முதலைகளை கூண்டிற்கு வெளியே நின்று பார்த்து கைத்தட்டி ரசிப்பதோ, அதற்கு உணவளிப்பதோ சுலபம்தான். ஆனால் முதலை இருக்கும் என்று தெரிந்தே தண்ணீரில் குதித்து விளையாட ஒருவித தைரியம் வேண்டும். சத்குரு செய்த அந்த சாகசங்களை அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்.

சத்குரு:

ஆனந்தத்துக்காக ஆபத்துக்களையும் ரசித்தவன் நான். மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு மேற்கே 'ரங்கன் திட்டு' என்ற பறவைகளின் சரணாலயம். சுமார் 20 அடி அகலத்துக்கு அங்குள்ள நதி சில பாறைகளை ஒட்டி ஓடும். அந்தப் பாறைகளில் முதலைகள் வந்து இளைப்பாறும்.

அச்சத்தைத் தவிர்த்து வாழக் கற்று விட்டால், வாழ்க்கை என்பதை வாய்ப்புகள் நிரம்பியதாகக் காண்பீர்கள்.

சாகசம் செய்வதாக யாராவது சொன்னால், அந்த நதிப்பக்கம் வரச்சொல்வோம் முதலைகளைப் பார்த்த உடனேயே பாதிப்பேரின் உடைகள் பயத்தில் நனைந்துவிடும். 'முதலைதானே... சுலபமாகச் சமாளிக்கலாம். அது வாயைப் பிளக்கும்போது அதன் கண்களில் விரல்களால் குத்தினால், முதலை மிரண்டு ஓடிவிடும்' என்று வார்த்தைகளால் பீற்றியவர்கள், அவர்களை அங்கே அழைத்துச் சென்று நீந்திக்காட்டச் சொன்னபோது, நடுங்கிச் செத்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால், அதே இடத்தில் நானும் என் நண்பர்களும் தொப்தொப்பென்று தண்ணீரில் குதிப்போம். முழு வேகத்தில் அக்கரைக்கு நீந்துவோம். ஆட்கள் தண்ணீரில் குதிக்கும் சத்தம் கேட்டுப் பாறையில் கிடக்கும் முதலை, நதியின் மெள்ள நழுவி இறங்கும். அப்படி அது இறங்கி நீந்தி வருவதற்குள் அக்கரையை அடைந்து ஓடிவிட வேண்டும்.

அதில் உள்ள ஆபத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எல்லா முதலைகளும் பாறையில்தான் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. தண்ணீரில் ஒரு முதலை இருந்தால்கூட, நாங்கள் அதற்கான உணவாகிவிடுவோம். ஆனாலும், அந்த அபாயகரமான விளையாட்டில் பலமுறை ஈடுபட்டு இருக்கிறேன். அதில் கிடைத்த அதீதக் கிளர்ச்சிக்கு வேறு இணை இல்லை. என்ன செய்வது? அபாயத்துக்கான தாகம் எனக்கு அதிகம்.

அதே சமயம், கவனமில்லாமல் வறட்டு ஜம்பத்துக்காக ஆபத்துக்களைத் தேடிப் போகிறவன் அல்ல, நான். இன்றைக்குக் கூட சாலைகளில் மிக அதிகமான வேகத்தில் என்னால் செல்ல முடிகிறது என்றால், திட்டமிட்ட அணுகுமுறையுடன்தான் வாகனத்தைச் செலுத்துகிறேன். அதிவேகத்தில் ஆபத்து இல்லாமல் காரைச் செலுத்த முடிவதால் பல சந்தர்ப்பங்களில் என் பயண நேரம் திட்டமிட்டதைவிடக் குறைவாகவே அமைந்திக்கிறது. அண்மையில் மதுரைக்கு காரில் சென்றபோது, என்னை அவர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்துக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டேன்.

விபத்துக்கு இடம் கொடுப்பதுபோல் வாகனத்தை ஏன் வேகமாகச் செலுத்துகிறீர்கள் என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆபத்து என்பது 40 கி.மீ வேகத்தில் சென்றால் கூட இருக்கிறது. தெருவை நடந்து கடக்கும்போதுகூட ஒருவர் விபத்தைச் சந்திக்கலாம்.

ஒருமுறை, பிரெஞ்ச் ராணுவத்தின் ஜெனரல் செரின் தன் சிப்பாய்களை எதிரிகள் முகாமை ஒட்டியிருந்த இடிபாடுகளில் நடத்திக் கொண்டிருந்தார்.

'சீரான வேகத்தில் நடந்து இந்த ஆபத்தான பகுதியைக் கடந்துவிட வேண்டும்' என்று சிப்பாய்களிடம் அவர் சொன்னார்.

'சொல்வது சுலபம். உங்களுக்கு என்ன? வசதியாக குதிரை மீது அமர்ந்து வருகிறீர்கள். நடப்பவர்களுக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றி உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது?" என்று ஒரு சிப்பாய் முணுமுணுத்தான்.

இது செரினின் காதில் விழுந்துவிட்டது. அவர் குதிரையிலிருந்து இறங்கினார். அந்தச் சிப்பாயைக் குதிரையில் அமர்ந்து வரச் சொல்லிவிட்டு, அவர் மற்றவர்களுடன் நடந்தார். சிறிது தூரம் கூடக் கடக்கவில்லை. எதிரி முகாமிலிருந்து துப்பாக்கிகள் வெடித்தன. நடந்து சென்ற சிப்பாய்கள் சட்டென்று குனிந்து படுத்து, தோட்டாக்களிலிருந்து தப்பினர். குதிரை மீது அமர்ந்திருந்த சிப்பாயின் நெஞ்சில் தோட்டா பாய்ந்தது.

'உயரத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைப்பது எவ்வளவு தவறு என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்' என்றார் செரின்.

கவனம் குறைவாக இருப்பவர்களுக்கு ஆபத்து எங்கேயும் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், வீட்டில் உட்கார்ந்திருப்பவரைவிட விளையாட்டில் பங்கு கொள்பவர்கள் ஆபத்துக்களுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா? கால்பந்து ஆடுபவர்கள், கிரிக்கெட் ஆடுபவர்கள் போன்றவர்கள் மைதானத்தில் காயப்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் அதிகம் அல்லவா? அதற்காக விளையாடாமல் இருக்க முடியுமா?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வும், மரணமும் கூட்டாகத்தான் வரும். வாழ்வு நேர வேண்டும் என்றால், மரணம் நேர்வதற்கும் வாய்ப்பு அளித்துத்தான் ஆக வேண்டும். மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக வாழ நினைத்தால், கல்லறைக்குள் போய்த்தான் முடங்க வேண்டும்.

வாழ்க்கையை அச்சத்துடன் அணுகினால், எல்லாமே அபாயங்களதாகத்தான் தோன்றும். அச்சத்தைத் தவிர்த்து வாழக் கற்று விட்டால், வாழ்க்கை என்பதை வாய்ப்புகள் நிரம்பியதாகக் காண்பீர்கள். எதை அணுகுவதானாலும் அதற்கான தகுதியை முழுமையாக வளர்த்துக் கொண்டு அணுகுங்கள். அபாயங்கள் விலகி, வெற்றிகள் கிட்டும்!