நல்ல செய்திகள் ஏன் நாளிதழில் வருவதில்லை?!
"நியூஸ் பேப்பர திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள்... நாடே ரொம்ப கெட்டுப்போச்சுப்பா...!" நம்ம ஊர் டீ கடைகளில் அன்றாடம் இந்த டயலாக்கை கேட்க முடியும். உண்மையில், நாட்டில் நல்ல விஷயங்கள் ஏதும் நடப்பதில்லையா?! பத்திரிக்கை செய்திகள் குறித்து சத்குருவின் நிலைப்பாடு என்ன?! இதில் தொடர்ந்து படித்து அறியுங்கள்!
 
 

"நியூஸ் பேப்பர திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள்... நாடே ரொம்ப கெட்டுப்போச்சுப்பா...!" நம்ம ஊர் டீ கடைகளில் அன்றாடம் இந்த டயலாக்கை கேட்க முடியும். உண்மையில், நாட்டில் நல்ல விஷயங்கள் ஏதும் நடப்பதில்லையா?! பத்திரிக்கை செய்திகள் குறித்து சத்குருவின் நிலைப்பாடு என்ன?! இதில் தொடர்ந்து படித்து அறியுங்கள்!

சத்குரு:

இன்றைய உலகில் பத்திரிக்கைத்துறை மிகப் பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு நடக்கும் செய்திகள் நாளைய வரலாறு. அவ்வகையில் இன்று பிரசுரிக்கப்படும் நாளிதழ்கள் எதிர்கால வரலாற்றுப் பதிப்பு. ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் இன்றைய நாளிதழ்களை நாம் தொகுத்தால், உதாரணமாக, 2006-ம் ஆண்டை வைத்துக் கொள்வோம். 2006-ம் ஆண்டு அச்சிடப்பட்ட எல்லா நாளிதழ்களையும் நாம் தொகுத்தால் அது ஒரு வரலாற்று புத்தகம் போல இருக்கும். துரதிர்ஷ்டம் என்னவெனில், இன்று வெளியாகும் செய்திகளை பார்த்தால், அந்தத் தொகுப்பில் நீங்கள் காணப்போவது, 2006-ம் வருடம், ‘இத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டார்கள், இவ்வளவு பேர் கற்பழிக்கப்பட்டார்கள், இவ்வளவு மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது, இத்தகைய கொடூரமான விஷயங்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன’ என்பவற்றின் பட்டியல் தான்.

உலகில் இருக்கும் இளைஞர்கள் இன்றைய நாளிதழ்களை படித்தால், ‘இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழ முடியாது’ என்ற முடிவிற்கே அவர்கள் வந்து விடுவார்கள். நாம் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை புதிய தலைமுறைக்கு ஏற்படுத்தி தரக்கூடாது.

ஆனால் இது மட்டுமே யதார்த்தம் அல்ல. மிக அற்புதமான விஷயங்களும் இந்த பூமியில் அதே நேரத்தில் நடந்திருக்கின்றன. பல அற்புதமான மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மிகச் சிறந்த பணிகளை செய்து இருக்கிறார்கள். அவை எல்லாம் இன்றைய செய்திகளாக வெளிவருவதில்லை. எதிர்மறையாய் நடக்கும் சில விஷயங்களைப் பற்றி உணர்ச்சிகரமாய் எழுதுவதைவிட, நல்ல விஷயங்களை உருவாக்குவதற்கு மனிதநேயத்தோடு பலர் செயல்படுவதை ஆனந்தமாக எழுதலாம் அல்லவா?

நான், ‘எதிர்மறை விஷயங்களை செய்திகளாக வெளியிடக் கூடாது’ என்று சொல்லவில்லை. ஆனால், எதிர்மறை விஷயங்களில் மட்டுமே நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்றே சொல்கிறேன். எதிர்மறை விஷயங்களில் அதிகமாய் ஆர்வம் காட்டும்போது, நீங்கள் விதைப்பதும் எதிர்மறை தன்மையைத்தான். அதன் பலனும் எதிர்மறையாகத்தான் இருக்கும். குறிப்பாக, உலகில் இருக்கும் இளைஞர்கள் இன்றைய நாளிதழ்களை படித்தால், ‘இந்த உலகத்தில் நல்ல விதமாக வாழ முடியாது’ என்ற முடிவிற்கே அவர்கள் வந்து விடுவார்கள். நாம் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை புதிய தலைமுறைக்கு ஏற்படுத்தி தரக்கூடாது.

உலகின் அழகும், மனித குலத்தின் அழகும், மனித குலத்தின் சிறந்த தன்மைகளும், அதன் மென்மையும், அன்பும், கருணையும் செய்திகளில் வெளிவருவது மிக மிக முக்கியம். அப்போது தான் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதுதான் அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும். நல்வழியில் செல்ல மனிதர்களுக்குள் ஆர்வத்தை தூண்டும்விதமாக எழுதுவது இன்று மிகத்தேவை. இது நடக்காத விஷயங்களை எழுதுவது என்றல்ல. நல்ல விஷயங்கள் பற்பல நம்மை சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம் கவனம்தான் அதை நோக்கி இல்லை.

ஊடகங்களால் தான் இந்த உலகம் பலவழிகளில் வடிக்கப்படுகிறது. மனிதர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள தாக்கம் மிகவும் உறுதியானது. அதை பொறுப்புணர்வோடு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்த முடியும் அல்லவா? ‘இது மிகவும் பொறுப்பான நிலை’ என்பதை புரிந்து கொண்டு, உணர்ச்சியைக் கிளறாமல் பொறுப்புணர்வுடன் அவர்கள் செயல்பட வேண்டும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1