சத்குரு:

உலகம் என்பது எண்ணங்களின் பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம். இன்றைக்கு உலக அரங்கில் அரங்கேறும் ஒவ்வொரு காட்சியும் ஏதோவொரு மனிதனின் உள்ளத்தில் பார்க்கப்பட்ட ஒத்திகைதான். அதனால்தான் உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும், பொறுப்பேற்க வேண்டிய கடமை மனித குலத்துக்கு உள்ளது.

ஒரு மனிதர் கடற்கரைக்குச் செல்கிறார். அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்கம், அந்தப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெறவேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருதிவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.

யோகா, தியானம் போன்றவற்றிற்கு மத நம்பிக்கை தேவையா? என்று பலரும் கேட்கிறார்கள். "மதம்" என்பது உருவாக்கப்பட்டதன் நோக்கம், இன்றைக்கு திசைமாறி இருக்கிறது. மனிதன் தன் எல்லைகளைக் கடந்து உயிர்களெல்லாம் ஒன்று என்று உணர்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் மதங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல உறுதுணை புரிய வேண்டிய மதங்களே எல்லைக் கோடுகளாக மாறி மனிதனைப் பிரிப்பதற்கான கருவியாய் மாறியுள்ளது. முந்தைய காலங்களில் மதங்கள் தர்மங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இன்றைக்கு மதங்கள் என்றால் "யுத்தம்" என்றே அர்த்தமாகிறது.

ஒருவகையில் பார்த்தால் இந்த உலகத்தில் தீயவர்களை விட நல்லவர்களுக்கு மத்தியில்தான் சண்டைகள் அடிக்கடி நிகழ்கின்றன. தீயவர்கள் கூட திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு அதற்குரிய தண்டனையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் நல்லவர்கள் தங்களுக்குள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். மதச் சண்டை போடுபவர்களைக் கேளுங்கள். நான் ஒரு நல்ல இந்து, நான் ஒரு நல்ல முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதுபோன்ற நல்லவர்களால் இந்த பூமி உருண்டை சேதம் அடைகிறது. நல்லவர்களெனில் அவர்களால் உலகுக்கு நன்மைகள் தானே நிகழ வேண்டும்.

பெரும்பாலும் மதச் சண்டைக்கு மையமாக மத நூல்கள்தான் இருக்கின்றன. பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவை எல்லாம் என்ன?

உயரிய ஆன்மீக அனுபவங்களை எட்டிய அருளாளர்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்ததால் உருவானவையே இந்தப் புத்தங்கள். இந்தப் புத்தகங்களை வழிகாட்டுதலாகக் கொண்டு அத்தகைய அனுபவங்களை நோக்கி மனிதகுலம் பயணமாக வேண்டுமே தவிர, அந்தப் புத்தகங்களோடு நின்றுவிடுவதோ, புத்தகங்களின் பெயரில் சண்டையிடுவதோ, சரியானதல்ல.

உதாரணத்திற்கு ஒரு மனிதர் கடற்கரைக்குச் செல்கிறார். அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்கம், அந்தப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெறவேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருதிவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.

மதத்தின் பெயரால் வரும் மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன? "எல்லாம் ஒன்று" என்கிற இறை அனுபவம் இல்லாமலேயே தங்களை இறைவுணர்வு மிக்கவர்களாய் சிலர் காட்டிக் கொள்வதனால் தான். இறைமை நிலையை உணர்ந்தவர்கள் அதனை எல்லா இடங்களிலும் உணர முடியும். அந்த அனுபவம் இல்லாதபோதுதான் மத நம்பிக்கை மோதலில் முடியும்.

இந்த இறைத்தன்மையை விஞ்ஞானப்பூர்வமாய், உணர்வதற்கான வழிகள்தான் யோகா, தியானம் போன்றவை. கடவுளை வெளியே தேடுவதைவிட தனக்குள்ளேயே தேடுவது எளிது. இதைத்தான் ரமண மகரிஷி "ஆத்ம ஞானம் அதி சுலபம்" என்கிறார்.

தனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள்.