நாம் அடைய வேண்டிய சுதந்திரம்

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று" என பாரதி பாடினான். இன்றுடன் சுதந்திரம் பெற்று 66 வருடங்கள் நிறைவுற்ற நிலையில், நாம் அடைய வேண்டிய உண்மையான சுதந்திரம் பற்றி சத்குரு பேசுகிறார்.
 

வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று" என பாரதி பாடினான். இன்றுடன் சுதந்திரம் பெற்று 66 வருடங்கள் நிறைவுற்ற நிலையில், நாம் அடைய வேண்டிய உண்மையான சுதந்திரம் பற்றி சத்குரு பேசுகிறார்.

1947-க்கு முன்னர் ‘விடுதலை’ என்றாலே பொதுவாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை என்றுதான் மக்கள் நினைத்தார்கள். ஆங்கிலேயர்கள் போய் விட்டார்கள். அதன் பிறகு அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக வேண்டுமானால் நாம் விடுதலை அடைந்திருக்கலாம். ஆனால் மற்ற வழிகளில் இன்னமும் நாம் விடுதலை அடையவில்லை.

இப்போது என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் சிறிது அதிகம் ஆக வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு எப்போதுமே இருக்கிறது. அந்த நிலையை அடைந்துவிட்டாலும் அதைவிட இன்னும் அதிகம் ஆக வேண்டும் என்ற ஏக்கம் மீண்டும் நீடிக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் நீங்கள் சுதந்திரத்திற்காக ஏங்குகிறீர்கள் என்பதைத்தான். நான் உங்களை 5x5 அறையில் பூட்டி வைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த அறையிலிருந்து நான் உங்களை விடுதலை செய்து 10x10 அறையில் விட்டு வைத்தால், அற்புதமாக உணர்வீர்கள். ஆனால் 24 மணி நேரத்தில் மீண்டும் இன்னமும் அதிக விடுதலைக்கு ஏங்குவீர்கள். பிறகு நான் உங்களை ஒரு மைதானத்தில் விட்டு, ‘எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்; ஆனால் வெளியில் போக முடியாது’ என்று சொல்லி விட்டேன் என்றால், அடுத்து அந்த மைதானத்தின் சுற்றுச்சுவர் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது, அதை உடைத்து வெளியேற வேண்டும் போல் தோன்றுகிறது.

அதாவது உங்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று எல்லைகளை ஏற்றுக் கொள்வதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் எல்லையற்றுப் போக விரும்புகிறீர்கள். இதுதான் ஆன்மீகம். ஆனால் இந்த ஆன்மீக செயல்முறையை தவணை முறையில் முயற்சிக்கிறீர்கள். அப்படியில்லாமல், ஆன்மீக செயல்முறையை தீவிரமாக அணுகும்பட்சத்தில் உண்மையான விடுதலை உடனே கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையான விடுதலையில் திளைக்க வேண்டும் என்பதே என் ஆசை.