மற்ற படைப்புகளை விட மனிதன்தான் அதிக துன்பம் அனுபவிப்பதைப் போன்றதொரு பார்வை பொதுவாக உள்ளதே?! இது சரியான பார்வையா? விலங்குகளை விட மனிதன் எந்த வகையில் சுதந்திரமானவன்? சத்குருவின் பதில்களை தொடர்ந்து படித்தறியலாம்!

Question: விலங்குகளை விட, மனிதர்கள் ஏன் அதிகமாகத் துன்பப்படுகின்றனர்?

சத்குரு:

நீங்கள் மனிதர்களுடைய இன்ப துன்பங்களில் மட்டும் அக்கறை கொள்கிறீர்கள். எனவே அதை மட்டும் கவனிக்கிறீர்கள். விலங்குகள் துன்பப்படுவதை நீங்கள் கவனிப்பதில்லை. மக்கள் தாங்கள் மட்டுமே துன்பத்திலிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையினால், படைப்பில் உள்ள அனைத்தையும் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எறும்புகளிடம் நீங்கள் பேச நேர்ந்தால், உங்களைப் பற்றியும், உலகிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அவைகள் எவ்வளவோ புகார்களை அடுக்கலாம்.

நீங்கள் நடக்கும்போது, தினமும் நூறு எறும்புகளையாவது மிதிக்கிறீர்கள். இதனால் பல எறும்புகள் இறந்துபோகின்றன. பல உயிருக்குப் போராடுகின்றன. ஆனால் அவைகளின் இந்தத் துன்பத்தை நீங்கள் அறிவதில்லை. நடக்க வேண்டியிருப்பதால் உண்டாகும் கால்களின் வலிமட்டுமே நீங்கள் அறிகிறீர்கள். அது எப்போதும் ஒப்புமை தொடர்பான ஒரு புரிதல்.

உங்கள் துன்பம், உங்கள் மகிழ்ச்சி மற்றும் உங்கள் நல்வாழ்வு போன்றவற்றை எப்போதும் உங்கள் கண்ணோட்டத்திலிருந்துதான் பார்க்கிறீர்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் மூலமாகத்தான் நடக்கிறது. உங்களது உணர்தலின் அடிப்படை உங்களுக்குள் நிகழ்வதால், நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறீர்கள். அந்த கண்ணோட்டம் காரணமாகத்தான், விலங்குகளைவிட மனிதர்கள் அதிகமான துன்பத்திற்குள்ளாவதாக நீங்கள் கூறுகிறீர்கள். எறும்புகளிடம் நீங்கள் பேச நேர்ந்தால், உங்களைப் பற்றியும், உலகிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் அவைகள் எவ்வளவோ புகார்களை அடுக்கலாம். மனிதர்களை விட எறும்புகள் மிகஅதிகமான துன்பம் கொள்கின்றன.

ஆனால் ஏதேனும் தவறாகிப் போனால் விலங்குகள் உடலளவில் மட்டும்தான் துன்பப்படுகின்றன. மற்ற படைப்புகளை விட மனிதர்கள் இன்னும் அதிகமாகத் துன்பம் கொள்கின்றனர். ஏனென்றால், நமக்கு நிர்ணயிக்கக்கூடிய அறிவு இருக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் துன்பங்கள் மனரீதியானவை. ஆனால் மனரீதியான துன்பங்கள் சுய உருவாக்கமே. ஒரு மனிதர் தனக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் உருவாக்கிக்கொள்வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். இதற்கான காரணம், அவருக்கு நிர்ணயிக்கக்கூடிய மனம் உள்ளது. இந்தக் கணத்தில் தான் எப்படி இருப்பது என்று அவரால் தேர்வு செய்ய முடியும். ஒருவர் தன்னை ஆனந்தமாக வைத்துக்கொள்ளலாம் அல்லது துன்பத்தில் ஆழ்த்திக்கொள்ளலாம். மனதைக் கொண்டு தங்கள் மனதில் எதை வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஒவ்வொரு கணமும் உங்களுக்கு இந்தத் தேர்வு இருந்து கொண்டிருக்கிறது.

உங்களது மனம் ஒரு திட நிலையில் இல்லை, அது நெகிழ்ச்சியான நிலையிலானது. அது எந்த வடிவத்தையும் எடுக்குமாறு உங்களால் செய்ய முடியும். ஒரு மரத்தைப் பார்த்து, “ஓ, கடவுள் இதில் குடிகொண்டிருக்கிறார், என்ன ஒரு அற்புதம்”, என்றும் கூறலாம். அதே மரத்தைத் திகிலுடன் பார்த்து, “ஒருவேளை இதில் பிசாசுகள் தொங்கிக் கொண்டிருக்கலாம்”, என்றும் கூறலாம். மனதின் எண்ணங்களுக்கு முடிவே இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கணத்திலும், நீங்கள் விரும்புகிற விதமாக இருக்கக்கூடிய திறன் உங்களுக்கு உண்டு. துரதிருஷ்டவசமாக, தங்களை எப்படித் துயரத்திற்குள்ளாக்குவது என்பதையே பெரும்பாலான மக்களும் கற்றிருக்கின்றனர். அதுதான் பிரச்சனையாக உள்ளது.

ஒரு விலங்கிற்கு இத்தகைய பிரச்சனைகள் எதுவும் இல்லை. வேறு ஏதாவதொரு உயிரினமாக நீங்கள் இருந்திருந்தால், வாழ்க்கை உங்களுக்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும். ஒரு புலி பிறக்கும்போது, “நான் எப்படி ஒரு நல்ல புலியாக வளர்வது? நான் எந்தக் கடவுளை வணங்கவேண்டும்? நான் எந்தப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது?” என்றெல்லாம் வருந்திக் கொண்டிருப்பதில்லை. இத்தகைய எந்தப்பிரச்சனைகளும் புலிக்கு இல்லை. நல்ல உணவு கிடைத்துவிட்டால் போதும், அது ஒரு நல்ல புலியாகிவிடும். அதற்கு எது குறித்தும் அச்சங்களும், பாதுகாப்பற்ற தன்மைகளும் இல்லை,” உண்மையிலேயே நான் ஒரு நல்ல புலியாவேனா? நான் ஒரு வீட்டுப்பூனையாகிவிட்டால் என்ன செய்வது?” இந்த மாதிரியான போராட்டங்களெல்லாம் அதற்கு இல்லை. ஆனால் நீங்கள் ஒரு மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள். ஒரு நல்ல மனிதராவதற்கு, நீங்கள் எவ்வளவு விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்! இத்தனையும் செய்தபிறகும் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இன்னமும் அறியவில்லை. வேறு ஒருவருடன் ஒப்பிட்டுத்தான், “நான் சற்று மேலானவன்” என்று உங்களால் கூறமுடிகிறது. ஆனால் ஒப்புநோக்குதல் இன்றி உங்கள் உண்மைநிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியாமல்தான் இருக்கிறீர்கள்.

இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் விலங்காக இருந்தபோது, உங்கள் வாழ்க்கை ஆரம்பம் முதல் இறுதிவரை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக இருந்தது. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. எந்த ஒரு விலங்கின் முகத்திலாவது குழப்பம் இருக்கிறதா? விலங்குகள் தெளிவாகஉள்ளன. என்ன செய்யவேண்டும் என்பதை நன்றாக அறிந்திருக்கின்றன. ஆனால் ஒரு மனிதன் எந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்கிறானோ அந்த அளவுக்குக் குழப்பமும் அடைகிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் குழப்பமாக இருக்கிறது.

ஒரு முட்டாள்தான் படு நிச்சயமாக இருக்கிறான். ஒரு புத்திசாலி, அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் எப்போதும் குழப்பம் கொள்கிறான். காலை உணவைத் தேர்வு செய்யும் ஒரு விஷயத்திலேயே அவன் முற்றிலும் குழப்பமடையலாம். ஏனெனில் மனிதராக வந்தபிறகு உங்களுக்கு அனைத்திலும் முழுமையான வாய்ப்புகள் தரப்படுகிறது. உங்களது வாழ்வு இப்படித்தான் நடக்கவேண்டும் என்று இறுதி செய்யப்படவில்லை. நீங்கள் என்னவாக வேண்டுமென்று தேர்வு செய்யக்கூடிய சுதந்திரத்தை இயற்கை உங்களுக்கு அளித்துள்ளது.

மற்ற உயிரினங்களுடைய வாழ்வின் போக்கை இயற்கை முடிவு செய்திருப்பதைப் போன்று, உங்கள் வாழ்க்கையை அது முடிவு செய்யவில்லை. ஒரு நாய் அல்லது பறவையின் வாழ்க்கையைப் போல உங்களுடைய வாழ்க்கையையும் இயற்கை முடிவு செய்திருந்தால், நீங்களும்கூட வெறுமனே சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது, பிறகு ஒரு நாள் இறந்துவிடுவது என்று வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், இப்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பம்போல் நீங்கள் உருவாகலாம். இந்தக் கணம், நீங்கள் கடவுள் போல இருக்கலாம் அல்லது ஒரு காட்டுமிராண்டியாகவும் இருக்கலாம். இரண்டிற்கான வாய்ப்பும் உங்களுக்குள் உள்ளது.

ஒரு மனிதருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சுதந்திரம்தான் அத்தனை வலி மற்றும் போராட்டத்திற்குக் காரணமாக உள்ளது. மனிதர்கள் தங்களது பிணைப்பினால் துன்பப்படவில்லை, தங்களது சுதந்திரத்தினால்தான் துன்பப்படுகின்றனர். அதுதான் மிகப் பெரிய வேதனை. அடிமைத்தனத்தால்தான் அவர்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு ஏதாவது உதவி செய்யமுடியும். உங்களைப் பிணைத்திருக்கும் அந்த ஒரு சங்கிலியை உடைத்துவிட்டால் போதும். ஆனால் சுதந்திரம்தான் அவர்கள் துயரத்திற்கான மூலகாரணம் என்றால் அதற்கு நாம் எப்படி தீர்வு காண்பது?

எல்லையில்லாமல் வாழ்வதற்குரிய வழியாக இருக்கக்கூடிய சுதந்திரம், உங்கள் துன்பத்திற்கான வழியாக இருக்கிறது என்றால் அதன் காரணம் நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருப்பதுதான்.

எல்லையில்லாமல் வாழ்வதற்குரிய வழியாக இருக்கக்கூடிய சுதந்திரம், உங்கள் துன்பத்திற்கான வழியாக இருக்கிறது என்றால் அதன் காரணம் நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருப்பதுதான். நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கும்போது, சுதந்திரம்தான் பிரச்சனையாக இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால், அதே சுதந்திரம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். தியானத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஏனென்றால், உங்களுக்குள் அது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

எனவே உங்களது சுதந்திரத்தினால் நீங்கள் துன்பம் கொள்ளாமல், அதைப் பயன்படுத்தி உங்களுக்குள் இருக்கும் மகத்தான ஒரு பரிமாணத்தை மலரச் செய்கிறீர்கள். ஒவ்வொரு மனிதரும் இந்த வாய்ப்புடன் பிறக்கிறார். ஆனால் ஒரேவிதமான வாய்ப்புகள் தரப்பட்டாலும், அனைவரும் ஒரேவிதமாக அவர்களுக்குள் மலர்வதில்லை. காரணம், நீங்கள் விரும்பியவாறு உங்களை உருவாக்கிக்கொள்ள உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. விழிப்புணர்வு இருந்தால், இந்தக் கணத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளலாம். அதற்கான தேர்ந்தெடுத்தல் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மிக அழகான கதை ஒன்று உள்ளது. வயதான ஒரு யோகி, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அவர் தன்னைக் காண வருபவர்களிடம், தான் சொர்க்கம் செல்லப்போவதாகக் கூறிக்கொண்டே இருந்தார். அப்போது அங்கு உடனிருந்த மற்ற யோகிகள் வியப்புடன், “சொர்க்கம் செல்லப்போவதை அவர் எப்படி அறிவார்?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆனால் அந்த யோகி அசையாத நம்பிக்கையுடன் அதையே கூறிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அனைவரும் ஒன்றாக யோகியிடம் சென்று, “நீங்கள் சொர்க்கத்திற்குத்தான் செல்வீர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? கடவுளின் மனதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களை அவர் சொர்க்கத்திற்கு அனுப்புவாரா அல்லது நரகத்திற்கு அனுப்புவாரா என்பதை எப்படி அறிவீர்கள்?” என்று கேட்டனர்.

“கடவுளின் மனதில் என்ன இருக்கிறது என்பதில் எனக்கு அக்கறை இல்லை. என் மனதில் என்னஉள்ளது என்பதை நான் அறிவேன். நான் சொர்க்கம் செல்கிறேன், அவ்வளவுதான்” என்றார் அந்த யோகி. எல்லாமே இவ்வளவுதான்.