முற்பிறவிகளில் தியானலிங்கம் நிறைவேறாதது ஏன்?
தியானலிங்கத்தை உருவாக்குவதற்காகவே பிறப்பெடுத்த சத்குரு ஸ்ரீ பிரம்மாவால் அந்தப் பிறவிலேயே உருவாக்க முடியாததற்கு அவருடைய கோபமும் ஒரு காரணம். அவர் எத்தகைய கோபக்காரர்? உடல் துறந்த பாலயோகி ஒருவரின் உடலில் புகுந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ஆனது? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வாரப்பகுதி.
 
 

தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 7

தியானலிங்கத்தை உருவாக்குவதற்காகவே பிறப்பெடுத்த சத்குரு ஸ்ரீ பிரம்மாவால் அந்தப் பிறவிலேயே உருவாக்க முடியாததற்கு அவருடைய கோபமும் ஒரு காரணம். அவர் எத்தகைய கோபக்காரர்? உடல் துறந்த பாலயோகி ஒருவரின் உடலில் புகுந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ஆனது? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வாரப்பகுதி.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

சத்குரு ஸ்ரீபிரம்மாவிடம் தீவிரம் இருந்த அதே அளவுக்குக் கோபமும் இருந்தது. தியானலிங்கம் அமைக்க பலரின் ஆதரவும் ஆத்ம சாதனைகளும் தேவைப்பட்டது. ஆனால், அவரிடம் தன் நோக்கத்தைச் செயலாக்கும் திறன் போதுமான அளவுக்கு இல்லை. உணர்வில் தீவிரமாக இருந்த அவர், கடுங்கோபத்துக்கும் சொந்தக்காரராக இருந்ததால், தனக்குத் தேவையான ஆதரவுக் கரங்களை ஒன்றிணைக்க முடியாமல் போனது.

சத்குரு ஸ்ரீபிரம்மா தனது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற பாலயோகியின் உடலை ஒரு கருவியாக உபயோகப்படுத்த நினைத்து, அவர் துறந்த உடலுக்குள் புகுந்துகொண்டார்.

அவரோடு சேர்ந்து ஆண்களும் பெண்களும் ஆத்ம சாதனைகளில் ஈடுபட்டதை சமூகம் ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை. தவறான அபிப்பிராயங்களைக் கற்பனைசெய்து அவரை எதிர்க்கத் துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் சத்குரு ஸ்ரீபிரம்மா தன் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தன் குருவின் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற உச்சமான கோபத்தில் மனம் போன திசையில் நோக்கம் எதுவுமின்றி நடக்கத் துவங்கினார். அவர் கோபத்தைப் புரிந்துகொண்ட சீடர்கள் சிலர் மட்டும் தொடர்ந்தார்கள்.

சத்குரு ஸ்ரீபிரம்மா நடந்து நடந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் ஒரு ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார். அப்போதுதான் அவர் தியானலிங்கத்தை இந்தப் பிறவியில் தன்னால் உருவாக்க இயலாது என்பதை உணர்ந்தார். அங்கேயே யார், யார் இதில் முழு மூச்சுடன் ஈடுபடுவது, அவர்கள் அடுத்த பிறவியில் யார், யாரின் கருவில் பிறந்து, வளர்ந்து எப்படி தியானலிங்கத்தின் பணிகளை
முடிக்க வேண்டும் என்று தீவிரமான முடிவுகளை எடுத்தார்.

ஆனாலும் இன்னொரு முயற்சி செய்து பார்க்க விரும்பின ஸ்ரீபிரம்மா ஒரு காரியம் செய்தார். வஜ்ரேஸ்வரியில் ஒரு யோகி தன் 26வது வயதில் தன் உடலை உதறியிருந்தார். அவர் பெயர் சதானந்தர். அவர் ஒரு பாலயோகி. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் சமாதி நிலையிலேயே இருந்தவர். சமாதி நிலையிலிருந்து வெளியே வந்த சதானந்தர், தனது ஆன்மீக அனுபவங்களைப் பலருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.

ஆனால் அவருக்கு அமைந்த சொற்பமான நான்கைந்து சீடர்களும் அற்பமான சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் உண்மையான சீடர்கள் இல்லை என்பதை உணர்ந்த பாலயோகி கோபம்கொண்டார். அந்தக் கோபத்தில் தன் உடலைத் துறந்தார்.

சத்குரு ஸ்ரீபிரம்மா தனது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற பாலயோகியின் உடலை ஒரு கருவியாக உபயோகப்படுத்த நினைத்து, அவர் துறந்த உடலுக்குள் புகுந்துகொண்டார்.

ஒரே நேரத்தில் ஸ்ரீபிரம்மாவாகவும், பாலயோகியின் உடலிலும் சிறிது காலம் வாழ்ந்தார். பாலயோகியின் உடலில் இருந்து கொண்டு புதிதாக நிறைய சீடர்களைச் சேகரித்து, அவர்களுக்கு தீவிரமான யோகப் பயிற்சிகளைக் கொடுத்து, அவர்களின் துணையுடன் தியானலிங்கம் நிறுவப் பெரிதும் முயன்றார். ஆனால், அந்தச் சீடர்களால் அவரின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட ஸ்ரீபிரம்மாவும் பாலயோகியின் உடலைத் துறந்தார்.

அதன் பிறகு கோவை வந்த ஸ்ரீபிரம்மா வெள்ளியங்கிரி மலைக்கு வந்தபோது, அடிவாரத்தில் பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தார்கள்.

அவர்களிடம், ‘இவன் திரும்ப வருவான்’ என்று மட்டும் சொன்னவர், மலையின் மீது ஏறத் துவங்கினார். ஏழாவது மலையின் உச்சியை அடைந்த அவர் தன் உடலின் ஏழு சக்கரங்களின் வழியாகவும் உடலைவிட்டு வெளியேறி விண்ணில் கலந்தார். அதனாலேயே அவரை 'சக்ரேஸ்வர்' என்றும் அழைப்பதுண்டு.

ஸ்ரீபழனி சுவாமிகளின் உத்தரவை நிறைவேற்ற சிவயோகி முதலில் முயன்றார்; தோற்றார்! அவரே அடுத்த பிறவியில் ஸ்ரீபிரம்மாவாகப் பிறந்து தன் மூலமும், பாலயோகியின் உடல் மூலமும் மீண்டும்
முயன்றார்; தோற்றார்!

இறுதியாக மூன்றாவது பிறப்பாக கர்நாடக மாநிலதில் பிறந்தவர்தான் நமது சத்குரு ஜகி வாசுதேவ். இந்தப் பிறவியில் பல வருட முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு, தமது நோக்கத்தில் உறுதியாக நின்று, சரியான சீடர்களின் ஒத்துழைப்பாலும் ஆதரவாலும், தியானலிங்க உருவாக்கப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்.


அடுத்தவாரம்...

அடுத்த வாரத்தில், சாகசங்கள் நிறைந்த சத்குருவின் பள்ளி-கல்லூரி வாழ்க்கையை விவரிக்கும் திரு.பிரபாகர் அவர்கள், அதற்கடுத்த வாரப் பகுதியில் சத்குருவிற்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்த நிகழ்வையும் விவரிக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய பகுதிகளுக்குக் காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 2 மாதங்கள் க்கு முன்னர்

What a being you are Sadhguru? I like you so much!