"முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை!" இப்படி ஒரு சொல்லாடல் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் ஏதும் உண்மை உள்ளதா? அல்லது இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஒன்றா? இது குறித்த சத்குருவின் பார்வை, இங்கே!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிரகங்களின் நிலையை வைத்து ஜோதிடர்கள் எவ்வளவோ ஆரூடங்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். சூரியனையும், சந்திரனையும் கூட அவர்கள் கிரகங்களின் பட்டியலில் சேர்த்திருப்பது வேடிக்கை. இந்த முப்பது வருட ஆரூடமும் அப்படிப்பட்ட வேடிக்கைதான்.

உங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள்.

முப்பது வருடங்களை விடுங்கள். முப்பது விநாடிகள் கூட தொடர்ந்து ஆனந்தமாக இருக்க மனிதன் கற்றுக் கொள்ளாததற்குக் காரணமே, தன்னை நம்பாமல், எங்கோ இருக்கும் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் அவன் நம்பிக் கொண்டிருப்பதுதான்.

உங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல. ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள். தங்கள் அன்பினால் கட்டுப்படுத்தத் தெரியாமல், பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று சொல்லி உங்களுக்குள் ஒரு பயத்தை விதைக்கிறார்கள்.

மற்றபடி, நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அதற்கு முழுமையான காரணம், நீங்கள்தான். வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் கவனமில்லாமல் தீர்மானித்திருக்கிறீர்கள். ஆசைப்பட்டதற்கு உரியவராக உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. அது உங்கள் தவறுதானே தவிர, முப்பது வருட விதியின் விளையாட்டல்ல.

இன்றைக்கு புதிது புதிதாக கிரகங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற கிரகங்களால் ஏற்பட்டு வந்த பாதிப்பை எல்லாம் இந்த புதிய கிரகங்கள் தீர்த்து வைக்க வந்திருக்கின்றன என்று நம்பிவிட்டுப் போங்களேன்.

பிறப்பின் காரணமாகவும், வளர்ப்பின் மூலமாகவும் சில அடிப்படை குணங்களை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சேகரித்துக் கொண்டு விட்டீர்கள். அந்த குணங்கள் உங்கள் பாதையை ஓரளவிற்குத் தீர்மானிக்கின்றன. அதுகூட ஓரளவிற்குத்தான். மற்றபடி, கவனத்தோடு செயல்பட்டால், உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பப்படி திருத்தி எழுதிக் கொள்ள முடியும்.

முப்பது வருடம் பற்றிய முட்டாள்தனமான வாசகங்களை நம்பாமல், உங்களை நம்பி வாழ்க்கையை உரியபடி முழு விழிப்பு உணர்வுடன் நடத்திப் பாருங்கள். இந்த பூமியில் முப்பதென்ன, முப்பதாயிரம் வருடங்களுக்குக் கூட ஆனந்தம் நிலைத்திருக்க உங்களால் செய்ய முடியும்.