மரண தண்டனை தேவையா? நம் விதியை நாமே தீர்மானிக்க முடியுமா? ரெய்க்கி சிகிச்சை நல்லதா? இப்படியான கேள்விகளை நம் நண்பர்களிடமோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடமோ கேட்டால் அது முடியாத விவாதமாகலாம். சத்குருவிடம் கேட்டால்...

Question: சத்குரு, மரண தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு:

அண்மையில் மும்பாய் கலவரம் குறித்த வழக்கில் பன்னிரெண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் உறவினர்களைப் பார்க்கும்போது, உங்கள் மனம் வேதனைப்படலாம். ஆனால் இந்தப் பன்னிரெண்டு பேரால், அநியாயமாக சில நூறு பேர்களில் உயிர்கள் பறிக்கப்பட்டதை எப்படி மறக்க முடியும்?

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைகளை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால் இன்றைய சமூகச் சூழ்நிலையில் இதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை!

சமூகக் கோட்பாடுகளில் இக்குற்றங்களுக்கு தண்டனைகள் தரப்படவில்லையென்றால், இக்குற்றங்கள் கேள்வி கேட்பாரின்றி பெருகிவிடும் அபாயம் இருக்கிறது. இந்த பூமியில் வாழ்பவர்கள் அச்சத்திலேயே வாழ வேண்டி வரும்.

தனிப்பட்ட முறையில் மரண தண்டனைகளை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால் இன்றைய சமூகச் சூழ்நிலையில் இதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: சத்குரு யோகாவின் மூலம் ஒருவர் தன் விதியைத் தானே தீர்மானிக்க முடியும் என்று சொல்கிறீர்கள். ஆனால் முந்தைய கர்மவினைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றுதானே ஆன்மீக குருமார்கள் சொல்லி வந்திருக்கின்றனர்... இது முரண்பாடாக இருக்கிறதே?

சத்குரு:

பிராரப்தம் என்பது ஒரு பிறவிக்காக ஒதுக்கப்பட்ட கர்மவினைகள் என்பது உண்மைதான். அவற்றின் விளைவுகள் உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்லவை என்பதும் உண்மைதான்.

ஆனால் யோகாவின் சில கருவிகளால் அதை சொற்ப காலத்துக்குள்ளாகவே மாற்றிவிட முடியும். வாழ்க்கையின் மிச்ச காலத்தை நம் விருப்பப்படி அமைத்துக்கொள்ள முடியும்.

ஏதோ ஒரு வேலையை ஒருவித வேகத்தில் செய்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள். அதை மிகத் துரிதமாக செய்து முடிக்க, புதிதாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் படுவதில்லையா? அது போல்தான் இதுவும்.

ஆன்மீகப் பாதையில் உரிய கருவிகளைப் பயன்படுத்தத் துவங்கியதும், வேலைகள் துரிதமாக நடப்பதைப் பலர் கண்கூடாகக் கவனித்து உணர்ந்திருக்கிறார்கள்.

Question: ரெய்க்கி முறை மூலம் குணப்படுத்தும்போது, அடுத்தவரின் கர்மவினைகளை நான் ஏற்றுக்கொள்கிறேனா?

சத்குரு:

அடுத்தவரின் கர்மவினைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வது என்பது ஒருபோதும் நிகழ்வதில்லை. ஆனால் அடுத்தவரின் கர்மவினைகளை நீங்கள் குளறுபடி செய்யக்கூடும். அதனால் உங்கள் கர்மவினைகளையும் குளறுபடி செய்து அவை சிக்கலாகிப் போகலாம்.

குணப்படுத்துபவர் என்று இயேசுவை சிலர் விளம்பரப் படுத்துவதால் நேரும் குழப்பம் இது. மற்றவரை குணப்படுத்துவது என்பதே இங்கே ஒரு வணிகமாகிவிட்டது.

‘இயேசு என்னை குணப்படுத்திவிட்டார்’ என்று பிரகடனம் செய்தவர்களிடமே இயேசு என்ன சொன்னார் தெரியுமா? ‘உங்களை’ குணப்படுத்தியது நானல்ல, நீங்கள்தான் என்றார்.

உடலால் ஊனமுற்ற ஒரு பெரிய கூட்டம் அவரைச் சந்தித்தது. மற்றவர்கள் போல் எங்களுக்கு ஏன் முழுமையான உடல் இல்லை? நீங்கள் எங்களைக் குணப்படுத்தக் கூடாதா? என்று அவர்கள் கேட்டனர்.

இயேசு சொன்னார், நீங்கள் சாப்பிடும் உணவும், உங்கள் பழக்கவழக்கங்களும், உங்கள் மனநிலையும்தான் உங்கள் உடல்கள் பழுதடையக் காரணம், நாற்பது நாட்களுக்கு நீர் மட்டுமே அருந்தி விரதமிருந்தால், ஆச்சரியமான மாறுதல்களைக் காண்பீர்கள்.

தன்னை நாடி வந்த அந்த ஊனமுற்றவர்களுக்கு அவர் சில க்ரியாக்களைக் கற்றுத்தந்தார். உடலை, முக்கியமாகக் குடலைச் சுத்தம் செய்வதற்கான அந்தப் பயிற்சிகளைக் கற்றுத்தந்தாரே தவிர, பார்ப்பவர்களையெல்லாம் அவர் குணப்படுத்திக்கொண்டு இருக்கவில்லை.

சரியான உணவுப் பழக்கங்களும், உடலையும், மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வதும் மட்டுமே ஒருவரைக் குணப்படுத்த வேண்டும். மற்ற முறைகள் அல்ல!