மரணத்தை ஏமாற்ற முடியுமா?
நமக்கு வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும், ஆனால் மரணத்தைப் பற்றி தெரியாது. மரணம் பற்றியும், விழிப்புணர்வாக இருப்பதற்கான வழி பற்றியும் சத்குருவின் வரிகளில் இங்கே...
 
 

நமக்கு வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும், ஆனால் மரணத்தைப் பற்றி தெரியாது. மரணம் பற்றியும், விழிப்புணர்வாக இருப்பதற்கான வழி பற்றியும் சத்குருவின் வரிகளில் இங்கே...

சத்குரு:

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறீர்களோ, அதை எல்லையில்லாமல் நீங்கள் மேம்படுத்திக் கொண்டே போக முடியும். நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து செய்ய விரும்பும் எல்லாவற்றையுமே செய்தால்கூட, செய்வதற்கு இன்னும் மீதமிருக்கும். வாழ்க்கை எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது.

மரணம் மட்டும் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், மரணம் அபாரமான செயல்திறன் கொண்டது. அதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. வாழ்க்கை பல நேரங்களில் முழுமையில்லாமல் நடக்கலாம்; ஆனால் முழுமையில்லாத மரணம் நிகழ்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மரணம் நிகழும்போது முழுமையாகவும் துல்லியமாகவும் நிகழ்கிறது. மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கவோ, விவாதிக்கவோ அவசியமில்லை. ஆனால், வாழ்வின் நிலையற்ற தன்மையை நீங்கள் கவனத்தில் கொண்டே ஆக வேண்டும்.

உங்கள் சுவாசத்தின் தன்மை எப்படி இருக்கிறதென்று பாருங்கள். உள்மூச்சு-வெளிமூச்சு, உள்மூச்சு-வெளிமூச்சு என்று தொடர்கிறது. ஆனால், அடுத்த உள்மூச்சு நிகழவில்லை என்றாலோ, வாழ்க்கை முடிந்து போகிறது. வாழ்க்கை எந்நேரத்திலும் முடியக் கூடியது. நீங்கள் நினைப்பது போலவே எல்லாம் நடக்குமென எண்ணாதீர்கள். தொட்டால் உடையும் கண்ணாடி போன்றது வாழ்க்கை. யாரெல்லாமோ இறந்து போவார்கள் என எண்ணுகிறீர்கள். ஆனால், நீங்களும் இறக்கக் கூடும் என்பதை நீங்கள் எண்ணுவதில்லை. என்ன ஒன்று, உங்கள் மரண அறிவிப்பை நீங்கள் படிக்க முடியாது, அவ்வளவுதான். அதற்காக உங்களுக்கு மரணம் நிகழாது என்றல்ல; மரணம் மற்றவர்களுக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் எனக்கும் கூட நிகழும். மனித மனம் எல்லாவற்றிலும் கலப்படம் செய்யும் திறமை கொண்டது. மரணத்தில் மட்டும்தான் அதனால் கலப்படம் செய்ய முடியவில்லை. வாழ்வின் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை எது நிகழும், எது நிகழாது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. ஆனால், மரணம் மட்டும் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதனால், நீங்கள் நிலையில்லாதவர் என்பது உங்கள் கவனத்தில் இருப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் இரண்டு முறையாவது நீங்கள் இறந்து போவீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொண்டிருந்தால், வாழ்வின் உயர் பரிமாணங்களை அறிய இயல்பாகவே நீங்கள் முயல்வீர்கள். தாங்கள் நிலையானவர்கள் என்று நினைப்பவர்களுக்குத்தான், முட்டாள்தனமான காரியங்களைச் செய்வதற்கு நேரமிருக்கும். ஆனால், இந்நாள்கூட உங்களின் கடைசி நாளாக இருக்கக் கூடும் என்ற எண்ணமிருந்தால், முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட உங்களுக்கு நேரம் இருக்குமா? தங்கள் நிலையற்ற தன்மையை உணர்ந்தவர்களால் ஒரு விநாடியைக்கூட இழக்க முடியாது. இயல்பாகவே விழிப்புணர்வுடன் இருப்பார்கள். இதைப் பரிசோதித்துப் பார்க்க விருப்பமிருந்தால், உங்களுக்கு வாழ்வில் இன்னும் இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது என எண்ணிக் கொள்ளுங்கள். அபாரமான விழிப்புணர்வுத் தன்மையை அடைவீர்கள். வாழ்வில் எதையுமே தவறவிட மாட்டீர்கள்.

சுடுகாட்டில் ஆன்மீக சாதனை...

ஆன்மீக சாதகர்கள் பலருக்கும் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே சுடுகாட்டில் அமர்ந்திருப்பதுதான். கௌதம புத்தர், தன் சந்நியாசிகளுக்கு இதனைக் கட்டாயப் பாடமாக்கினார். அவர்களுக்குச் சந்நியாசம் வழங்குவதற்கு முன், அவர்கள் இதைச் செய்தே ஆக வேண்டும். எப்போதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் மயானங்களில், மாற்றி மாற்றி உடல்கள் எரிந்து கொண்டே இருப்பதை அவர்கள் சும்மா அமர்ந்து, பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். மரணம் பற்றிச் சிந்திக்காமல், வெறுமனே உடல்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கே எரிந்து கொண்டிருப்பது நீங்கள்தான், உங்கள் உடல்தான் என்பதை உணர்வீர்கள். எரிந்து கொண்டிருப்பது உங்கள் உடல் எனும் உணர்வுடன், உங்களால் அங்கேயே தொடர்ந்து அமர்ந்திருக்க முடிந்தால், மரணத்தை முழுமையாய் ஏற்கும் ஒரு பக்குவம் உங்களுக்கு வரும். மரணத்தை இந்த ஆழமான தளத்தில் நீங்கள் ஏற்றுக்கொண்டால், அதன்பின் வாழ்க்கை அபரிமிதமான அளவுகளில் உங்களுக்கு நிகழும். ஆனால், மரணத்தை உங்களிடமிருந்து தள்ளி வைக்க முற்படுவதால், வாழ்வும் உங்களிடமிருந்து விலகியே இருக்கிறது.

மனித மனத்தின் மிகப் பெரிய பிரச்சினையே, மரணத்தை எதிர்க்கும் அதன் தன்மைதான். ஏனெனில், மரணத்தை நிராகரிக்கும் அதே நொடியில், நீங்கள் வாழ்வையும் சேர்த்து நிராகரிக்கிறீர்கள். உங்கள் மனதினின்று மரணத்தை வெளியில் நிறுத்தப் பார்த்தால், வாழ்வின் எல்லா வாய்ப்புகளும் அத்துடன் சேர்ந்து வெளியிலேயே நின்று போகும்.
மரணம் என்றால் என்னவென்று உங்களுக்குப் புரியும்போதுதான், வாழ்க்கை என்றால் என்னவென்றும் உங்களுக்குப் புரிகிறது. வாழ்வின் பொருளென்ன எனும் கேள்வி உங்களுக்குள் எழும்போதுதான், உங்கள் ஆன்மீகப் பயிற்சி தொடங்குகிறது. மரணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறபோது, உங்களுக்கு மரணம் நிகழும் என்பதை நீங்கள் உணரும்போது, வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் அழகானதாய் ஆக்க முற்படுவீர்கள். அப்போது, உங்களுக்கு அபத்தங்களுக்கெல்லாம் நேரமிராது. இதுதான் விழிப்பு உணர்வோடு இருப்பதற்கான எளிய வழி.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1