"நாத பிரம்மா" என்றால் என்ன?

சத்குரு, நீங்கள் "நாத பிரம்மா" என்று பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? நாதத்தைப் பயன்படுத்தி முக்தியடைய முடியுமா?
 

Question:சத்குரு, நீங்கள் "நாத பிரம்மா" என்று பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? நாதத்தைப் பயன்படுத்தி முக்தியடைய முடியுமா?

சத்குரு:

பிரபஞ்சத்தின் அடிப்படை ஓசைகள்

‘நாதம்’ என்றால் ஓசை. ‘பிரம்மம்’ என்றால் இறைத்தன்மை, அவ்வளவுதான், அனைத்தும் அதுதான். அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தில் மூன்றுவிதமான ஓசைகள் இருக்கின்றன. இந்த மூன்று ஓசைகளைக் கொண்டு நீங்கள் எந்தவித ஓசையையும் எழுப்பமுடியும். உங்கள் வண்ணத் தொலைக்காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் மூன்று வண்ணங்கள் தான் உள்ளன. அந்த மூன்று வண்ணங்களைப் பயன்படுத்தி எத்தனை வண்ணங்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதேபோல, இந்த மூன்று ஓசைகளைப் பயன்படுத்தி எத்தனை விதமான ஓசைகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

சிவபெருமான் மூன்று முறை ‘ஓம்’ என்று உச்சரித்தால் ஒரு புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

இப்போது ஒரு சின்ன பரிசோதனையாக இதனை உங்களால் கண்டு கொள்ளமுடியும். உங்கள் நாக்கைப் பயன்படுத்தாமலே உங்களால் மூன்று ஓசைகளை எழுப்ப முடியும். அ, உ, ம். உங்கள் நாக்கை அறுத்துவிட்டாலும் கூட இந்த மூன்று ஓசைகளையும் எழுப்பமுடியும். பிற ஓசைகளுக்கெல்லாம் உங்கள் நாக்கைப் பயன்படுத்தவேண்டும். நீங்கள் நாக்கை எதற்குப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த ஓசைகளைக் கலப்பதற்கு. மூன்று ஓசைகள் தான் உள்ளன. அவற்றில் பல்வேறு விதமாக நீங்கள் கலந்து பலப்பல ஓசைகளை எழுப்புகிறீர்கள். உங்கள் வாயிலிருந்து பல லட்சம் ஓசைகளை உங்களால் எழுப்ப முடியும், இல்லையா? ஆனால் பேச முடியாத ஒருவர், அ, உ, ம் என்ற மூன்றை மட்டும் தான் சொல்லமுடியும். வேறு ஓசைகளை எழுப்ப முடியாது. ஏனென்றால் தன் நாக்கைப் பயன்படுத்த அவருக்குத் தெரியவில்லை. இப்போது இந்த மூன்று ஓசைகளையும் பயன்படுத்தினால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது, ‘ஓம்’. ‘ஓம்’ என்பது ஏதோ ஒரு மதத்தின் முத்திரை அல்ல. அதை மதத்தின் முத்திரையாக பயன்படுத்துகிறார்கள் என்றாலும் அது முத்திரை அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தினுடைய அடிப்படை நாதம்.

எது நிஜம்? எது உண்மை?

சிவபெருமான் மூன்று முறை ‘ஓம்’ என்று உச்சரித்தால் ஒரு புதிய பிரபஞ்சத்தையே உருவாக்கிவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அது நிஜமல்ல, ஆனால் உண்மை. நிஜத்திற்கும் உண்மைக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியும்தானே? நீங்கள் ஒரு பெண்ணாக அமர்ந்திருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் உருவாக உங்கள் தந்தையுடைய பங்களிப்பு இல்லையா, என்ன? உங்களுக்குள் உங்கள் தந்தையின் தன்மை இல்லையா? எது நிஜம் என்றால் ஒன்று நீங்கள் ‘ஆண்’ என்கிறீர்கள் அல்லது ‘பெண்’ என்கிறீர்கள். இரண்டுமே நீங்கள் என்பது தான் உண்மை. சிவபெருமான் எங்கோ அமர்ந்து கொண்டு 3 முறை ‘ஓம்’ என்று சொல்லுகிறார் என்பதல்ல பொருள். என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த பிரபஞ்சமே வெறும் அதிர்வு தான் என்பதை இன்றைய நவீன அறிவியல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது. இவர்களுக்குத் தெரியுமா? பொருள்தன்மை என்று ஒன்றுமில்லை.

சார்புநிலைக் கோட்பாடுகள் எல்லாம் வந்த பிறகு, பொருள்தன்மை என்று ஒன்றுமேயில்லை. எல்லாமே அதிர்வுகள்தான். என்ன அதிர்வுகளாக இருந்தாலும் அங்கே ஒரு ஓசை இருக்கத்தான் செய்யும். இப்போது இந்த இரும்புக் கம்பி இருக்கிறது. இது இரும்புக்கம்பி அல்ல. இது ஒருவிதமான அதிர்வு. வேறுவிதமாகச் சொல்வதென்றால் இது வேறு ஒருவிதமான ஓசை. இது ஒரு ஓசை என்றால், நாங்கள் அதை ஏன் கேட்பதில்லை என்று நீங்கள் கேட்கக் கூடும். ஏன் இதை நீங்கள் கேட்பதில்லையென்றால், உங்களுடைய கேட்கும் திறன் ஒரு சிறு அலைவரிசை அளவுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைக் கடந்த ஒன்றை உங்களால் கேட்க முடியாது. உங்கள் அலைவரிசைக்கு அப்பாற்பட்ட அலைவரிசைகளுக்கு, மேல் நிலை அலைவரிசைகள் என்று பெயர். உங்கள் கேட்கும் திறமைக்கு உட்பட்ட அல்லது கீழான அலைவரிசைகளுக்கு கீழ்நிலை அலைவரிசைகள் என்று பெயர்.

நீங்கள் ஒரு ரேடியோவைக் கொண்டு வந்து இங்கே அதே அலைவரிசையில் வைக்கிறீர்கள் என்றால் ஒரு பாடல் கேட்கிறது. அந்தப் பாடல் எங்கிருந்து வருகிறது? வானொலியா பாடுகிறது? இப்போது அந்த ஓசை எங்கே? அது எங்கேயும் இருக்கிறது. காற்றில் இருக்கிறது. உங்களால் அதைக் கேட்க முடியாது. ஏனென்றால் காற்றில் பலவிதமான ஓசைகள் இருக்கின்றன. உங்களால் அவற்றைக் கேட்க முடிவதில்லை. ஒரு வானொலியைக் கொண்டு வந்து அந்த அலைவரிசையில் வைத்தால் திடீரென்று உங்களுக்கு பாடல் கேட்கிறது. உங்கள் வானொலிப் பெட்டி என்ன செய்கிறது? ஒரு விதமான அலைவரிசையை நீங்கள் கேட்க முடியாமல் இருக்கிறது. அதை நீங்கள் கேட்கக் கூடிய அலைவரிசையாக மாற்றுகிறது. இதைத்தான் அது செய்கிறது. எனவே நீங்கள் கேளாதவை என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் வெறும் ஓசைகளாக இருக்கின்றன என்றும் இந்த பிரபஞ்சமே ஓசைதான் என்றும் உங்களுக்குத் தெரிகிறது.

கேதார்நாத்... காந்திசரோவர்...

பல்வேறு கோணங்களில் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் கேதார்நாத்திற்கு போயிருக்கிறீர்களா? இந்தியாவில் பிறந்துவிட்டு இமயமலைக்குச் செல்லவில்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயத்தை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு மிகவும் வயதாவதற்கு முன்பு அல்லது எதற்கும் பயன்படாமல் போவதற்கு முன்பு ஒருமுறையாவது இமாலயத்திற்கு போகவேண்டும். எல்லோரும் செல்லவேண்டும். ஆன்மீகத்தைக் கூட மறந்துவிடுங்கள். அந்த மலைகளே அவ்வளவு அற்புதமானவை. எல்லோரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது அதைப் பார்க்க வேண்டும்.

கேதாரத்திற்கு மேல், காந்திசரோவர் என்று ஒரு இடமிருக்கிறது. பொதுவாக அங்கே யாரும் போவதில்லை. அங்கே ஏறுவது மிகவும் ஆபத்தானது. நான் காந்திசரோவருக்கு ஏறி அங்கிருந்த பாறை ஒன்றிலே அமர்ந்தேன். அங்கு நிகழ்ந்ததை வார்த்தைகளில் சொல்வது கடினம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, என் அனுபவத்தில், சூழ்ந்திருக்கும் அனைத்துமே ஓசையாக, நாதமாக மாறிவிட்டது. என் உடல், அந்த மலை என் முன் இருந்த ஏரி எல்லாமே நாதமயமாக மாறியிருந்தது. நான் நாத வடிவம் எடுத்திருந்தேன். எனக்குள் மிகவும் புதிய வித்தியாசமான முறையில் உள்நோக்கி சென்று கொண்டிருந்தேன். என் வாழ்வில், பல நேரங்களில் சமஸ்கிருத மொழியை பெரிதும் ஈடுபட்டு பாராட்டி இருக்கிறேன். அதைப் பயிலுகிற வாய்ப்புகள் கூட வந்தன. நான் அவற்றைப் பயில வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் சமஸ்கிருதம் படித்துவிட்டால், உடனே வேதங்களையும் உபநிஷதங்களையும் மற்ற நூல்களையும் படிக்கத் தோன்றும். என்னுடைய சொந்தப் பார்வை என்னை தோல்வியுறச் செய்ததேயில்லை. எனவே இந்த புதிய விஷயங்களை எல்லாம் உள்ளே போட்டு குழப்பிக்கொள்ள நான் விரும்பவில்லை. எனவே நான் சமஸ்கிருதம் படிப்பதை பற்றிக் கருதியதேயில்லை. நான் அமர்ந்திருக்கிறேன். என் வாய் மூடியிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் என்னுடைய குரல் மிக சத்தமாக ஒலிக்கிறது. ஏதோ ஒரு ஒலிபெருக்கியில் ஒலிப்பது போல சத்தமாக சமஸ்கிருத பாடலை பாடிக் கொண்டிருக்கிறது. அது...

நாத பிரம்மா விஷ்வஸ்வரூபா
நாத ஹி ஸகல ஜீவ ரூபா
நாத ஹி கர்மா நாதஹி தர்மா
நாத ஹி பந்தன நாதஹி முக்தி
நாத ஹி ஷங்கர நாதஹி ஷக்தி
நாதம் நாதம் ஸர்வம் நாதம்
நாதம் நாதம் நாதம் நாதம்

நாதமே பிரம்மம். நாதமே பிரபஞ்சத்தின் உருவாக்கம். நாதமே உலக உயிர்களாக உருவாகின்றது. நாதமே தளை. நாதமே முக்திக்கான வழி. நாதமே நம்மைப் பிணைக்கிறது. நாதமே விடுவிக்கிறது. நாதமே எல்லாவற்றையும் வழங்குகிறது. நாதமே அனைத்துக்கும் பின்பாக இருக்கிற சக்தி. நாதமே அனைத்தும்.