ஒருவரால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்க்கை வாழ முடியுமா? அப்படி வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி அடைய முடியுமா? பிரச்சனைகளும் போராட்டங்களும் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையில் எப்படி இப்படி வாழ்ந்து வெற்றியடைய முடியும்? இதற்கு சத்குரு சொல்லும் சில யோசனைகள் இங்கே...

சத்குரு:

வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல், செய்வதைத் தீவிரமான விருப்பத்துடன் செய்யுங்கள் என்று ஏன் சொல்கிறேன்?

வெற்றியை எதிர்பார்க்கும்போதே, அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல் போலத் தொடர்ந்து வரும்.

எதிர்பார்ப்பு... ஏமாற்றம்...

எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், எங்கே ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ, அங்கே எரிச்சல் தானாகவே வேகத்தடையாகக் குறுக்கிடும். காத்திருக்கப் பொறுமையில்லாமல் கவனம் சிதறும்.

ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தின் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பு இருக்காது.

வெற்றிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று யோசிங்கள். எதைச் செய்ய வேண்டியிருந்தாலும், இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்றுதான் மனம் முதலில் கணக்குப் போடுகிறது.

வெற்றிபோல் ஏதாவது ஒன்று வசீகரித்து உங்களை முன்னால் இழுக்க வேண்டும். அல்லது தோல்விபோல் ஏதாவது ஒன்று பயமுறுத்திப் பின்னாலிருந்து உந்தித் தள்ள வேண்டும்.

கவனமாகப் பாருங்கள். வெற்றியும், தோல்வியும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தான். தனித்தனியே பிரிக்க முடியாதவை. சுண்டிவிட்ட நாணயத்தின் எந்தப் பக்கம் விழப்போகிறது என்பது புரியாமல் அந்தப் பதற்றத்தில் வாழ்க்கையை நடத்துவது உங்களுக்கு பழக்கமாகிவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்தப் படபடப்பை ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டீர்களே தவிர, முடிவு எப்படியிருந்தாலும் ரசிக்க கற்றுக் கொள்ளவில்லை.

நீங்கள் நெருக்கமாக நினைப்பவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடத் தயாராகத்தான் இருப்பீர்கள். ஆனால், பதிலுக்கு அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தால், அங்கே ஏமாற்றத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரே ஒரு காரியம் உங்களுக்குத் தெரியாமல் மறைத்து அவர் செய்வதைக் கவனித்துவிட்டால், அவர் மீது வைத்த நம்பிக்கை போய், மனதில் படக்கென்று சந்தேகம் முளைவிட்டுவிடும். எனவே, உங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூட எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

அதற்காக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்? அதுவும் தீவிரமாக!

ஒரே வழிதான் இருக்கிறது... அதன் பெயர் அன்பு!

ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தின் முழுமையான தீவிரம் இருக்கும். ஆனால் எதிர்பார்ப்பு இருக்காது.

இரண்டாம் உலகப் போரின்போது...

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம். ஜெர்மனியில் சிறைகள் நிரம்பி வழிந்தன. ஒரு குறிப்பிட்ட சிறை முகாமில், கூடுதலாக இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனை கொடுத்து, எண்ணிக்கையைக் குறைக்க முடிவானது.

கைதிகள் எல்லோருக்கும் எண்கள் கொடுக்கப்பட்டன. தினமும் சில எண்கள் அழைக்கப்பட்டன. அந்த எண்களுக்குரியவர்கள் மரண மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அப்படியொரு நாள், ரிச்சர்டு என்ற ஒரு கைதியின் எண் அழைக்கப்பட்டது. அவன் சாக விரும்பவில்லை. எனவே, நடுக்கத்துடன் ஒளிந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கைதியாக வந்திருந்த ஓர் இளம் பாதிரியார் இருந்தார்.

"உனக்குச் சாக விருப்பம் இல்லையென்றால், நம் எண்களை மாற்றிக் கொள்வோம். உன் இடத்தில் நான் போகிறேன்" என்றார், அவர் புன்னகையுடன்.

அதற்குச் சம்மதிப்பது ரிச்சர்டுக்கு உறுத்தலாக இருந்தாலும், உயிர் மீது இருந்த ஆசை உடன்பட வைத்தது.

பாதிரியார் மரண மேடைக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் போனார். சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைக்கு ராத்திரியே அந்தப் பகுதியில் ஜெர்மனி போரில் தோற்றது. கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ரிச்சர்டு அதற்குப் பின் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தான். அவனுடைய உயிர் இன்னொருத்தர் போட்ட பிச்சை என்ற எண்ணம் அவன் மனதை வாட்டியது.

எதிர்பார்ப்பு இல்லாமல் எதையாவது தீவிரமாகச் செய்ய வேண்டும் என்றால், அதன் மீது பிரியம் வைக்க வேண்டும்.

அந்தப் பாதிரியார் அவனுடைய நண்பர் அல்ல. உறவினர் அல்ல. அவர் பெயர் கூட ரிச்சர்டுக்குத் தெரியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவருக்காகத் தன் உயிரையே விருப்பத்துடன் கொடுக்க அவரால் எப்படி முடிந்தது? 'அந்தப் பாதிரியார் இறந்துவிட்டாலும், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டார். தான் உயிருடன் பிழைத்திருந்தாலும் முழுமையாக வாழவில்லை' என்று ரிச்சர்டு உள்ளுக்குள் உணர்ந்தான்.

இதைச் சொன்னால், உங்களை இதே போல் யாருக்காகவாவது உயிரைத் தியாகம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை.

அந்தப் பாதிரியார் தியாகம் நினைத்து எதையும் செய்யவில்லை. அன்பின் அர்த்தத்தை உணர்ந்திருந்தார். அடுத்தவரின் அச்சத்தையும், துன்பத்தையும் களைய அந்தச் சந்தர்ப்பத்தில் செய்யக்கூடியதை எதிர்பார்ப்பில்லாமல் செய்தார்.

எதிர்பார்ப்பு இல்லாமல் எதையாவது தீவிரமாகச் செய்ய வேண்டும் என்றால், அதன் மீது பிரியம் வைக்க வேண்டும்.

அறிவாளிகள் - சிரிக்கத் தெரியாதவர்கள்!

நீங்கள் கவனித்திருக்கலாம்... மிகுந்த அறிவாளிகளாக இருப்பவர்களுக்கு அடுத்தவரிடத்தில் அன்பாகச் சிரித்துப் பேசக்கூடத் தெரியாது. அன்பாக இருக்கச் சொன்னால் எதற்காக என்று கேட்பார்கள். பலனைத் தெரிந்து கொள்ளாமல் செயல்பட மறுப்பார்கள். அன்பாக இருப்பதுதான் அடிப்படை புத்திசாலித்தனம் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.

முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல், செய்வதை முழுமையான பிரியத்துடன் செய்து பாருங்கள். வெற்றியை நினைக்காமல், முழு அர்ப்பணிப்புடன் செய்து பாருங்கள்.

வெற்றியை எதிர்பார்க்காததால், தோல்வி பற்றிய பயம் வராது. பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது. பதற்றமில்லாத இடத்தில் கவனம் சிதறாது. கவனம் சிதறாதபோது, செய்வதிலேயே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத்திறமையும் வெளிப்பட்டால், வெற்றி நிச்சயம்!