இன்றும் கூட பலர் தங்கள் குடும்ப நலனிற்காகவும், சிலர் மழை வேண்டியும், வறட்சி நீங்கவும் யாகங்கள் மற்றும் வேள்விகளை நடத்துவதைப் பார்க்கிறோம்! இதெல்லாம் வேலை செய்யுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. மனிதர்களின் நலனிற்காக சத்குரு மேற்கொள்ளும் யாகம் ஏதும் உண்டா என்ற ஒரு கேள்வி உங்களுக்குத் தோன்றினால், அது என்ன என்பதை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.

Question: வறட்சியிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மகப்பேறின்மை நீங்கவும், பூகம்பங்களைத் தடுக்கவும் என்றெல்லாம் இந்தியாவில் பல சாமியார்கள் வேள்விகளையும், யாகங்களையும் நடத்துகிறார்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு என்ன? அல்லது இத்தகைய முயற்சிகளைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

சத்குரு:

வறட்சி, மகப்பேறின்மை மற்றும் பூகம்பம் - இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'சாமியார்கள்' என்று அழைக்கப்படுகின்றவர்கள் இந்த தேசத்தில் எப்போதும் மிக அதிகமாகவே இருந்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும்கூட இந்த தேசம் பலமுறை வறட்சி நிலையைக் கண்டிருக்கிறது. இதுபோன்ற யாகங்கள், வேள்விகள் மற்றும் அனைத்து வகையான பெரும் செலவு மிக்க பூஜைகள் செய்து கொண்டிருந்தும் 1964 வரை மிகவும் கடுமையான பஞ்சம் இங்கே ஏற்பட்டிருக்கிறது. பிறகு 1964-ல் இருந்து நமக்குப் பஞ்சம் ஏற்படவேயில்லை. ஆனால் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. விளைச்சல் மோசமாக இருந்ததால் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. 1964-லிருந்து நமக்குப் பஞ்சம் ஏற்படாதது, யாரோ செய்த யாகத்தாலோ, வேள்விகளாலோ, பூஜைகளாலோ அல்ல. எதனாலென்றால் நமது வேளாண்மை ஓரளவு சீரடைந்தது. நாம் இதனை ஓரளவு அறிவுப் பூர்வமாக அணுகியிருக்கிறோம். பயிர்களைக் காக்கக் கடவுளைக் கூப்பிடுவதற்குப் பதிலாக நாமே ஓரளவிற்கு பயிர்களைக் காக்கத் தொடங்கிவிட்டோம். இந்தக் காரணத்தினாலேயே இந்த 40 வருடங்களாக எந்தப் பஞ்சமும் ஏற்படவில்லை. இல்லையென்றால், இந்த தீபகற்பம் பஞ்சத்தால் சூறையாடப்பட்டு ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டிருக்கும்.

பூகம்பங்களை நான் தடுக்க விரும்பவில்லை. பூகம்பங்கள் அதிகம் ஏற்பட்டு, அதன் மூலம் மனிதர்கள் தங்கள் வாழ்வை புத்திசாலித்தனமாகக் கையாளத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

மகப்பேறின்மைக்கான யாகங்கள் வேலை செய்கின்றது என்றே நினைக்கின்றேன்! நம் மக்கள் தொகை பல மடங்கு பெருகியுள்ளது. அந்த ஒரு விஷயத்தில் இது வேலை செய்வதாகவே தோன்றுகிறது. மகப்பேறின்றி இருப்பதற்காக மீண்டும் ஒருமுறை சில யாகங்களை அவர்கள் செய்யக்கூடும். இந்த தேசத்தில் அத்தகைய யாகங்கள் தேவை என்று நினைக்கின்றேன். சிறிது காலத்திற்கு அனைவரும் மகப்பேறின்றி இருப்பதற்காகப் பல பூஜைகள் நாம் செய்தால் குழந்தைகள் பிறக்காமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மலட்டுத்தன்மையுள்ள பெண், கருத்தரிப்பதற்காக அவர்கள் யாகங்கள் செய்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் தெருவில் கிடந்தால், உணவிற்காக அவர்கள் எந்த யாகங்களும் செய்ததில்லை. அதற்காக மற்ற நாடுகளில் இருந்து உதவி தேவைப்படுகின்றது. அவர்கள் மாட்டுத் தீவனத்தை அனுப்பினால் கூட நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். ஆமாம், பலமுறை மேற்கத்திய நாடுகள் மாட்டுத் தீவனத்தை அனுப்பியிருக்கின்றன, நீங்கள் சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள். நமது குழந்தைகள் அவற்றை உண்டு வாழ்கிறார்கள். ஏனென்றால், சாமியார்கள் என்றழைக்கப்படுபவர்கள் மக்களின் முட்டாள்தனத்தை ஆதரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். பஞ்சம், வெள்ளம் மற்றும் பல விஷயங்களைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவமும், அறிவியலும் பங்காற்றுகின்றன. தொற்றுநோய் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட அதேநேரத்தில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதும் உங்கள் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்துமே உங்களது அறிவிற்கு எட்டாததால், சாமியார்கள் அதிகக் குழந்தைகளை உருவாக்குவதற்குத் தூண்டினார்கள். அநேகமாக இதற்குக் காரணம் என்னவென்றால் சாமியார்கள் என்றழைக்கப்படுகிறவர்கள் தங்களிடம் வருகின்ற மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்பினார்கள். யார் தனது கைப்பிடிக்குள் எவ்வளவு பேரை வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்குள் எப்போதுமே பெரும் சண்டை இருக்கிறது. இறுதியாக முழு விஷயமும் அவர்களைச் சுற்றிலும் நிறையபேர் இருப்பதைப் பற்றியே உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்களோ அது அவர்களுக்கு நல்லதாகவே இருக்கிறது.

பூகம்பங்கள், அதுவும் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு, நான் எங்கே சென்றாலும், ஒரு கேள்வியை என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. நாம் என்ன செய்ய முடியும்? கடவுளுக்கு நம்மீது கோபமா? இந்த தேசத்தில் பூகம்பங்களைத் தவிர்க்க ஆன்மீக வழிமுறைகளை ஏதேனும் நாம் கையாள முடியுமா? என்பது தான் அது.

ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பூகம்பம், இயற்கையின் சீற்றமல்ல. அது இயற்கையின் போக்கு. பூமித்தாய் சற்றே தன்னை நெட்டுயிர்த்துக் கொள்கிறாள், அவ்வளவுதான். இது எங்கும் நடக்கிறது. பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. நிறைய பூமி அதிர்ச்சிகள் கடலுக்குள்ளேயே நடக்கின்றன. பேரலைகள் எழுவதால் இடையூறுகள் ஏற்படுகின்றன. நீங்கள் கவனிப்பதில்லை. ஏனென்றால் இது உங்களுக்கு வெகுதொலைவில் உள்ளது. நாம் மூன்றில் ஒரு பங்கு அளவை மட்டுமே பார்த்துக் கொண்டால் போதும். பாருங்கள், அதற்கே எவ்வளவு குழப்பம்! குறிப்பாக இந்தியாவில் இந்த விஷயங்களைக் கையாள்வதில், நாம் எவ்வளவு குறைபாடுகள் உள்ளவர்களாக இருக்கிறோம். பூகம்பங்கள் உலகின் பல பகுதிகளிலும் ஏற்படுகின்றது. சில இடங்களில் அநேகமாக அன்றாடம் நடக்கின்றது. உதாரணத்திற்கு கலிஃபோர்னியாவில், அநேகமாக ஒவ்வொரு நாளும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. யாரும் இறப்பதில்லை. ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை வகுத்துள்ளார்கள்.

ஆனால் இந்தியாவில், ஒரு பூகம்பம் ஏற்பட்டதிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டனர். ஏனென்றால் நாம் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம். மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு நாம் தயாராகவில்லை. எந்த வகையிலும் நாம் தயாராயில்லை. இதுபோன்ற ஏதேனும் ஏற்பட்டால் மக்கள் பூச்சிகளைப் போல இறந்து விழுகிறார்கள். நான் உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன். 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு நாஷ்வில் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன். அன்று மாலை பாவ ஸ்பந்தனா வகுப்பு தொடங்கவிருந்தது. நாங்கள் பயணத்தில் இருந்தோம். அன்று மதியம், ஒரு கடுமையான சுழற்காற்று நாஷ்வில் நகரைத் தாக்கியது. மிக மூர்க்கமான சுழற்காற்று. கார்கள், மரங்கள் அனைத்தும் காற்றில் பறந்தன. அதைப் பார்த்தால், அனைத்தையும் ஆகாயத்திற்குத் தூக்கிச் செல்வதுபோல் தோன்றியது. நகரத்தின் மையப் பகுதியில் சுழற்காற்று தாக்கியதால் பத்துப் பதினைந்து நிமிடங்களில் நகருக்குள் இருந்த எண்ணூறுக்கும் அதிகமான பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்தப் பகுதியில் ஏறக்குறைய எல்லாக் கட்டிடங்களிலும், கதவுகளும், ஜன்னல்களும் நொறுங்கியிருந்தன. காற்றால், நூற்றுக்கணக்கான கார்கள் ஒன்றாகக் குவிந்துவிட்டன. சுழற்காற்று செல்லும் இடத்திலிருந்து அரை மைல் தள்ளி நாங்கள் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் அதைப் பார்க்க முடிந்தது. வீடுகள் வழியே அது வெடித்தது. வீதிகளில் மரங்கள், வாகனங்கள், உடைந்து நொறுங்கிய கண்ணாடிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. போக்குவரத்துகள் அனைத்தும் ஸ்தம்பித்திருந்தது. ஏகக் களேபரம். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். அடுத்த நாள் செய்திகளில் ஏழு பேரை மட்டும் காணவில்லை என்று அறிவிப்பு வந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் அந்த ஏழுபேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒருவர் கூட இறக்கவில்லை.

அதிகமான குழந்தைகளைப் பெறுவதற்குக் காரணம் அவர்களால் நிறைவு கிடைக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முகத்தில் ஒரு நிறைவு இருக்காது.

அத்தகைய சுழற்காற்று கோயம்புத்தூர் நகரைத் தாக்கினால் குறைந்த பட்சம் 50,000 பேராவது இறந்து போவார்கள். நாஷ்வில் நகர மக்கள் நல்ல யாகங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் சரியாக யாகங்கள் செய்வதில்லை என்றெல்லாம் இல்லை. அங்கே மக்கள் விஷயங்களை விவேகத்துடன் கையாள்கிறார்கள், அவ்வளவுதான். எது தேவையோ அது செய்யப்பட்டு இருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவில்லை. ஆனால் மற்ற அனைத்தையுமே செய்கிறோம். நமக்கு பூகம்பங்கள் வேண்டியதில்லை. இந்த தேசத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டுமோ அதனை நாம் அப்படிக் கொண்டு செல்லாததால் இன்று இந்த தேசமே ஒரு சீரழிவாகிவிட்டது. கடவுள் நமது தேசத்தை நடத்திச் செல்வார் என்று இன்னும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுள் நமக்காக எல்லாவற்றையும் கையாள்வார் என்று இன்றும் நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவிதமான குழப்பங்களையும் நாம் உருவாக்கிவிட்டு, இதைக் கடவுள் வந்து நமக்காகச் சரிசெய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது நடக்கப் போவதில்லை. படைத்தவர் இந்தப் படைப்பினை மிக அற்புதமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இதை நீங்கள் குறைகூற முடியாது. மிக நேர்த்தியாகவும், செழுமையாகவும் படைத்துள்ளார். இதைவிட நேர்த்தியான படைப்பினை நீங்கள் கற்பனைகூடச் செய்யமுடியாது. உங்கள் வாழ்வை, உங்கள் குடும்பத்தை, உங்கள் சமூகத்தை மற்றும் உங்கள் தேசத்தின் சூழ்நிலையை உங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு எது செய்யத் தேவையோ அவற்றைச் செய்வதற்கு இதுவே நேரம். கடவுளின் கைகளில் இருந்து, தேசத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், பிறகு இத்தகைய விஷயங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஆந்திராவில் பூகம்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக யாரோ ஒருவர் யாகம் நடத்துகிறார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆந்திராவில் பூகம்பமே அநேகமாக இருக்காது. எப்படியோ இப்போது இவருக்கு பெயர் கிடைக்கிறது "நான் யாகம் செய்ததால் பூகம்பம் வரவில்லை" என்று.

வேறு ஒரு சாமியார், நூறு வருடங்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெள்ளம் வரப்போகிறது என்று கணித்துச் சொல்கிறார். நூறு வருடங்களுக்குப் பிறகு வெள்ளம் வரப்போகின்றது என்பதை இந்த மனிதர் இப்போது அறிவிக்கின்றார். அனைவரும் அவரைச் சுற்றியிருக்கின்றார்கள். அடுத்த நூறு வருடங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அவர் கணித்துவிட்டார். நூறு வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை யார் வேண்டுமானாலும் கணித்துவிட முடியும். தயவுசெய்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு நடக்கப் போவதை கணித்துக் கூறட்டும், பார்க்கலாம்? எப்படியும் நூற்றாண்டு காலத்தில் எங்கேயோ வெள்ளம் ஏற்படலாம். நீங்களோ, அவரோ இருக்கப் போவதில்லை. இந்த யாகங்கள், வேள்விகள், பூஜைகள் போன்றவற்றின் சில விஞ்ஞான ரீதியான அடிப்படை இருந்தது. இந்த சடங்குகள் மக்களுக்கு ஒரு உறுதுணையான சூழலை உருவாக்குவதற்கு அடிப்படையான வழியாக இருந்தது.

மக்கள் நல்ல உள்சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள, அவர்களுக்கென வழிமுறைகள் இல்லாதபோது, வெளியே, உறுதுணையான சூழலை உருவாக்குவதை அறிந்தவர்கள் - வேதகாலங்களில் குறிப்பிட்ட யாகங்களையும், வேள்விகளையும் நடத்தினார்கள். இவர்களால் சில வகையான உள்சூழ்நிலைகளையும் உருவாக்க முடியும். ஆனால் காலப் போக்கில் வேறு ஒரு கலாச்சாரம் இதை எடுத்துக் கொண்டது. பின்னர் இது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது. ஏனென்றால் அவர்களால் மட்டும்தான் இந்த வார்த்தைகள் அனைத்தையும் உச்சரிக்க முடியும். வேறு எவராலும் முடியாது. உங்களுக்குத் தெரியுமா, இராமரின் காலத்தில்கூட வேள்வியைப் பார்க்க வந்த ஒரு சூத்திரன், வேள்வியைப் பார்த்ததற்காகவும், அங்கே கூறப்பட்டவைகளைக் கேட்டதற்காகவும் கொல்லப்பட்டான். இது எதனாலென்றால் ஒரு சிலர் தங்கள் வியாபாரத்தைக் காப்பதற்காக இதனை மிகவும் சிக்கலாக்கி, பெரிதாக்கி உண்மையிலேயே இதில் ஏதோ ஒன்று இருக்குமாறு மக்களை எண்ணச் செய்துவிட்டார்கள். யாரோ ஒருவர் என்னிடம் இதைப் பற்றிக் கூறினார். கோலாப்பூரில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மருத்துவர் இருந்தார். அவரது மருத்துவமனைக்குள் நுழைந்தாலே, அங்கே அனைத்து வகையான குழாய்களும், குடுவைகளும், ஒரு பெரிய பரிசோதனைக் கூடம்போல் இருக்கும். எல்லாவகையான குழாய்களிலும் சிவப்பு திரவம், நீல திரவம், பச்சை திரவம் இப்படி நிறைய இருக்கும்.

யாகங்கள், வேள்விகள் நடந்தாலும், கடவுளே கீழே இறங்கி வந்தாலும் நீங்கள் உங்கள் நிலையில் மாற்றங்கள் செய்துகொள்ளாதவரை எந்த மாற்றமும் ஏற்படாது.

எனவே, அவரைப் பார்க்க நீங்கள் ஒரு நோயாளியாகச் சென்றால், அவரைப் பார்ப்பதற்கு முன்பாக, செல்லும் வழியெல்லாம் இந்தப் பொருட்கள் அனைத்தையும் பார்த்துச் சென்றே ஆக வேண்டும். பல பரிசோதனைகள் நடந்துகொண்டே இருக்கும். மருத்துவரின் அறையை நீங்கள் சென்றடையும் பொழுது, மிகப்பெரிதாக ஏதோ ஒன்று இங்கே நடக்கின்றது என்று நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள். நீங்கள் அங்கே செல்லும்பொழுது, அவர் உங்களைப் படுக்கவைத்து எல்லா வகையான வண்ண விளக்குகளையும் போட்டு ஏதேதோ செய்து சப்தங்களை உருவாக்கிப் பல பரிசோதனைகளைச் செய்வார். அனைத்து வகையான பரிசோதனைகளும் வெறும் பல்புகளைக் கொண்டே நடக்கின்றது. இந்த சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு அவர் 1 அங்குல சுற்றளவும், 3 அங்குல உயரம் கொண்ட பாட்டிலில் 3-4மி. அளவிற்குச் சிகப்பு நிற திரவத்தையோ அல்லது பளீரென்று இருக்கும் வேறு ஏதோ திரவத்தையோ கொடுப்பார். அன்றாடம் இந்த திரவத்தில் வெறும் 2 துளிகள் மட்டுமே நீங்கள் உட்கொள்ள முடியும். மேலும் 3 நாட்களுக்கு ஒருமுறை அவரிடம் சென்று அதனை நிரப்பிக்கொள்ள வேண்டும். பலபேர் இந்த மனிதரை அற்புதமாய் குணப்படுத்துபவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நோய்கள் அனைத்திலிருந்தும் இவர்கள் விடுபட்டார்கள். ஒருநாள் அந்த வண்ணத்திரவம், சாதாரணத் தண்ணீர் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அவர் கொடுத்தது வெறும் தண்ணீர்தான். அதுவும் மிக நன்றாக வேலை செய்திருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள், அதன்மூலம் தாங்கள் குணமடைந்ததாகச் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகப் பாசாங்கு செய்பவர்கள்தான். இதை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். பலரும், நோய் வாய்ப்பட்டதாகவே பாசாங்கு செய்கின்றனர். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்குத் தெரிந்த வழி அதுதான்.

உளவியல் அடிப்படையில் பார்த்தால் இதற்கென்று இளம் வயதிலேயே நீங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளீர்கள். பல வீடுகளில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது யாரும் கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் நோய்வாய்ப்படும்போது குடும்பமே அவர்களைச் சூழ்ந்துகொண்டு இனிய வார்த்தைகளைப் பேசுவதும் வேண்டியதையெல்லாம் செய்வதும் வழக்கம். குழந்தையின் உள் மனதில், நோய் என்பது, ஒரு நல்ல முதலீடு என்று பதிந்துவிடுகிறது. நோய்வாய்ப்பட்டால் எல்லோரும் நம்மிடம் நல்லமுறையில் நடந்து கொள்வார்கள் என்று தெரிந்துவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்போது அதனை யாரும் கவனிப்பதில்லை. அவர்கள் குழந்தைகளை ஒரு தொந்தரவாகக் கருதுகிறார்கள். அவர்கள் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் இருந்தால் மற்றவர்கள் அதனைக் குறைத்து விடுவார்கள். ஆனால் நோய்வாய்ப்பட்டவர்கள் எப்போதுமே அதிகப்படியான கவனத்தைப் பெறுகிறார்கள். இது இந்தக் கோளத்தில் மிகப்பெரிய நோய்த்தன்மை உருவாவதற்கான வழிமுறையாக உள்ளது. குழந்தைப் பருவத்திலிருந்தே நோயாளியாக இருக்கப் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்களை நாம் தனியே விட்டுவிட வேண்டும். அவர் வேறெதற்கும் பயன்படமாட்டார். நோய், கொண்டாடப்பட வேண்டிய விஷயமல்ல. அவர்களுக்கு வேண்டிய மருந்து, வேண்டிய பராமரிப்பு ஆகியவற்றை வழங்கினால் போதும், அளவுக்கதிகமாய் கவனம் செலுத்த அவசியமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் படுத்துக் கொள்வதுதான் வழி. வேறு என்ன செய்ய முடியும்?

குழந்தைகளின் உள்மனதில் அது ஆழப் பதிவதால், தங்கள் மீது பிறர் கவனம் செலுத்த வேண்டுமென்று ஆசைப்படும்போதெல்லாம், தம்மையும் அறியாமல் அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். உளவியல் காரணங்களால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன. அவர்கள் மீதான கவனம் குறையும் போதெல்லாம் உண்மையிலேயே நோய்வாய்ப்படுகிறார்கள். அது ஒன்றும் நடிப்பு அல்ல. உண்மையிலேயே சுகவீனம் அடைகிறார்கள். மருத்துவ ரீதியான பாதிப்பு எனினும் இதன் காரணம் உளவியல் ரீதியானதாகவே இருக்கின்றது.

எனவே பூஜைகள், யாகங்கள் எல்லாம் செய்தும், இந்த தேசம் பலவற்றிலிருந்தும் இன்னும் விடுதலையாகவில்லை. இனியாவது செய்ய வேண்டியதை மட்டும் செய்வோம். பூகம்பங்களைத் தடுப்பதில் என் பங்கு என்னவென்று கேட்கிறீர்கள். பூகம்பங்களை நான் தடுக்க விரும்பவில்லை. பூகம்பங்கள் அதிகம் ஏற்பட்டு, அதன் மூலம் மனிதர்கள் தங்கள் வாழ்வை புத்திசாலித்தனமாகக் கையாளத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

குழந்தையில்லாத பெண்கள் குழந்தை பெற வேண்டுமென்று நான் விரும்பவில்லை. தாங்கள் எப்படி வாழவேண்டும் என்பதே தெரியாதவர்கள் புதிதாக உயிர்களை உருவாக்குவது எதற்காக? அவர்கள் ஞானம் பெறுகிற வாய்ப்பே இல்லை. அதை மறந்து விடுங்கள். ஆனால், எப்படி வாழ்வது, உடலை எப்படிப் பேணுவது, மனித வடிவம் என்றால் என்ன, உணர்ச்சிகளை எப்படிக் கையாள்வது, மனித மனத்தை எப்படி சீர்படுத்தி வைத்துக்கொள்வது என்பதையெல்லாம் தெரியாதவர்கள் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பதால் ஆகப்போவதென்ன?

நமது தனிவாழ்க்கை, சமூக வாழ்க்கை, தேசியச் சூழல், உலகச்சூழல் ஆகியவற்றை இன்னும் கூர்மையாக நாம் கையாளவேண்டும். இதற்கு ஒரே வழி, உங்கள் உடலையும், மனதையும் திறம்பட நிர்வகிப்பது தான்.

இன்னொரு உயிரை உருவாக்குவதென்பது, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. ஒரு குழந்தை பெற வேண்டுமென்றால், உங்களை முதலில் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். உடலளவிலும், மனதளவிலும் உங்களை நீங்களே சரிப்படுத்திக்கொள்ள முடிந்தால் மட்டுமே இன்னொரு உயிரை இந்த உலகிற்குள் கொண்டுவர உங்களுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையே தெரியாமல் குழந்தைகளை உருவாக்கினால், உலகில் மேன்மேலும் குழப்பங்களைத்தான் உருவாக்குவீர்கள். அதிகமான குழந்தைகளைப் பெறுவதற்குக் காரணம் அவர்களால் நிறைவு கிடைக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முகத்தில் ஒரு நிறைவு இருக்காது. தங்கள் குழந்தைகளைக் கையாள முடியாமல், அவர்களால் துன்பப்படுகிறவர்கள். எனவே, கடவுளை அழைப்பதை விட்டுவிட்டு நம் வாழ்க்கையை நம்முடைய கைகளில் எடுத்துக் கொள்வோம்.

மனிதகுலத்தின் நலனுக்கு என்னுடைய பங்கு என்னவென்று கேட்கிறீர்கள். உங்களிடம் ஏற்றுக்கொள்கிற தன்மையோ, உள்நிலை வளர்ச்சியோ ஏற்படாவிட்டால், இந்த உலகிலோ அல்லது அதைத் தாண்டியோ உங்களுக்காக எதையாவது செய்வதற்கு எந்த சக்தியும் இல்லை என்று உங்களை உணரவைப்பதே என் பங்கு. இந்த உணர்வை நீங்கள் பெறுகிற வரையில் சாமியார்களோ, கடவுளோ, தன்னை உணர்ந்தவர்களோ உங்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை. நீங்கள் அவர்களைப் போற்றலாம், வணங்கலாம், அவர்களைப் புகழ்ந்து பாடலாம். ஆனால் உங்கள் துன்பத்திலிருந்து நீங்கள் விடுபடப்போவதில்லை.

கிருஷ்ணர், ராமர், கௌதம புத்தர், இயேசு இன்னும் பல அற்புதமான முனிவர்கள், ஞானிகள் இங்கே தோன்றியபோது கூட அவர்களைச் சுற்றி நிறையபேர் மிகச் சாதாரணமான துன்பமயமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்கள். சிலர் மட்டுமே அந்த எல்லைகளைத் தாண்டி எழுந்தார்கள். மற்றவர்கள் தங்கள் துன்பத்தில் உழன்று கொண்டே இருந்தார்கள். எனவே யாகங்கள், வேள்விகள் நடந்தாலும், கடவுளே கீழே இறங்கி வந்தாலும் நீங்கள் உங்கள் நிலையில் மாற்றங்கள் செய்துகொள்ளாதவரை எந்த மாற்றமும் ஏற்படாது.

இந்த எண்ணத்தைத்தான் நான் மக்கள் மனதில் ஏற்படுத்த விரும்புகிறேன். அவர்களின் மனம், உடல், சக்திநிலை போன்றவற்றைத் தூண்டிவிட்டு மேலும் உயிருள்ள வாழ்க்கையைத் தர விரும்புகிறேன். தங்களிடம் உயிர்ப்புத்தன்மை இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக எதையும் செய்யமாட்டார்கள். கடவுள் வந்து எதையாவது செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

இந்தச் சூழலை இன்னும் உயிரோட்டமுள்ளதாக, அறிவுப்பூர்வமானதாகக் கையாள அவர்களுக்குச் சொல்லித் தருவதும், இப்போதிருக்கும் நிலையைக் கடந்து போகிற வாய்ப்பை ஏற்படுத்துவதும்தான் என் பணி. அதற்கான முதல்படி தங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் போன்றவற்றை சரியான முறையில் கையாளத் தெரிந்து கொள்வதுதான்.

இவற்றை எப்படிக் கையாள்வதென தெரியாவிட்டால், இதனைக் கடந்து போவதென்பது இயலாது. அத்தகைய ஒன்று கற்பனையாக இருக்குமேயன்றி நிஜமாக நடக்காது. தன்னை சரிவரத் தெரிந்துகொள்ளாவிட்டால், உங்கள் கண்ணெதிரே கடவுள் தோன்றினாலும் எந்தப் பலனும் இருக்காது. கடவுள் வரவேண்டியதும் இல்லை. ஏனெனில், எதனை நீங்கள் கடவுளென்று அழைக்கிறீர்களோ, அது இங்கேயே உங்களுக்குள்ளேதான் இருக்கிறது. ஆனால் இறந்திருக்கிறது. அதனை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் முழுமையான உயிர்ப்புத் தன்மையை அடைய வேண்டும். அப்போதுதான் உங்களுக்குள்ளிருக்கும் இறைத்தன்மை உயிர்ப்படையும்.

எனவே உங்களுக்கு உயிரூட்டுவதுதான் என் பணி. நீங்கள் உயிரூட்டப்பட்டால் உங்களுக்குள் இருக்கும் இறைத்தன்மை உயிரோட்டம் பெறும். அதற்குப் பிறகு, பூகம்பங்கள் உங்களுக்கொரு பொருட்டாக இருக்காது. அவற்றைக் கையாள்வது எப்படியென்று தெரிந்துகொள்வீர்கள். இவையெல்லாம் நடைபெறாது என்று பொருளல்ல. இவை நடைபெறும். நடைபெற்றாக வேண்டும். நமது தனிவாழ்க்கை, சமூக வாழ்க்கை, தேசியச் சூழல், உலகச்சூழல் ஆகியவற்றை இன்னும் கூர்மையாக நாம் கையாளவேண்டும். இதற்கு ஒரே வழி, உங்கள் உடலையும், மனதையும் திறம்பட நிர்வகிப்பது தான். இது தெரியாமல் உலகை எப்படி நிர்வகிக்க முடியும்? எனவே, இதுதான் எனது யாகம்.