மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்?

இறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா? இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அதுபோன்ற கேள்விகளை முன் வைக்க, நமக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில் இங்கே!
 

சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 17

இறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா? இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அதுபோன்ற கேள்விகளை முன் வைக்க, நமக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில் இங்கே!

சத்குரு: இந்த பரு உடல் விழுந்தாலும் சூட்சும உடல் தொடர்ந்து இருக்கும். அதனுள் சில பதிவுகள் அப்போதும் இருக்கும். ஆனால் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உங்களுக்கு பருஉடல் இருந்தபோது, உங்களுக்கு பிரித்துப் பார்க்கும் திறமை இருந்தது. ஆனால், இந்த உடல் விழுந்த உடன் பிரித்துப் பார்க்கும் தன்மையும் போய்விடும். சில உந்துதல்கள் மட்டும் இருக்கும். அந்த உந்துதல்களால் மட்டுமே இனி செயல்படுவீர்கள். ஒவ்வொரு கலாச்சாரத்திலும், குறிப்பாக இந்தியக் கலாச்சாரத்தில், ஒருவர் இறக்கும் தருணத்தில், அவர் உங்கள் எதிரியாக இருந்தாலும், நீங்கள் "ராம், ராம்..." என்று கடவுளின் பெயரை உச்சரிப்பீர்கள் அல்லது அவருக்கு சரியான சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பீர்கள். இறப்பவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை உருவாக்க சில எளிமையான வழிகள், இந்தக் கலாச்சாரத்தில், உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சொர்க்கமும் நரகமும் பூகோள ரீதியிலான இடங்கள் அல்ல. அது ஒருவர் அடையும் நிலை மட்டுமே.

ஏனென்றால் உயிர் பிரியும் தருணத்தில், அவர் பயமான தன்மையில் இருப்பதாகக் கொள்வோம். உயிர் நீங்கியவுடன் பகுத்துப் பார்க்கும் தன்மையையும் இழந்து விடுவதால், அந்த பயத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை. எனவே அந்த பயம் இலட்சம் மடங்காக பெருகிக் கொண்டிருக்கும். உயிருடன் இருக்கும்போது கூட, பல சமயங்களில் உங்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், பிரித்துப் பார்க்கும் மனத்தின் உதவியால், அந்த பயத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தீர்கள்.

சேகர்: ஓ, சரி

சத்குரு: அதேபோல் இறக்கும் தருவாயில், உங்களுக்கு இனிப்பான தன்மையை உருவாக்கினால், அந்த இனிப்பான தன்மையும் இலட்சம் மடங்கு அதிகரிக்கும். ஒரு குழந்தை சாக்லேட் சாப்பிடுகிறது. மிகவும் இனிப்பாக இருக்கிறது. குழந்தைக்கு பிரித்துப் பார்க்கும் மனம் தற்போது உறுதியான தன்மையில் இல்லை. "சரி, நான் இன்று இரண்டு சாக்லேட்கள் சாப்பிட்டு விட்டேன். இன்று இது போதும்." என்று நினைப்பதில்லை. குழந்தை 2000 சாக்லேட்களை சாப்பிட விரும்புகிறது. எனவே பிரித்துப் பார்க்கும் மனம் இல்லையென்றால் இனிப்போ அல்லது கசப்போ, இனிப்பான தன்மையோ அல்லது இனிப்பற்ற தன்மையோ பல மடங்குகளாக அதிகரிக்கும்.

இனிமையற்ற தன்மை பெரிதாகும்போது, அவர் நரகத்தில் இருக்கிறார் என்றும், இனிமையான தன்மை அதிகமாகும்போது அவர் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றும், நாம் சொல்வோம். எனவே, சொர்க்கமும் நரகமும் பூகோள ரீதியிலான இடங்கள் அல்ல. அது ஒருவர் அடையும் நிலை மட்டுமே.

சேகர்: பின்னர் மறுபிறப்பு ஏற்படுகிறது.

சத்குரு: ஓ, நீங்கள் திரும்பியும் பூமிக்கு வர விரும்புகிறீர்கள். (சிரிக்கிறார்)

சேகர்: நிச்சயமாக.

சத்குரு: உங்கள் சக்திநிலையில் உங்களுக்கான பதிவுகள் எப்போதும் பதிந்திருக்கும். அதைத்தான் கர்மா என்று சொல்கிறோம். நீங்கள் இறக்கும்போது, உங்கள் சக்திநிலையில் எந்த அளவிற்கு கர்மப்பதிவுகள் எஞ்சியிருக்கிறதோ அதைப் பொறுத்து அந்த சக்திநிலை வலிமையுடன் இருக்கும். நீங்கள் வயதாகி இறக்கிறீர்கள் என்றால், இந்தப் பிறவிக்கான உங்கள் கர்மப் பதிவுகள் அனேகமாகத் தீர்ந்திருக்கும். எனவே உங்கள் சக்திநிலை மிகவும் வலிமை குன்றியிருக்கும். இந்த சக்திநிலை எந்த செயலும் இல்லாமல் அப்போது, சிறிது காலம் ஓய்வெடுக்கும்.

உடலும் பகுத்தறியும் மனமும் இருக்கும்போது உங்கள் கர்மாவை கரைக்க 10 வருடங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் உடலும் பகுத்தறியும் மனமும் இல்லாத நிலையில் அதே கர்மாவை கரைக்க 1000 வருடங்கள் கூட ஆகலாம்.

ஆனால் விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஒருவர் வயதாகு முன்னரே இறக்கும்போது, பதிவுகள் இன்னமும் போதுமான அளவு தீர்ந்திருக்காது. எனவே அந்த உயிரின் சக்தி இன்னமும் வலிமையுடன் இருக்கும். இந்த சக்திநிலை வலிமை இழப்பதற்கு மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் உடலும் பகுத்தறியும் மனமும் இப்போது இல்லை. உடலும் பகுத்தறியும் மனமும் இருக்கும்போது உங்கள் கர்மாவை கரைக்க 10 வருடங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் உடலும் பகுத்தறியும் மனமும் இல்லாத நிலையில் அதே கர்மாவை கரைக்க 1000 வருடங்கள் கூட ஆகலாம். எனவேதான், விபத்து, கொலை, தற்கொலை போன்றவை மோசமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பகுத்தறியும் மனம் இல்லாத நிலையில் அந்த உயிரின் சக்திநிலை வலிமை குன்றாமல் இருக்கும். எனவே அந்த சக்தி மிக நீண்ட காலம் அலையும். ஒருவித அதிதீவிரத்துடன் இருப்பதால் இப்போது அந்த சக்தி வேறு ஒரு கருவிலும் புகமுடியாது.

முதுமையடைந்த நிலையில் ஒருவர் படுக்கச் சென்றார். அவர் உடலில் எல்லாமே சரியாக இருந்தது. கண் விழிக்காமல் படுக்கையிலேயே இறந்துவிட்டார். அப்போது அந்த உயிருக்கான பதிவுகள் கரைக்கப்பட்டு அந்த உயிரின் சக்திநிலை ஏற்கனவே மிகவும் வலிமை குறைந்திருக்கும். அதுபோன்ற நிலையில் அவர் 48 மணி நேரத்தில் மற்றொரு கருவை அடைய வாய்ப்புள்ளது. ஆனால் ஒருவர் விபத்தின் மூலமோ அல்லது வேறொரு வழியிலோ உடலை சிதைத்ததன் மூலம் இறந்தால், இவர் மீண்டும் பிறக்க அதிகமான காலம் ஆகலாம். ஏனெனில் அந்த உயிரின் சக்திநிலை இன்னமும் தீவிரத்துடன் இருக்கிறது. இன்னமும் எவ்வளவு கர்மப் பதிவுகள் எஞ்சியிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த தீவிரம் இருக்கும்.

இவற்றை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மிகவும் விரிவாக பேசத் தேவையிருக்கிறது. இம்மாதிரி பேசிச் செல்வது சரியானதல்ல. அதனால்தான் இதைப்பற்றி பேசும்போது ஏதோ நகைச்சுவையாக பேசிவிட்டு சென்று விடுவோம். நாங்கள் இதைப்பற்றி எப்போதும் பேசுவதில்லை. ஏனென்றால் இது பலவிதமான கற்பனைகளுக்கும் இழுத்துச் சென்றுவிடும்.

அடுத்த வாரம்...

தனது அமானுஷ்யக் கேள்விகளை நிறுத்திக் கொண்டு, மன அழுத்தம் தொடர்பான கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறார் சேகர் கபூர். மன அழுத்தம் பற்றி சத்குருவின் உரையைக் காணக் காத்திருங்கள்!