முகத்தைத் திருப்பிக் கொள்பவர்களிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?
'கருணை காட்டுகிறேன்', 'அன்பு காட்டுகிறேன்' என்று நாம் சொல்லும்போதும், நினைக்கும்போதும், பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கும்போதும் எத்தனை பொய்யான, போலியான மனிதர்களாய் நாம் இருக்கிறோம்... ஆம், நாம் போர்த்திக் கொண்டு வலம்வரும் போர்வைகளை இங்கே கிழித்து நம் உண்மை முகத்தை நமக்கே காண்பிக்கிறார் சத்குரு...
 
முகத்தைத் திருப்பிக் கொள்பவர்களிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?, Mugathai thiruppikolbavargalidam eppadi anbaga irukka mudiyum?
 

'கருணை காட்டுகிறேன்', 'அன்பு காட்டுகிறேன்' என்று நாம் சொல்லும்போதும், நினைக்கும்போதும், பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கும்போதும் எத்தனை பொய்யான, போலியான மனிதர்களாய் நாம் இருக்கிறோம்... ஆம், நாம் போர்த்திக் கொண்டு வலம்வரும் போர்வைகளை இங்கே கிழித்து நம் உண்மை முகத்தை நமக்கே காண்பிக்கிறார் சத்குரு...

Question:நான் புன்னகைத்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்பவர்களிடத்தில் எப்படி அன்பாக இருக்க முடியும்?

சத்குரு:

"அன்பாக இருப்பது என்பது ஒரு உள்தன்மை. அன்பாயிருப்பதாகத் தெருவெங்கும் அறிவித்துக் கொண்டே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் அன்பாயிருப்பதற்கு, அடுத்தவர்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, உங்களுக்கு அன்பு என்றால் என்ன என்று முழுமையாகப் புரியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

அன்பு என்பது எதிர்பார்ப்பு இல்லாதது. அடுத்தவர்களும் பதிலுக்கு அன்பாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லாதது.

ஆயிரம் பேருக்குச் சேவை செய்தாலும் இரண்டே பேருக்கு வீட்டில் சமைத்தாலும் நீங்கள் அதே அளவு அன்பை மனதில் உணர முடியும்.

அன்பாக இருப்பது புத்திசாலித்தனம் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கிறது. அப்புறம் என்ன? கோபத்தைத் தூண்டும் காரியத்தை ஒருத்தன் செய்தால், போட்டி போட்டுக் கொண்டு, 'உன்னை விட அதிக மூடனாக்கும் நான்' என்று நிரூபித்துக்காட்ட விரும்புகிறீர்களா?

'முதலில் உலகமே அன்பானவர்களால் ஆகட்டும். அப்புறம், கடைசியாக நான் மாறுகிறேன்' என்று காத்திருக்கப் போகிறீர்களா என்ன?"

Question:நான் கருணையுடன் நடந்து கொண்டால், மற்றவர்கள் அதை நன்றியில்லாமல் பலவீனமாகத்தானே பார்க்கிறார்கள்?

சத்குரு:

நீங்கள் பெருந்தன்மையானவர் என்ற நினைப்பு எப்போது வருகிறது? அடுத்தவரைப் பிச்சைக்காரராகக் குறைத்து மதிப்பிடும்போதுதானே?

ஒருவரிடம் கருணையுடன் நடந்து கொண்டதாகச் சொல்லும்போதே, உங்களுக்குள் குரூரத்தனம் இருந்தும், அதைப் பிரயோகிக்கவில்லை என்ற அகங்காரம்தானே தொனிக்கிறது?

ஒருவரை மன்னித்துவிட்டதாக நீங்கள் மார்தட்டும்போதே, அவரைக் குற்றவாளியாகப் பார்த்திருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தமாகிறது? உங்களிடம் மற்றவர் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அவரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கேவலமான விருப்பமல்லவா?

உங்களுக்குள் இருக்கும் மிருகத்துக்கு அவ்வப்போது கருணை, மன்னிப்பு, நன்றி என்ற உடைகளை அணிவித்து, வெளியே காட்சிக்கு வைக்கிறீர்கள்.

இதில் என்ன மேன்மை இருக்கிறது?

சக உயிரைவிட, உங்களை உயர்த்திப் பார்த்துக் கொள்ளும் இந்தத் தன்மை ஒருபோதும் வளர்ச்சியைக் கொண்டு வராது.

நான் வேறு, அவன் வேறல்ல... இருப்பதை அனைவரும் ஒன்றாக இருந்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறோம் என்ற பேருண்மை புரியும்வரை, இந்தக் குணங்கள் உங்கள் பலவீனம்தான்!"

Question:பிரச்சனையை எதிர்கொள்ளும்போது கிடைக்காத தீர்வு, பிற்பாடு யோசிக்கும்போது கிடைக்கிறதே, எப்படி?

சத்குரு:

"எப்போது விதைக்க வேண்டும், எப்போது உழ வேண்டும், எப்போது களை எடுக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு. அப்படி உரிய நேரத்தில் எடுக்காமல், காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலும் அவற்றால் பலன் இல்லை.

பிரச்சனையை எதிர்கொள்ளும்போது மூளை ஸ்தம்பித்துப் போவது ஏன் என்று யோசியுங்கள்!

நீங்கள் "மனம் என்றாலே சிந்திக்கும் கருவி" என்று தவறாக நினைத்து அப்படியே அதை வளர்த்துவிட்டீர்கள். சதாசர்வ காலமும் அது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பதால், நூற்றுக்கணக்கான யோசனைகள் இங்கும் அங்குமாகப் பூச்சி பறப்பது போல் தறிக்கெட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றன.

அப்படி இல்லாமல், மனதை முழுமையாக விழிப்புணர்வுடன் இயங்கப் பழக்கிவிட்டீர்கள் என்றால், இந்தக் குழப்பமெல்லாம் இருக்காது.

கண்ணாடியின் மீது அழுக்கைப் பூசி விட்டுப் பார்த்தால் பிம்பம் எப்படித் தெளிவாகத் தெரியும்?

மனதைத் தெளிவாக வைத்திருக்க ஒரே வழி - முறையான தியானம்தான்!"

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1