மார்க்கண்டேயர் மரணத்தை வென்ற கதை...

காலபைரவர் எனும் தன்மையின் மகத்துவம் என்ன என்பதை உணர்த்தும்விதமாக மார்க்கண்டேயரின் கதையைக் கூறி, விழிப்புணர்வின் மூலம் அத்தகைய நிலையை அடைவதற்கான சாத்தியம் உள்ளதையும் சத்குரு இங்கே வெளிப்படுத்துகிறார்.
markandeyar-maranaththai-venra-kathai
 

சத்குரு:

காலபைரவர் சிவனது மற்றொரு அம்சம். அவர் காலத்தை கடந்தவர், அதனால் காலபைரவர். சிவனின் பல்வேறு ரூபங்கள் நமக்கு தெரியும், ஆனால் காலபைரவர் மிக kbவித்தியாசமான ஒரு ரூபம். உங்களால் காலத்தை நிர்வகிக்க முடியாது, அதன்போக்கில் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உங்கள் சக்தியை உங்களால் நிர்வகிக்க முடியும், அதனுடன் உங்களால் விளையாட முடியும். ஆனால், காலம் தன் போக்கிலேயே செல்லும். ஆனால், ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு-நிலையால் காலத்தை கடந்து செல்ல முடியும். அந்தப் பரிமாணத்தைத்தான் காலபைரவர் என்று அழைக்கிறோம்.

இந்திய கலாச்சாரத்தில் அழகான கதை ஒன்று உண்டு. உங்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்திருக்கக் கூடும். காலத்தை வென்ற மார்க்கண்டேயர்.

மார்க்கண்டேயரின் பெற்றோருக்கு வெகு காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் அவர்களுடைய இல்லத்திற்கு முனிவர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பிள்ளை வரம் வேண்டி இவர்கள் மன்றாடினர். அந்த முனிவர், "வெறுமனே உண்டு, உறங்கி, இறந்து போகும் ஒரு அற்பன் வேண்டுமா அல்லது அட்டகாசமான ஒரு உயிர் வேண்டுமா?" என்று கேட்டார். கௌதம புத்தரும் இந்த முனிவரைப் போலத்தான். புத்தர் ஞானோதயம் அடையாத அத்தனை மனிதர்களையும் முட்டாள் என அழைத்தார். "அந்த முட்டாள்... இந்த முட்டாள்..." என்றே பூடகம் போடுவார்.

"நீங்கள் ஒரு அற்பனை மகனாய் பெற்றால் அவன் உங்களுடன் நூறு ஆண்டுகள் வாழ்வான், ஒரு பரமஹம்சனை மகனாய் பெற்றால் வெறும் 16 ஆண்டுகள் மட்டுமே உங்களுடன் வாழ்வான். வெறும் 16 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தெய்வீக உயிராய் இருப்பான். தேர்வு உங்கள் கையில்," என்றார் முனிவர்.

அவர்களது தேர்வு உன்னதமானதாய் இருந்தது. மார்க்கண்டேயன் பிறந்தார். அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராய், உன்னதமான உயர்ந்த உயிராய் அவர் வாழ்ந்தார். 16 வயதில் இறந்து போவார் என்பதை சொல்லாமலேயே அவரை வளர்த்தனர். 16வது வயதும் வந்தது. நாளை அவருடைய பிறந்தநாள், இன்று பெற்றோருக்கு கவலை முற்றியது. மனஅழுத்தத்தில் ஓய்ந்து போயினர். அவன் அற்பனாய் இருந்திருந்தாலாவது இறப்பை அனுமதிக்கலாம், ஆனால் மார்க்கண்டேயனோ மகத்தான ஒரு உயிர் ஆயிற்றே! அவரை இழக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. துக்கம் தாளாத பெற்றோர் அன்று மாலையே மார்க்கண்டேயரிடம், "நீ நாளை இறக்கப் போகிறாய் மகனே," என்று உண்மையை சொன்னார்கள்.

கதையை கேட்ட மார்க்கண்டேயர், "அது எப்படி நடக்க முடியும்? நடக்காது, பார்க்கிறேன்," என்றார்.

markandeya-isha-sketch

அவர் தன் வழிபாட்டிற்காக வைத்திருந்த சிவனலிங்கத்திடம் சென்றார். அதனை ஆரத்தழுவிக் கொண்டார். "சிவனே நான் உனை விட்டுச் செல்ல மாட்டேன். நான் இறப்பதை நீ அனுமதிக்கக் கூடாது. என் பெற்றோர் இதயம் உடைந்து போவார்கள். இந்த உலகை மாற்றுவது எப்படி என நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வுலகில் அற்புதமான பல விஷயங்களை செய்வது எப்படி எனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது நடக்கக் கூடாது," என்று இறுக்கமாய் பற்றிக் கொண்டார். காலம் கடந்த பரிமாணத்திற்குள் அவர் பிரவேசித்தார்.

உலகம் முடிவிற்கு வந்தது. பிரபஞ்சம் குலைந்து போனது. மார்க்கண்டேயர் மட்டும் நிலைத்திருந்தார். அவரது பூத உடல் பிரபஞ்சத்துடன் காணாமல் போனது, ஆனால் அந்த லிங்கரூபத்துடன் அவர் மட்டும் நிலைத்திருந்தார். பிரபஞ்சம் சுக்குநூறாய் ஒடிந்து போனது, இடிபாடுகளாய் சிதறி, வெற்று வெளியில் மிதந்து கொண்டிருந்தது. தன்னை மீண்டும் ஒன்றிணைத்துக் கொள்ள பல பல கோடி காலம் அதற்கு தேவைப்பட்டது. மீண்டும் ஒருமுறை பிரகாசமான ஒரு நீள்வட்ட வடிவம் (லிங்க வடிவம்) தோன்றி அதிலிருந்து சூரிய மண்டலம் மறுபடியும் உதயமானது என நீள்கிறது கதை.

முழு பிரபஞ்சமும் இப்படித்தான் உருவானது என்று நவீன அறிவியல் இன்று சொல்கிறது. ஆனால், நம் கலாச்சாரத்தில் 12,000 வருடங்களுக்கும் மேலாக இதனை சொல்லி வந்திருக்கிறோம். பிரபஞ்சம் எப்படி உடைந்திருக்கும், எப்படி சிதறியிருக்கும் என்று நவீன அறிவியல் வர்ணிப்பதும், மார்க்கண்டேயரின் கதையில் சொல்வதும், யோக அறிவியல் சொல்வதும் ஒத்துப் போகிறது.

மார்க்கண்டேயர் உடலில்லாமல் போனார், புது சூரிய மண்டலம் உருவானது, ஆனால் அவர் மட்டும் நிலைத்திருந்தார். இப்படி காலம் கடந்து செல்லும் அந்தப் பரிமாணத்தைத்தான் நாம் காலபைரவர் என்று பாரம்பரியமாக அழைத்து வருகிறோம்.

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

tamilappbanner

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

msr-banner-tamil

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1