2012ல் உலகம் அழியப் போவதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

சத்குரு

எங்கிருந்து 2012 என்னும் இந்த எண் தோன்றியது? எது நேரம், எது பெரியது, எது சிறியது? இவையெல்லாம் மனிதனின் கருத்துக்கள் தானே? இந்த உலகமோ, இந்த சூரிய மண்டலமோ, ஏன் இந்த அண்டவெளியோ கூட 2012 ஐ விரல் விட்டு எண்ணி இருக்காது. இந்த பூமித்தாய்க்கு 2012 என்றால் என்னவென்றே தெரியாது. இவையெல்லாம் மனித மனதின் குப்பைகளே. ஏதோ போகும் வழியில் எண்ணிக்கையை கற்றுக் கொண்ட நாம், 'எண்கள்' மிகுந்த முக்கியத்துவம் உடையவை என்று எண்ணத் துவங்கி விட்டோம். இந்த பூலோகம் இது 2012ம் வருடம் என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? முட்டாள் மனிதர்கள்தான் 2012 என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனவே 2012ல் உலகம் அழியும் என்பதில் உண்மையில்லை, இது நாம் இட்டுக் கட்டிய கட்டுக் கதைதான்.

ஆனால் உலகம் முழுவதும் பல கணிப்புகள், இது நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்கிறதே?

சத்குரு

நான் உங்களுக்கு ஒரு நாணயம் தருகிறேன். அதனை நீங்கள் சுண்டுங்கள். நீங்கள் தலை என்று சொன்னால் தலை விழும் வாய்ப்புள்ளது, பூ என்றால் பூ விழும் வாய்ப்புள்ளது. ஆனால் வெற்றிக்கு 50% வாய்ப்பு மட்டுமே உண்டு. பலர் கூறும் கணிப்புகளும் இப்படித்தான்.

ஒரே சமயத்தில் அனைவரும் கணிக்கும்போது அதில் சிறிதளவுக் கூட உண்மை இல்லாமலா போய்விடும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு

இந்த கணிப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளிகள். அடுத்து வரும் 6 வருடங்களில் கதிரவனின் கரும்புள்ளிகளில் பலத்த மாற்றம் ஏற்படப் போகிறது. கதிரவன் செயல்படும் விதத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் மனித விழிப்புணர்வில் அமானுஷ்ய மாற்றங்கள் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் இது திசை திருப்பப்பட்ட மாற்றம் அல்ல, இது வழிகாட்டுதலின் பெயரில் நடைபெறும் மாற்றம் அல்ல. எப்படி அமாவாசை, பௌர்ணமி ஏற்படுகிறதோ அதைப் போலவே இந்நாட்களிலும் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலான மனிதர்களால் இந்த மாற்றத்தை உணரக் கூட முடியாது.

எம்மாதிரியான மனிதர்கள் இதை உணர்வார்கள்?

சத்குரு

தியானத் தன்மையில் இருப்பவர்களால் உணர முடியும். மனதளவில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் உங்களால் தெளிவாக உணர முடியும். இவர்கள் இந்நாட்களில் சற்று அதிகமாகவே சமநிலையற்றுப் போவார்கள். ஆனால் யார் ஒருவர் தியானத் தன்மையில் இருக்கிறாரோ அவருடைய தியானத் தன்மை மேம்படும். நீங்கள் உங்களை சுற்றி நடக்கும் சக்திகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்டு போபவராய் இருந்தால், தினம் தோறும் நடக்கும் இந்த மாற்றங்களில் சிக்கி அலைக்கழிக்கப்படுவீர்கள். இதனால்தான் யோகத்தில் ஹட யோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஹட யோகம் உங்களுக்குள் சமநிலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கதிரவனின் இந்த கரும்புள்ளிகளால் ஏற்படும் பாதிப்பை பற்றிக் கூறுங்களேன்?

சத்குரு

நிச்சயமாக இந்த கரும்புள்ளிகள் துரிதமாக செயல்படக் கூடிய சக்தியை உருவாக்கும். அது மனிதன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை மனிதன் நிச்சயித்துக் கொள்ள முடியும். நாம் கணிப்புகளுக்கு காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஆனால் கணிக்கப்பட்ட அந்த சமயத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவே நம்மிடம் திட்டம் இருந்தால் புலப்படாத சூழ்நிலைகளும் அற்புதமான சாத்தியங்களாக மாற முடியும். நமக்கு எப்படி தேவையோ அப்படி உருவாக்கிக் கொள்ள இதுவே சரியான தருணம். இயற்கையின்படி, இந்த புவியின் செயல்பாடுகளின்படி, விண்ணுலகம் சார்ந்த அமைப்பிலும் சரி அடுத்து வரும் 6 வருடங்கள் சற்றே வித்தியாசமானதாய் இருக்கும்.

இந்த பாதிப்பை எப்படி கையாள்வது?

சத்குரு

இயற்கையில் ஏற்படும் இந்த தீடீர் மாற்றத்தை நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், ஆன்மீக சாதனாவில் தன்னை நிலைப்படுத்தி, தான் செய்யும் செயலில் போதிய கவனம் கொள்ளும் மக்கள் தேவை. இப்படிப்பட்ட மக்கள் அமைந்தால், எப்போதும் இல்லாத வகையில் மனித விழிப்புணர்வு, முன்னோக்கி மாபெரும் படி எடுத்து வைக்கும்.

உங்கள் திட்டம்?

சத்குரு

வரும் ஆறாண்டு காலத்தில், சூரியக் கரும்புள்ளிகளில், புறக்கணித்துவிட இயலாத அளவு மாற்றங்கள் நடைபெறும். இதனால் நாம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு கிரகங்களின் பயணத்தில் மாற்றங்களை உணர முடியும். இதனால் நாம் மேல் எழும்பலாம் அல்லது அகல பாதாளத்தில் விழுந்து போகலாம். என்னிடம் மேலே எழும்புவதற்கான திட்டம் உள்ளது, என்னோடு பயணியுங்கள்!

Photo Credit: Kim Alaniz @ flickr