முன்னோர்களுடன் அடையாளம் அதிகமானால்...
முன்னோர்களை சந்தோஷப்படுத்த கிருஷ்ணதேவராயர் செய்த அபத்தத்தை தெனாலிராமன் எப்படி புரியவைத்தார் என்பதைக் கூறும் சத்குரு, உறவுகளுடன் அதிக அடையாளம் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைக்கிறார்.
 
 

தென்னிந்தியாவில், கிருஷ்ணதேவராயர் என்னும் ஒரு அரசர் இருந்தார். அவரிடம் தெனாலிராமன் என்னும் விதூஷகர் ஒருவர் இருந்தார். ஒருநாள், அரண்மனை நாவிதர், கிருஷ்ணதேவராயருக்கு முடிதிருத்திக் கொண்டிருந்தார். அங்கே ஒரு காகம் வந்தமர்ந்து, தன் வழக்கப்படி “கா..கா..” என்று கரையத் துவங்கியது. அதனால் கவனம் கவரப்பட்ட நாவிதர், முடிதிருத்துவதை நிறுத்திவிட்டு, காகத்தின் கரைதலைக் கவனிக்கலானார். கிருஷ்ணதேவராயர் அதைக் கண்டு, “என்ன இது, அந்தக் காகம் கரைவதை உன்னால் புரிந்துகொள்ள முடிவதைப் போல, அப்படி என்ன கவனிக்கிறாய்?” என்று கேட்டார்.

நாவிதரும், “சற்றே பொறுத்திருங்கள் அரசே, அது ஏதோ ஒரு சேதியைக் கூறுகிறது”, என்று கூறிவிட்டு, வெகுநேரம் மிகவும் கூர்ந்து கவனமாகக் கேட்டார். பிறகு தன் தலையைப் பலமாக உலுக்கிக் கொண்டார்.

கிருஷ்ணதேவராயர் மிகவும் ஆர்வமாகிவிட்டார், “இது என்ன, உனக்குக் காகத்தின் மொழி புரிகிறதா?”

“ஆமாம்”

“அது என்ன கூறுகிறது?”

நாவிதர் கூறினார், “அரசே, இந்தக் காகம் தங்கள் முன்னோர்களின் தூதுவனாக, சொர்க்கத்திலிருந்து வந்துள்ளது. இது என்ன கூறுகிறதென்றால், அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள், ஆனால் கவனிப்பாரற்று இருக்கிறார்களாம். அங்கே அவர்களின் வெளிப்புறத் தேவைகள் கவனிக்கப்படுகின்றன, ஆனால் அவர்களை சந்தோஷப்படுத்த எவருமில்லை. தங்களின் உதவிக்காக உண்மையிலேயே அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தக் காகத்தைத் தூதுவனாக அனுப்பியுள்ளனர். தங்களுடைய முன்னோர்களை மகிழ்வூட்டுவதற்கு யாரையாவது நாம் சொர்க்கத்திற்கு அனுப்பவேண்டும். இப்படி உற்சாகமற்ற நிலையில் தங்களின் முன்னோர்களை நாம் எப்படி விடமுடியும்?”

கிருஷ்ணதேவராயர் உடனே மிகவும் உணர்ச்சிமயமாகிவிட்டார். “என்னுடைய முன்னோர்கள் கவனிப்பின்றியும், மகிழ்வில்லாமலும், சலிப்பினால் துன்பம் கொள்வதா? அவர்கள் சிறப்பாக மகிழ்ச்சி அடையுமாறு நான் யாரையாவது அனுப்பவேண்டும். நம் நாட்டில் சிறந்த நடனக் கலைஞர், பாடகர் மற்றும் பலகலை விற்பன்னர்கள் யாரெல்லாம் உள்ளனர்”, என்று கேட்டார்.

இதைக் கேட்ட அரசவைக் கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து, “மேன்மை தங்கிய அரசே, தங்களைத் தவிர வேறு எவர் முன்னாலும் எங்களால் பாடமுடியாது என்றாலும், தங்கள் விருப்பம் இதுவானால், தங்களது முன்னோர்களுக்காக இப்போதே சொர்க்கம் சென்று சேவை செய்யவும் எங்களுக்குச் சம்மதம்” என்றெல்லாம் மிகைப்படுத்திக் கூறினார்கள். பிறகு அவர்கள், “இல்லையில்லை, தங்களுடைய முன்னோர்களுக்கு நாம் சிறந்ததில் சிறந்ததையே அனுப்பவேண்டும். ஒரு பாடகரை எப்படி அனுப்ப முடியும்? எவ்வளவு நேரம் அவரால் மகிழ்விக்க முடியும்? தொடர்ந்து இரண்டு நாட்கள் பாடலையே கேட்டால், சலிப்புதான் ஏற்படும். நாட்டியமும் அப்படித்தான். ஆகவே தொடர்ச்சியாக அவர்களை மகிழ்விக்கக்கூடிய ஒருவரை நாம் அனுப்பவேண்டும். அதற்குத் தெனாலிராமனை விட வேறு யார்தான் பொருத்தமாக இருக்க முடியும்? அவர் மிகவும் அறிவாளியாக இருப்பதால் தங்களுடைய முன்னோர்களை அவர் என்றென்றும் சந்தோஷப்படுத்துவார். அவர்தான் இதற்குச் சிறந்தவர் என்று ஒருமனதாகத் தெரிவித்தனர்.

தெனாலிராமனைப் போன்று வேறு எவருமில்லை என்பதை கிருஷ்ணாதேவராயரும் கூட ஏற்றுக்கொண்டார். ஒரு சிறந்த விதூஷகரைப் பிரிய அரசருக்கு மனமில்லை என்றாலும் அவரது முன்னோர்களுக்காக சம்மதித்தார், “சரி, நாம் தெனாலிராமனை அனுப்புவோம்”, என்று கூறினார்.

தெனாலிராமன் மன்னர் முன்னர் அழைத்து வரப்பட்டார். முன்னோர்களுக்குச் சேவை செய்வதற்காக சொர்க்கத்திற்கு அவர் செல்ல வேண்டியிருந்ததைக் கேட்டறிந்தார். உடனடியாகச் செயலில் இறங்கிய அவர், “மேன்மை தங்கிய அரசே, இதுவே என் தலையாய விருப்பம். அந்த அளவுக்கு இது பெருமை சேர்க்கும் ஒன்று. நான் சொர்க்கம் செல்கிறேன். அங்கே எப்படிப் போகவேண்டும் என்ற முழு வழிமுறையையும் நான் அறிந்திருக்கிறேன்”, என்றார்.

ஒருவரை சொர்க்கத்திற்கு எப்படி அனுப்பவேண்டும் என்று காகம் நாவிதரிடம் கூறியிருந்தது. “சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டிய மனிதனை தென்திசை பார்த்து அமரவைத்து, அவரைச் சுற்றிலும் சந்தனக் கட்டைகள், கற்பூரம், நெய் ஆகியவற்றைக் குவிக்கவேண்டும். அந்தக் குவியலின் உயரம், ஒரு முழு வளர்ச்சி அடைந்த யானையின் உயரத்திற்கும் கூடுதலாக இருக்கவேண்டும். இந்தக் குவியலுக்குள் அந்தமனிதனை வைத்து, நெருப்பிட வேண்டும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள் எரியவிட்ட பிறகு, அந்தமனிதர் ஆவியாகி, சுவர்க்கத்திற்குச் சென்று, முன்னோர்களுக்குச் சேவை செய்வார்”.

தெனாலிராமனும், “இதுதான் சரியான முறை, மிகச் சிறந்தவழியும்கூட. நான் சொர்க்கம் சென்று தங்கள் முன்னோர்களுக்குச் சேவை செய்வேன். இதற்கான முன்னேற்பாடுகளை நானே செய்ய விரும்புகிறேன். நான் அங்கு போவதற்கு முன்னால், என் உடலையும், மனதையும் புனிதமாக்கிக் கொள்ளவேண்டும். அதற்காக என்னிடமுள்ள அனைத்து தோஷங்களையும் நீக்கிவிட விரும்புகிறேன். 30 நாட்கள் மட்டும் அவகாசம் தாருங்கள்” என்றார்.

ஒரு பிரம்மாண்டமான இடம் தயாரானது. தெனாலிராமன் நேரடியாகவே, மொத்த ஏற்பாட்டையும் தன் மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்தார். தனக்கு நம்பகமான ஒரு வேளையாளை மட்டும் வைத்துக்கொண்டு, அவர் விரும்பிய விதமாக அந்த இடத்தை உருவாக்கினார். தெனாலிராமனுக்கு தன் முன்னோர்களின் மீது இருந்த அர்ப்பணிப்பு உணர்வைக் கண்டு கிருஷ்ணதேவராயர் மனம் நெகிழ்வடைந்தார்.

குறிப்பிட்ட நாளன்று தெனாலிராமன் வைக்கோற்போருக்குள் முதலில் சென்றார். அதன் மீது கட்டைகள், நெய், கற்பூரம் மலையாகக் குவிக்கப்பட்டு, பின்பு தீயிடப்பட்டது. 3 நாட்கள் எரியூட்டப்பட்ட பிறகு, அங்கே சாம்பலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தெனாலிராமன் மறைந்து விட்டார். பலமாதங்கள் கடந்தன. அந்தக் காகம் மறுபடியும் வரவில்லை, எனவே தனது முன்னோர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது அரசருக்குத் தெரியவில்லை. தினமும் காகங்கள் வரும்போது நாவிதரிடம், “அது என்ன கூறுகிறது”, என்று கேட்டவாறு இருந்தார். நாவிதரும், “இது தூது வந்த காகம் அல்ல”, என்றே கூறிக் கொண்டிருந்தார். எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்தபோது, தெனாலிராமன் நீண்டு வளர்ந்த தலை முடியோடும், தாடியோடும் வந்து சேர்ந்தார். கிருஷ்ணதேவராயர் முன்பாக வந்து தலைவணங்கினார். சொர்க்கத்திலிருந்து தெனாலிராமன் திரும்பி வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அரசர், “என்ன நடக்கிறது? என்னுடைய முன்னோர்கள் நலமா? அவர்களை சந்தோஷமாக வைத்திருந்தீர்களா?” என்று கேள்விகளை அடுக்கினார்.

“நான் அவர்களை நன்கு சந்தோஷப்படுத்தினேன். எனது நகைச்சுவையால் அவர்கள் திக்குமுக்காடிவிட்டனர். உண்மையிலேயே அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அரசே, அவர்களுக்கு ஒரே ஒரு பிரச்சனை உள்ளது”.

“என்ன பிரச்சனை?”

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரிடம் கூறினார், “சொர்க்கத்தில் நாவிதர்கள் இல்லை. பாருங்கள், எனக்கே சவரம் செய்துகொள்ள முடியவில்லை. தங்களின் முன்னோர்கள் பல வருடங்களாக அப்படியே இருப்பதால், தங்களது நீளமான தாடியினாலேயே தடுக்கி விழுந்து விடுகின்றனர். அதனால் கழுத்தைச் சுற்றிவிடப்படுகின்ற நீண்ட தாடியால் அவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல நாவிதர் தேவை. நாம் நல்லதொரு நாவிதரை அனுப்பவேண்டும்.”

நல்ல நாவிதர் என்றால் அது அரண்மனை நாவிதர்தான். உடனே கிருஷ்ணதேவராயர் கூறினார், “நான் என்னுடைய தனிப்பட்ட நாவிதரை அனுப்புகிறேன்.”

நாவிதர் நடுங்கிவிட்டார். கிருஷ்ணதேவராயர் பாதங்களில் வீழ்ந்து உண்மையை ஒப்புக்கொண்டார்.

நீங்கள் எதனுடனாவது அடையாளம் கொண்டுவிட்டால், உங்களுடைய புரிதல் வெகுவாகச் சிதைவுபடுகிறது. நீங்கள் பிறந்தநாள் முதற்கொண்டே, உங்களை உங்கள் குடும்பத்துடன் அடையாளப்படுத்தி உங்கள் பெற்றோர் பிரச்சாரம் செய்தே வந்துள்ளனர். உங்கள் சமூகத்துக்கும், ஜாதிக்கும், மதத்திற்குமான உங்களது விசுவாசத்தை அதிகரிக்கச் செய்ய வேறுசிலர் பிரச்சாரம் செய்கின்றனர். உங்களது தேசத்திற்கு நீங்கள் விசுவாசமாக இருப்பதற்காக, வேறுசிலர் பிரச்சாரம் செய்கின்றனர். பல நிலைகளிலும், நீங்கள் எதடனுடனாவது மிகவும் ஆழமாக அடையாளம் கொள்வதற்காக மக்கள் எப்போதும் பிரச்சாரம் செய்கின்றனர். அப்போதுதான் அவர்கள் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அப்படிச் செய்கின்றனர்.

பிரச்சாரம் செய்வதினாலேயே எதை வேண்டுமானாலும் உங்களை நம்பச் செய்துவிட முடியும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தீவிரமாகப் பிரச்சாரம் செய்து உங்களை எதை வேண்டுமானாலும் வணங்கச் செய்யமுடியும், எதையும் நேசிக்க வைக்கமுடியும், எதற்காகவும் உங்கள் உயிரைவிடச் செய்யமுடியும். உங்களின் அடையாளத்தை மட்டும் பலமாக்கிவிட்டால் இதற்குப் போதுமானது. அந்த விஷயத்தில் உங்களுடைய அடையாளம் எவ்வளவு வலிமையாக உள்ளதோ, அந்த அளவுக்கு ஆழமாக நீங்கள் அந்த விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இந்த மாதிரியான பிரச்சாரத் திணிப்புகளால், மனிதர்கள் மிகவும் அடையாளப்பட்டு விடுகின்றனர். பிறகு அனைத்தும் உருக்குலைந்து விடுகிறது.

நீங்கள் ஒரு சுதந்திரமான மனிதராக இருப்பதை இங்கே ஒருவரும் விரும்புவதில்லை. ஏனென்றால் சுதந்திரத்தன்மை குறித்து அவர்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. கட்டுகளற்ற, சுதந்திரமான ஒருவர் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவார் என்றே நம்புகிறார்கள். ஒருவர் உண்மையாகவே சுதந்திரமானவராக இருந்தால், பொறுப்பற்ற அல்லது தீமை ஏற்படுத்தக்கூடிய செயலை ஏன் செய்யவேண்டும்? சுதந்திரமற்ற காரணத்தினால்தான் ஒருவர் பொறுப்பற்ற செயல்களைச் செய்கிறார். மனதில் அவர் சுதந்திரமின்றி இருக்கிறார். தன்மீது மட்டும் மிகவும் தீவிரமாக அடையாளம் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரால் வேறு யாருக்கோ தீங்கு செய்யமுடிகிறது. தன்னிடமேகூட அடையாளம் கொள்ளாத ஒரு மனிதரிடமிருந்து எந்தத் தீங்கும் வெளிப்படமுடியாது.

அடையாளமின்றி இருத்தல் என்பது, துரதிருஷ்டவசமாக, பற்றில்லாமை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பற்றற்றநிலை என்றால், நீங்கள் உங்களது குடும்பத்திலிருந்தோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையின் தன்மைகளிலிருந்தோ விலகிவிடுவது என்பது பொருள் அல்ல. உங்கள் குடும்பத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்வது மிகவும் எளிது. அவர்கள் வேண்டாதவர்கள் ஆகிவிட்டால், நீங்கள் எளிதாக உங்களை விடுவித்துக் கொள்வீர்கள். அது பற்றற்ற தன்மை அல்ல. பற்றில்லாமை என்பது, நீங்கள் உங்களை இந்த “உடல்” தன்மைகளிலிருந்தும், “மனம்” என்ற தன்மைகளிலிருந்தும், விடுவித்துக் கொள்வது. ஏனென்றால் இந்த இரண்டுமே வெளியிலிருந்து சேகரிக்கப்பட்டவை.

இந்த உடலானது நீங்கள் சேகரித்தது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு; காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு; காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு; கூடுதலாக அவ்வப்போது நொறுக்குத் தீனி இப்படி சேகரித்ததுதான் இந்த உடல். அதைப்போல, நீங்கள் “என் மனம்” என்று கூறுவதும் ஒரு குவியல்தான். ஐம்புலன்கள் வாயிலாக நீங்கள் பெற்ற பதிவுகளெல்லாம் சேர்ந்து மனம் என்பது உருவானது. நீங்கள் சேகரித்தவை உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், அவையே நீங்களாக இருக்கமுடியாது. இப்படி உடல், மனம் என்னும் இரண்டு வித சேகரிப்புகள் இருக்கிறது என்றால், இவற்றைக் காட்டிலும் மிகுந்த அடிப்படையான வேறொன்று உங்களுக்குள் இயற்கையாகவே இருக்கவேண்டும்.

யோகத்தின் ஒட்டு மொத்த வழிமுறையும், அதன் தொழில்நுட்பமும் ஒரு போதனையல்ல, ஒரு தத்துவம் அல்ல, ஒரு நம்பிக்கை முறையல்ல அல்லது ஒரு மதம் அல்ல. யோகா என்பது, நீங்கள் சேகரித்தவைகளின் வரையறைகளையும் கடந்து, அந்த சேகரிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக உள்ள வேறொரு பரிமாணத்தை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான ஒரு முழுமையான தொழில்நுட்பம். நாம் வழங்குகின்ற உள்நிலைப் பொறியியல் என்னும் ஈஷா யோகா வகுப்பின் அடிப்படை இதுதான். அந்த யோக செயல்முறைகளுக்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளும்போது, நான், என் உடல், என் மனம் இவற்றிற்கிடையில் ஒரு தெளிவான இடைவெளி இருக்கும். இந்த ஒரு சிறிய இடைவெளி, உங்களுக்கும் மற்றும் உங்கள் உடல், மனம் இவற்றின் செயல்பாட்டுக்கும் இடையே தோன்றிவிட்டால், பிறகு மனம் ஒரு குழப்பமாக இருக்காது. அது ஒரு மகத்தான ஒத்திசைவாகவே இருக்கும். அதுவே உங்களை மாபெரும் சிகரங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1