ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 10

உண்மையான குருவை தேடி அடைவதில் மக்களுக்கு இருக்கும் குழப்பம் குறித்தும், மதங்களால் ஏற்படும் பிரிவினைகள் குறித்தும் நடிகர் சித்தார்த் அவர்கள் சத்குருவிடம் கேள்விகளை முன்வைக்கிறார். சத்குருவின் பதில்கள் இந்தவார பதிவாக இங்கே!

Question:
சத்குரு... நமது சமூகத்தில் ஏராளமான ஆன்மீக தலைவர்கள் இருக்கிறார்கள். உண்மையான குருவை அடைவது குறித்து மக்களுக்கு குழப்பம் இருக்கிறது. ஒருவர் உண்மையான குருவை தேடி அடைவது எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

உண்மையான குரு, பொய்யான குரு இப்படி எதுவும் இல்லை. உண்மையில் ஆன்மீக தொழில் அதிபர்கள்தான் நிறைந்து காணப்படுகிறார்கள். நீங்கள் வேறுபாட்டை மட்டும் காண வேண்டும். அதை அறிவதும் எளிதுதான். அந்த மனிதர் மக்களுக்காக இருக்கிறாரா அல்லது மக்கள் அவருக்காகவா என்ற ரீதியில் பார்த்தீர்களேயானால் தெரிந்து கொள்ளலாம். ஒருவர் தேர்ந்தெடுத்து குரு ஆவதில்லை. மக்கள் அவரை அடையாளம் காண்கிறார்கள். ஒரு மாமரம் உங்களை மாம்பழம் சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அதில் வழிந்தோடும் இனிமை கண்டு மக்களே அதை தேடிச் செல்கிறார்கள். எனவே இது ஒரு விளைவுதான்! மக்களுக்கு குருவாக இருப்பது என்பது, ஒரு நிலையில் இருக்கும் தெளிவு, திறமையின் விளைவுதான். இது நீங்கள் தேர்வு செய்யும் ஒரு வேலை அல்ல.

Question:
இன்றைக்கு மனித இனம் மதங்களின் பெயரால் பிளவுபட்டு இருப்பதை பார்க்கிறோம். இதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன. இது எங்கே போகும் என நினைக்கிறீர்கள்?

சத்குரு:

இதை இப்போதுதான் கவனிக்கிறீர்களா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் நடைபெறும் சண்டைகள் நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது ஒரு மனிதனின் நம்பிக்கைக்கும், இன்னொருவரின் நம்பிக்கைக்கும் இடையேயான போராட்டம். எனக்கு ஏதோ ஒன்று தெரியாது என்று உணரும் ஒரு நேர்மை கூட இல்லாத ஒரு நம்பிக்கையாகத்தான் இது இருக்கிறது. ஆன்மிக செயல்முறை என்றால் நீங்கள் ஒரு தேடலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் மதம் சார்ந்தவர் என்று உங்களை சொல்லிக் கொண்டால், ஒரு நம்பிக்கை சார்ந்து இருக்கிறீர்கள் என்று உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆன்மிகத்தில் இருக்கிறேன் என்று சொன்ன கணமே நீங்கள் ஒரு சாதகர் ஆவீர்கள். சாதகர் என்றால் தனக்கு தெரியாது என்பதை உணர்ந்தவர். ‘தெரியும்’ என்று நம்பிக் கொண்டிருந்தால் எதையும் தேடப் போவதில்லை. மக்களின் நம்பிக்கையில் இருந்து நுட்பமான தேடலுக்கு நாம் நகர வேண்டும். ஒன்றை நம்பிய கணம் உலகை நீங்கள் பிரித்து விடுகிறீர்கள். சண்டை என்பது தொடரும் இயல்பான ஒரு விளைவு.


அடுத்த வாரம்...

அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை கடந்து ஒரு மகிழ்வான மனநிலையை தக்க வைப்பது எப்படி? சொல்கிறார் சத்குரு, அடுத்த வாரம்...

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...