வாழ்க்கையில் நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால், அந்த பாதிப்பு பல நாட்களுக்கு, ஏன் பல வருடங்கள் கூட இருப்பது நிதர்சனம்தான். இப்படிப்பட்ட மரணத்தின் பாதிப்பிலிருந்து நாம் விடுபட வழி என்ன? சத்குருவின் பதில் இங்கே...

சத்குரு:

மரணம் என்றால்...

நாம் இங்கே நன்றாக வாழ்வதற்காக பலவிதமான சம்பந்தங்களை உருவாக்குகிறோம். நாம் பிறந்தவுடனே, நமது தாய், தந்தை, கூடப்பிறந்தவர்கள் என்று ஒரு சம்பந்தம் வந்துவிட்டது. வளரும்பொழுது, நண்பர்கள், பிறகு மனைவி அல்லது கணவன் அதற்குப் பிறகு குழந்தை என்று பலவிதமான சம்பந்தங்கள் நாம் வாழ்க்கையில் உருவாக்குகிறோம். நாம் இங்கே நல்லபடியாக வாழவேண்டுமென்று அவற்றை உருவாக்குகிறோம். உங்கள் சுவாசம் ரொம்ப மென்மையாக உள்ளே போகிறது, வெளியே போகிறது. உள்ளே போகிறது, வெளியே போகிறது. அப்படி வெளியே போனது மீண்டும் வரவில்லையென்றால் முடிந்துவிட்டது கதை. அப்படித்தானே இருக்கிறது. உங்கள் உயிர் அப்படித்தானே நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் வெளிமூச்சு அப்படி போய், அடுத்தது வரவில்லையென்றால் உங்கள் உடல் திரும்ப மண்ணாகச் சேர்ந்துவிடும்.

இருக்கிறபொழுது உணரமாட்டீர்கள். போன பிறகு அழுவீர்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றி எவ்வளவோ கற்பனை செய்து கொள்ளலாம். உங்களிடம் தொடர்புள்ள பத்து பேர் குறித்து பலவிதமாக கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நாளையே, 'புஸ்' என்று உயிர் போய்விட்டால் எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். இப்பொழுது வாழ்க்கையின் அடிப்படையே இப்படி இருக்கிறபொழுது, நாம் வாழ்க்கையில் உள்ள ஈடுபாட்டை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லவா? ஒருவரின் உடல் மற்றும் மனத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டால், நமக்கு இவ்வளவுதான் புரியும். இருக்கிறபொழுது, அவருடன் நன்றாகக் கூட பேசியிருக்க மாட்டோம்; அவர் போன பிறகு அழுகிறோம். அவ்வளவு பிரியமாக இருந்தால் அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை நன்றாக உணரவேண்டுமல்லவா? அவர் உயிருடன் இருக்கும்பொழுது அவரை முழுமையாக உணர்ந்திருந்தால், அவர் இருந்தாலோ போனாலோ ஒரு வித்தியாசமும் இருக்காது. உயிருடன் இருக்கும்பொழுது கவனிக்கவில்லையென்றால், அவர் இருந்தாலும் பிரச்சனை; போனாலும் பிரச்சனைதான்.

தான் பேசும் கடை வார்த்தை...

நான் உலகப்பொருளாதாரக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டபோது 90 வயதுடைய ஒரு பெண்மணியை சந்தித்தேன். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் உலகப் போரின் போது ஒரு சித்திரவதை முகாம் இருந்தது. சுமார் 70 லட்சம் யூதர்களின் உயிரை ஒவ்வொன்றாகப் பறித்தார்கள். அப்போது இவர் 13 வயது பெண். குடும்பத்தையே அந்த முகாமிற்கு கொண்டு போய்விட்டார்கள். முதலில் தாய், தந்தையைப் பிரித்துவிட்டார்கள். இந்த 13 வயது பெண்ணுடன் அவளுடைய எட்டு வயது தம்பியும் இருந்தான். இவர்களை ஒரு ரெயில்வே ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்தார்கள்.

அங்கேயே ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருந்தார்கள். அங்கு ஒரு இரயில் வந்தது. அந்த இரயிலில் எல்லோரையும் மாடு ஏற்றுகிற மாதிரி ஏற்றினார்கள். அந்த எட்டு வயதுப் பையனுக்கு இந்தப் பெண்தான் பொறுப்பு. எப்படியோ அவனையும் இழுத்துக்கொண்டு இரயிலில் ஏறிவிட்டாள். ஏறியதும் பார்த்தால் அவன் கால்களில் ஷூ இல்லை. ஒரே குளிர். ஆனால் அந்த சின்ன பையன் அங்கேயே ஷூவை விட்டுவிட்டான். இந்த பெண்ணிற்கு ஒரே கோபம் வந்துவிட்டது. அவன் காதைப் பிடித்து "முட்டாள், இப்பவே அப்பா அம்மா எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை, நீ வேறே ஷூ போடாமல் வந்துவிட்டாயா?" என்று திட்டி, நன்றாகக் காதைப் பிடித்துத் திருகிவிட்டாள். அவனை நன்றாக திட்டிவிட்டாள். அதற்கு பிறகு அந்த இரயில் ஓரிடத்தில் நின்ற பொழுது ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பிரித்துவிட்டார்கள். அதற்கு பிறகு நான்கு வருடம் அந்த முகாமில் இருந்துவிட்டு வெளியே வந்தார்கள். அவர் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். அந்தப் பையனும் இறந்துவிட்டான்.

நம் முன்னால் யார் வந்தாலும் சரி, அந்த உயிரை முழுமையாக உணர வேண்டும், போன பிறகு அழுது என்ன பிரயோஜனம்?

அப்பெண்மணி சொன்னார், "நான் வெளியே வந்தபோது எல்லோரும் இறந்துவிட்டதைக் கேள்விப்பட்டேன், அப்பொழுதுதான் தீர்மானித்தேன். யாரைப்பார்த்தாலும் சரி, என் முன்னால் யார் வந்தாலும் சரி, என் வாழ்க்கையில் நான் பேசுகிற எந்த வார்த்தையும் இதுவே கடைசி வார்த்தையாக இருந்தால், எப்படி பேசுவேனோ அப்படி பேச வேண்டுமென்று. என் தம்பிக்கு, அந்த நேரத்தில் அந்த வார்த்தையைச் சொன்னேன். அதுவே கடைசி வார்த்தை. கடைசி வார்த்தையில் நான் தம்பிக்கு திட்டுதான் கொடுத்தேன். வேறு எதுவம் கொடுக்கவில்லை. அன்பாக ஒரு வார்த்தை சொல்லாமல் போய் விட்டேன். அதனால் அந்த நாளிலிருந்து, யார் வந்தாலும், நான் இதே கடைசி வார்த்தையாக இருந்தால் எப்படி பேசுவேனோ அப்படித்தான் பேசுவேன். ஏனென்றால், திரும்பவும் நாளை பார்க்க முடியுமோ, இல்லையோ?"

உங்கள் வீட்டில், உங்கள் குழந்தைக்கோ, கணவனுக்கோ, மனைவிக்கோ இப்படி நடக்கவேண்டுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கிறவர்கள் நாளைக்கு இருக்கிறார்களோ, இல்லையோ என்கிற உத்திரவாதம் இல்லை. யாருக்காவது உத்திரவாதம் இருக்கிறதா? வாழ்க்கை இப்படி இருக்கிற பொழுது நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் முழுமையாக, உங்களைச்சுற்றி இருக்கிறவர்களை உணர்ந்தால் இந்த பாதிப்பு வராது. இருக்கிறபொழுது உணரமாட்டீர்கள். போன பிறகு அழுவீர்கள். இருக்கிறபொழுது உணர வேண்டும். போன பிறகு என்ன பண்ண முடியும்? உங்களுக்கும், அவருக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

அவருக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம்...

இந்த உடலில் இருக்கிறபொழுது, அவர் உங்களுடன் சேர்ந்த உயிர். உடலை விட்டவுடன், உங்களுக்கும், அவருக்கும் ஒன்றும் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். "என்ன சத்குரு இப்படிச் சொல்கிறாரே, எனக்கும் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? எங்க தாத்தாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையா?" என்று. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். இறந்தவர்கள் அவருடைய உடல், அவர் மனம், அவர் உணர்ச்சி எல்லாம் விட்டுவிட்டால் இப்பொழுது உங்களுக்கும், அவருக்கும் என்ன இருக்கிறது? இது நமக்கு ஆழமாகப் புரிந்தால்தான் நாம் உயிரை மதிக்க முடியும். ஒரு க்ஷணம் உயிரை மதிக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் இப்பொழுது நாம் பார்க்கிற முகத்தை, நாளைக்கு நாம் பார்க்கிறோமோ இல்லையோ? உத்திரவாதம் இருக்கிறதா? அதனால் அடுத்த உயிருடன் முழு ஈடுபாட்டுடன் இருக்கலாம்.

வாழ்க்கையைப் பற்றிய உண்மை, அது கடினமாக இருந்தாலும் சரி, அந்த உண்மையுடன் இருக்கலாமா? அல்லது வாழ்க்கையில் ஏதாவது பொய் உருவாக்கலாமா? பொய், குழந்தையிடம் தான் நாம் சொல்வோம். ஏனென்றால், குழந்தைக்கு ஒன்றும் தேவையில்லை. ஆறுதல்தான் தேவை. நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு பொய் தேவையில்லை. உங்களுக்கு வாழ்க்கைக்கு தீர்வு தேவை இல்லையா? ஆறுதல் தேவையா? தீர்வு தேவையென்றால் உண்மை தேவை. உயிரின் உண்மை இவ்வளவுதான். அதனால் இப்பொழுது நம் முன்னால் யார் வந்தாலும் சரி, அந்த உயிரை முழுமையாக உணர வேண்டும், போன பிறகு அழுது என்ன பிரயோஜனம்?

நீங்கள் யார் கூட அன்பாக இருந்தீர்களோ, அவர் போய்விட்டார் என்றால், உங்கள் கூட அன்பாக இருந்து போய்விட்டார்கள் என்று சந்தோஷமாக உங்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அவர் இருந்தபொழுது துன்பமாக இருந்தீர்கள். அவர் போனாலும், அவரால் துன்பமாக இருந்தால் என்ன பிரயோஜனம்? அவர் இருக்கிற பொழுது அவர் கூட ஆனந்தமாக இருக்க வேண்டும். அவர் போனாலும் அவர் ஞாபகத்தில் ஆனந்தமாக இருக்க வேண்டும்.