சத்குரு சொல்லும் குட்டிக் கதைகளில் சங்கரன்பிள்ளையின் இரண்டு கதைகள் இங்கே..

சத்குரு:

நான் ஆண் தெரியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருநாள் சங்கரன் பிள்ளை தன் நண்பர்களுடன் பாருக்குச் சென்றிருந்தார். 8 மணி அடித்தவுடன், பாதி குடித்த மது டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, வீட்டை நோக்கி நடை கட்டத் தொடங்கினார்.

அவருடன் குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் எல்லாம், “அந்த டம்ளரை முடித்துவிட்டுப் போயேன்” என்று சொல்லியும் விடாப்பிடியாகக் கிளம்பிவிட்டார். “நீ உன் மனைவியின் மீதுள்ள பயத்தினால்தான் இப்படி ஓடுகிறாய். நீ ஒரு ஆணா அல்லது எலியா?” என்று கேலி செய்தனர்.

கோபமாக அவர்களைப் பார்த்துத் திரும்பிய சங்கரன் பிள்ளை, “நான் ஒரு ஆண்; நான் எலியாக இருந்திருந்தால் என் மனைவி என்னைப் பார்த்துப் பயந்திருப்பாள்” என்றார்.
வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து சற்று நடுங்கித்தான் போனார் சங்கரன் பிள்ளை. “முட்டாளே! மறுபடியும் குடிக்கத் துவங்கிவிட்டாயா?’’ என பூரிக் கட்டையை உருட்டிக் கொண்டு வந்தார்.

உங்களுக்குத்தான் தெரியுமே... நம் சங்கரன் பிள்ளை ஒல்லியான தேகமுடையவர். மனைவி நெருங்குவதற்குள் ஓட்டம் பிடிக்கத் துவங்கினார். ஓடிக் கொண்டே இருந்தவர் கட்டில் அடியில் போய் ஒளிந்துகொண்டார். குண்டு மனைவிக்குக் கீழே குனிய முடியவில்லை. “முட்டாளே! வெளியே வரப் போகிறாயா இல்லையா?” என்றார்.
ஹாயாக கீழே படுத்திருந்த சங்கரன் பிள்ளை, “என்னை யார் என்று நினைத்தாய்? நான் இந்த வீட்டின் ஆண் மகன்!” என்றார்.

தீ... தீ

தீ... தீ

ஒரு தடவை சங்கரன் பிள்ளை திறந்திருந்த சாக்கடைக்குள் விழுந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் வெளியே வர முடியவில்லை. பெருங்குரலெடுத்து, “தீ... தீ...” என்று கத்தினார்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பரபரப்பாகி தீயணைப்பவர்களை வரவழைத்தார்கள். அவர்கள் சங்கரன்பிள்ளையைச் சாக்கடையிலிருந்து வெளியே இழுத்துப் போட்டார்கள். “தீ... தீ என்று கத்தினீர்களே எங்கே நெருப்பு?” என்று அவரிடம் கேட்டார்கள்.

“சாக்கடை... சாக்கடை... என்று கத்தினால் நீங்கள் வருவீர்களா என்ன? அதனால்தான் தீ... தீ என்று குரல் கொடுத்தேன்” என்றார் சங்கரன்பிள்ளை.