உங்களை அசிங்கமாக உணரச் செய்கிறது. ஏனெனில் உலகத்திலுள்ள எல்லாக் குப்பையும் அந்த மனதில் உள்ளது என்பதோடு இப்போது அது உங்களிடம் ஒட்டிக் கொண்டும் இருக்கிறது. ஆனால் அதை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்துவிட்டால், உண்மையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

உங்கள் மனதில் இருப்பவைகளை நீங்கள் அலட்சியம் செய்ய விரும்பினால், அதற்கு ஒரு வழி உள்ளது. “நான் முட்டாள்” என்று மட்டும் கூறுங்கள். நீங்கள் முட்டாள் என்று ஒப்புக்கொள்ளும்போது, உங்களது எண்ணங்களுக்கு நீங்கள் எந்த முக்கியத்துவமும் தரமாட்டீர்கள். அதை விடுத்து “நான் மிகவும் புத்திசாலி”, என்று நீங்கள் நினைத்தால், அப்போது உங்கள் எண்ணங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கற்பித்துவிடுவீர்கள். “நான் சுத்த முட்டாள்” என்று மட்டும் நீங்கள் பார்க்கவேண்டும், அவ்வளவுதான்.

ஒரு முட்டாளுக்கும், புத்திசாலிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இதுதான். புத்திசாலிக்கு, தான் ஒரு முட்டாள் என்பது தெரிந்துள்ளது. ஆனால், ஒரு முட்டாள் அதை அறிவது கிடையாது.

“நான் முட்டாள்” என்று பார்ப்பதற்கு மிகுந்த புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. ஒரு முட்டாளுக்கும், புத்திசாலிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இதுதான். புத்திசாலிக்கு, தான் ஒரு முட்டாள் என்பது தெரிந்துள்ளது. ஆனால், ஒரு முட்டாள் அதை அறிவது கிடையாது. நீங்கள் படைப்பையும், உங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து இதை அறியவேண்டும். ஒரு சிறிய எறும்பு எந்த அளவுக்கு ஒருங்கிணைப்போடும், திறனோடும், உறுதியோடும் தனது வாழ்க்கையை நடத்திக்கொள்கிறது என்பதைக் கவனித்தால், நீங்கள் படுமுட்டாளாக இருப்பதை உணர்வீர்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, ஒரு சிற்றெறும்பு - எவ்வளவு சின்னஞ்சிறு உயிரினம் - வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்பதை நிச்சயமாக அறிந்துள்ளது. அந்தச் சிறிய எறும்பு, தான் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, எது தனக்கு ஊட்டமளிக்கிறது, எது தேவையற்றது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளது. உங்களைப்போல், அது உணவுப்பொருளின் உறையின் மீது அச்சிடப்பட்டு இருக்கும் பொடி எழுத்து விவரங்களை படித்து முடிவு செய்வதில்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை அது நன்றாகவே அறிந்துள்ளது.

ஒவ்வொரு உயிரினத்தையும் நீங்கள் உற்றுக் கவனித்தால், ஒவ்வொரு அணுவும் எப்படி இயங்குகிறது என்பதைக் கவனித்தால், நீங்கள் முட்டாளாக இருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு படைப்பும் அதிசயமான மதிநுட்பத்துடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் நடக்கும் இந்த மண், கற்பனைக்கெட்டாத புத்திசாலித்தனம் உடையது. நீங்கள் ஒரு மாமரத்தின் விதையையும், வேப்பமரத்தின் விதையையும் ஊன்றினால், மாம்பழம் இனிப்பை வழங்குகிறது, வேப்பம்பழம் கசப்பை வழங்குகிறது. இரண்டும் ஒரே மண்ணிலிருந்து வருபவைதான். எப்போதாவது மண் குழப்பம் கொண்டு, வேப்ப வித்திலிருந்து மாம்பழம் உருவாக்கியுள்ளதா? ஒவ்வொன்றும் துல்லியமாக இருக்கின்றன. ஜடப்பொருட்கள் கூட தாம் செய்வதில் சர்வ நிச்சயமாக உள்ளன. இங்கே குழப்பத்தில் இருக்கும் ஒரே முட்டாள், மனிதன் மட்டுமே.

“நான் முட்டாள்” என்பதை நீங்கள் அறிந்தால், அதன் பிறகு, உங்கள் எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வாழ்க்கையைக் கவனித்துப் பார்க்கத் துவங்குவீர்கள். அப்படி நீங்கள் வாழ்க்கையை அதிகம் கவனிக்கத் தொடங்கும்போது, உங்களது புத்திசாலித்தனம் நிச்சயமாக மலரும். அதற்குப் பிறகு எண்ணங்கள் எந்தப் பிரச்சனையாகவும் இருக்காது. ஏனெனில், எண்ணங்கள் அதிகம் உருவாகாது. உங்களது எண்ணங்களுக்கு எந்தக் கவனமும் அளிக்கவில்லையென்றால், அது மறைந்துவிடும். அதற்குக் கவனம் செலுத்தாதீர்கள். ஆனால், உங்கள் எண்ணங்கள் மிகவும் அற்பமானவை என்றும், மற்ற படைப்புகளோடு ஒப்பிட்டால் படுமுட்டாள்தனமானவை என்றும் நீங்கள் பார்த்தால் தவிர, உங்கள் எண்ணத்திற்குக் கவனம் அளிப்பதை உங்களால் நிறுத்தவே முடியாது. தங்கள் மனதில் ஒரு யோசனை கூட இல்லாமல், எறும்பும், பறவையும், தேனீயும் மற்றுமுள்ள எல்லா உயிரினங்களும், தாம் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துள்ளன.

நீங்கள் இப்படி ஆகிவிட்டால், எப்போதாவது விழிப்புணர்வோடு நீங்கள் யோசிக்கும்போது, எண்ணம் தெள்ளத் தெளிவாக இருக்கும். எல்லாவற்றையும் கூறுபோட்டுப் பகுத்துப் பார்க்கும் ஒரு கூர்மையான கத்திபோல இருக்கும். தற்போது உங்களிடம் எண்ணங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் விரவிக்கிடக்கின்றன. எனவே உங்கள் எண்ணம் என்னும் வாள் கூர்மையின்றி இருக்கிறது. அதனால் ஆழமாக ஊடுருவ இயலவில்லை. எனவே தேவையான ஓய்வு கொடுத்து, எப்போதாவது, எண்ணம் எனும் உங்கள் வாளை நீங்கள் உருவும்போது, அது எல்லாவற்றையும் பிளக்கும் கூர்மை பெற்றிருக்கும். ஆனால் உங்கள் பாதையில் நிற்கும் ஒவ்வொன்றையும் நீங்கள் எப்போதும் வெட்டிக்கொண்டிருந்தால், உங்களது வாள் ஒரு குச்சி போல ஆகிவிடும். அந்த வாளின் பயன்பாடு மிகவும் குறைந்துவிடும். எனவே எண்ணம் என்னும் வாளை நீங்கள் எப்போதும் உறையிலேயே வைத்திருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையானபோது மட்டும் நீங்கள் வாளை உருவினால், அப்போது அது ஒரு உபயோகமான கருவியாக இருக்கும்.

உங்கள் மனதில் நீங்கள் சேகரித்துள்ளவைகள்தான் எண்ணமாக வெளியில் வருகிறது. நீங்கள் விழிப்புணர்வோடு எண்ணத்தை உருவாக்கினால் தவிர, அதற்கு வேறு எந்தக் கவனமும் செலுத்தாதீர்கள்.

ஆகவே தூய்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். தூய்மையான எண்ணங்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், நீங்கள் அவைகளுடன் மிகவும் ஆழமாக ஒன்றிவிடுவீர்கள். தூய்மையான எண்ணம் என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா? தூய்மையான எண்ணம் அல்லது தூய்மையற்ற எண்ணம் என்று எதுவும் இல்லை. உங்கள் மனதில் நீங்கள் சேகரித்துள்ளவைகள்தான் எண்ணமாக வெளியில் வருகிறது. நீங்கள் விழிப்புணர்வோடு எண்ணத்தை உருவாக்கினால் தவிர, அதற்கு வேறு எந்தக் கவனமும் செலுத்தாதீர்கள். நீங்கள் விழிப்புணர்வோடு ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அது வேறுவிதமானது. அப்போது இயல்பாகவே நீங்கள் உங்களது விருப்பத்தின்படி எண்ணம் உருவாக்குவீர்கள். அவ்வாறு இல்லாமல் உருவாகும் மற்ற எண்ணங்கள் தற்செயலாக நிகழ்பவை. அதை நிறுத்த வேண்டும்.

எப்படி கெட்டுப்போன உணவின் காரணமாக உங்களுக்கு உடலில் வயிற்றுப்போக்கு நடக்கிறதோ, அதேபோல் தவறான எண்ணங்களை உள்வாங்கியிருந்தால் மனதிலும் வயிற்றுப்போக்கு போல நடக்கும். நீங்கள் அல்லாத ஏதோ ஒன்றுடன் உங்களை நீங்கள் அடையாளப்படுத்தும் கணத்திலேயே நீங்கள் முடிந்துவிட்டீர்கள், உங்கள் மனதின் வயிற்றுப்போக்கு ஆரம்பித்துவிடும். அதிலிருந்து மீள்வதற்கு வேறு வழியே இல்லை. நீங்கள் என்ன செய்தாலும் அது நிற்கப் போவது கிடையாது. ஆனால் எல்லா அடையாளங்களையும் விலக்கிவிட்டு, நீங்கள் வெறுமனே ஒரு துளி உயிராக மட்டும் இங்கே இருந்தால், ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லாமல், ஒரு இந்துவாகவோ அல்லது கிறிஸ்துவராகவோ அல்லாமல், ஒரு இந்தியராகவோ அல்லது அமெரிக்கராகவோ அல்லாமல், ஒரு உயிர்த்துளியாக மட்டும் இருந்தால், மனம் நிச்சலனமாகிவிடும். இப்போது நீங்கள் சிந்திக்க விரும்பும்போது சிந்திக்கலாம், வேண்டாமென்றால், சிந்தனையற்று இருக்கலாம். அப்படித்தான் மனம் இருக்க வேண்டும்.

என் கையை நான் அசைக்க விரும்பினால் அசைக்கிறேன். எனக்கு கையை அசைக்க வேண்டாமென்றால், அசைக்காமல் வைத்திருக்கிறேன். இதுதான் ஒரு உபயோகமான உடல். அவ்வாறு இல்லாமல், அது எப்போதும் அசைந்து கொண்டிருந்தால், இது ஒரு பைத்தியக்கார உடலாகத்தானே இருக்கமுடியும்? இதேபோன்று உங்கள் மனதிற்கும் நிகழ்ந்தால், கட்டுப்பாடின்றி எதையாவது செய்துகொண்டிருந்தால், அது பைத்தியக்கார மனம்தானே? மனதைப் பொறுத்தவரை ஒரு வசதி என்னவென்றால், மற்றவர்களால் அதைப் பார்க்கமுடியாது. உங்கள் உடல் இதனைச் செய்திருந்தால், அனைவரும் பார்க்கமுடியும். உங்கள் மனம் இதைச் செய்யும்போது, அனைவராலும் பார்க்கமுடியாது. ஆனால், உங்களை நெருக்கமாகக் கவனிப்பவர்கள் அதைப் பார்க்கமுடியும். சற்றே விழிப்புணர்வுடன் இருப்பவர்களால், அதை மிகவும் தெளிவாகப் பார்க்கமுடியும்.