கோடைக்காலத்தில், "மழை வந்தா நல்லயிருக்குமே!" மழைக்காலத்தில், "வெயில் அடிச்சா தேவலயே!" என்று பிதற்றும் மனங்கள் ஏராளம். ஆனால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து, அந்த அனுபவத்தில் குதூகலித்ததுண்டா நீங்கள்? இல்லையென்றால், இனிமேலும் தாமதிக்காமல் சத்குருவின் மழை அனுபவத்தைக் கேட்டுவிட்டு... நனையக் காத்திருங்கள் மழைக்காக!

சத்குரு:

திறந்த வெளியில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று மழை வருகிறது. என்ன செய்வீர்கள்? அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூரைக்கு அடியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வீர்களா? ஓ! சர்க்கரையைப் போல், உப்புக் கட்டியைப் போல் மழையில் கரைந்து விடுவோம் என்று பயமா உங்களுக்கு? மழையைக் கண்டதும் ஓடுவதேனோ?

எனக்கு மூன்று, நான்கு வயது இருக்கும். எங்கள் வீடு மிகப்பெரிய திறந்த வெளியில் அமைந்திருந்தது. மைசூரில் மழைக்காலம் வந்தால், வானம் பொத்துக் கொண்டு ஊத்தும். மழையைவிட்டு விலக மாட்டேன். ஆனால் பெரியவர்களோ, நெருப்பில் கால் வைக்க அஞ்சுபவர்களைப் போல் மழையைக் கண்டால் எட்ட ஓடி விடுவார்கள். "உள்ளே வா... ஜலதோஷம் பிடிக்கும்; காய்ச்சல் வரும்" என்று என்னென்னவோ சொல்லி மிரட்டுவார்கள், நான் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னைக் கவர்ந்து செல்ல வருபவர்களிடம் சிக்க மாட்டேன். தினமும் திமிறத் திமிற குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி குழந்தைகளைக் குளிப்பாட்டுபவர்கள் கூட, அதுவாகப் பொழியும்போது எதற்காகப் பதறி நனையவிடாமல் தடுக்கிறார்கள் என்னும் கேள்வி என் உள்ளத்தில் அப்போதே உதிக்கும்.

கோடையில் வரும் முதல் மழைத்துளி என் மீது மோதும்போது, எனக்குள் அளவிலா ஆனந்தம் பொங்கி ஆர்ப்பரித்திருக்கிறது. பிற்பாடு தோப்பு, விவசாயம் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, தனியாளாக இருந்தேன். புல் தரையில் படுத்து நனைவேன். மழை என் மீது சுதந்திரமாகப் பொழியும். மழைநீர் என்னைத் தழுவி ஓடும். என்னைச் சுற்றி தேங்கும். இயற்கையுடன் எனக்குத் தொடர்பு கொடுக்கும்.

அனுபவங்களைத் தேடும் இளைஞனாக என் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்த வயதில்கூட, நான் மழைக்காக ஒதுங்கியதில்லை. மழையில் வாகனத்தை சந்தோஷமாகச் செலுத்துவேன். முகத்தில் மோதும் மழை, பார்வையைக் குறைக்கும். ஆனால், எப்போதும் எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன், முழுமையான கவனத்துடன் செய்து வந்ததால், மழை எனக்கு சவாலாக இருந்ததில்லை.

மழையில் நான்கு ஐந்து மணி நேரங்கள் கூடத் தொடர்ந்து பைக்கை செலுத்தி இருக்கிறேன். "சூரியன் வெளிச்சம் பொழியும்போது நான் தொடர்ந்து பயணம் செய்வதில்லையா? மழையைக் கண்டு மட்டும் ஏன் ஓட வேண்டும்?" என்பேன்.

மழை பொய்த்துப் போய் தமிழ்நாடே வறண்டிருந்த நேரம் அது!

ஈஷா அன்பர் ஒருவரின் மகள், தனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தப் பாடலை என்னிடம் ஆசையுடன் பாடிக் காட்டினாள். "ரெயின் ரெயின் கோ அவே..." அதிர்ந்தேன். மழைக்காக தமிழகமே ஏங்கிக் காத்திருக்கும்போது, அதை வராதே, போ போ!... என்று விரட்டும் பாடல் அது.

ஆங்கிலேயரின் குளிர் தேசத்தில் மழை என்பது அவஸ்தையான ஒன்று. அதற்காக, அவர்கள் சொன்னதை இங்கே அப்படியே எடுத்தாள்வதா? கலப்படமில்லாத குழந்தைகளின் மனதில் அந்த எண்ணம் தங்கிவிடாதா? மழையைக் கண்டாலே, அதை போகச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைக்க மாட்டார்களா?

ஈஷா மையம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தைகளை, மழையிலிருந்து பதுங்கச் சொல்வதில்லை. மழையை மழையாக அவர்கள் அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பைக் கெடுப்பதில்லை. குடைகள் இன்றி அவர்களை ஒரு நாளாவது மழையில் நடத்திச் செல்லுமாறு சொல்லி இருக்கிறேன்.

கோடை வந்தால், நிலம் காய்ந்து வறண்டு இருக்கும். மழைத்துளிகள் நனைத்ததும், எல்லாம் மாறிவிடும். புல்லும், செடிகளுமாக பூமி சடசடவென்று பசுமையாகிவிடும். எங்கேயிருந்து வந்தது இந்தப் பசுமை? பூமிக்குள் விதைகள் மழைக்காகப் பொறுமையாகக் காத்திருந்தன. வருடக் கணக்கில் மழை பொய்த்த பூமியில் கூட இந்த விதைகள் பொறுமையை இழக்கவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. அதேபோல்தான் உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதைகளும் பொறுமையாகக் காத்திருக்கின்றன.

சரியான சூழல் கிடைத்ததும், சடாரென்று மலர்கின்றன. சிலருக்கு சில ஜென்மங்களே காத்திருக்க நேரிடலாம். நீங்கள் ஏன் அந்தப் பட்டியலில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு அது இப்போதே நிகழ வேண்டும் என்பதே என் விருப்பம். உங்களுக்குள் அதற்கான சூழலை இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

ஒரு கட்டத்தில் உன்னத உணர்வுகள் என்னை ஆட்கொண்டு என் வாழ்க்கை புது அர்த்தம் பெற்ற பிறகு, மழை எனக்கு மிக மிக அற்புதமானதோர் அனுபவத்தைத் தந்திருக்கிறது. இப்போதும் என் வீட்டில் திறந்தவெளி முற்றம் ஒன்று இருக்கிறது. மழை வந்தால், ஆனந்தமாக அங்கே நனைந்து கொண்டு கிடப்பேன்.

மழை வேறு, நீங்கள் வேறு அல்ல. மழை வருகையில், நீங்களே உங்கள் மீது பொழிவதுபோல் உணருங்கள். மழை என்பது உங்களுக்கு இயற்கை வழங்கும் மாபெரும் வாய்ப்பு. அடுத்த மழையில் நனைந்து பாருங்கள்!

dineshobhareja @ flickr