Question: இப்போதெல்லாம் நவீன மருத்துவத்தின் உதவியால் பல இறப்புகள் தவிர்க்கப்படுகின்றன. சிசுமரணமும் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் நம்மையும் மீறி மன வளர்ச்சி குன்றிப் பிறக்கும் குழந்தைகளை எப்படி பராமரிப்பது?

சத்குரு:

இந்த உலகமே மனவளர்ச்சி குன்றியவர்களால்தானே நிரம்பியிருக்கிறது! ஒருவர் தன் முழுத் திறனை அடையாதபோது அவரை மூளை வளர்ச்சி குறைந்தவர் என்றுதானே சொல்ல வேண்டும்? (சிரிக்கிறார்) ஒரு சில குழந்தைகள் இப்படி பிறந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்களை நாம் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்று அழைக்க முடியாது. ஏதோ காரணங்களால் ஒருசில குழந்தைகள் அவ்வாறு பிறக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இயற்கையை நுட்பமாகக் கவனித்தால் அதனிடம் இயல்பாகவே ‘தேர்ந்தெடுக்கும் குணம்’ இருப்பதைக் காணலாம்.

இயற்கையை நுட்பமாகக் கவனித்தால் அதனிடம் இயல்பாகவே ‘தேர்ந்தெடுக்கும் குணம்’ இருப்பதைக் காணலாம். எந்த உயிர் வாழலாம், எந்த உயிர் இருக்கக் கூடாது என்று தேர்வு செய்யும் குணம் இயற்கைக்கு உள்ளது. இயற்கையின் அந்த தேர்ந்தெடுக்கும் குணத்தை நாம் பல வகைகளிலும் மாற்ற முயற்சிக்கிறோம்.

இக்காலத்தில் ஆறு மாதத்திலேயே ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றாலும் இன்குபேட்டரில் வைத்து, ஏதேதோ செய்து அக்குழந்தையை உயிர் பிழைக்க வைத்து விடுகின்றனர். இப்படி செய்வதினால் அக்குழந்தைக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்சனைதான். அக்குழந்தை சுகமாக வாழ்வதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவுதான். ஆனால் யாரோ ஒருவர் ஆராய்ச்சி எல்லாம் செய்து நான் இயற்கையைவிட மேலானவன் என்று நிரூபிப்பதற்காக இதையெல்லாம் செய்கிறார். மனிதனுடைய மனோநிலையைப் பொறுத்தவரையில், ‘நான் இயற்கையைவிட மேலானவன்’ என்று நிரூபிக்க வேண்டும். பிறந்த உயிர் நன்றாக வாழ வேண்டும், முழுமையாக வாழ வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல் போய்விட்டது. எப்படியோ ஒரு சதைப்பிண்டமாகவாவது, அவனை நடமாட விட்டுவிட்டால், நமக்கு பாராட்டு கிடைக்கும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், பாராட்டுகள் என்று மனிதர்களின் முழு கவனமும் அந்த திசையில் செல்கிறது.

அந்த உயிர் எப்படி வாழும், இப்படியே இருந்தால் எவ்வளவு கஷ்டப்படும், சுகமாக வாழமுடியுமா என்பதில் எல்லாம் நமக்கு கவனம் இல்லாமல் போய்விட்டது. மருத்துவமனையில் வைத்தாவது வளர்த்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏனென்றால் நமக்கு நம் உடல் மீது மிகுந்த பற்று ஏற்பட்டுவிட்டது. உடல் என்பதைத் தாண்டி நம்மால் பார்க்க முடியவில்லை.

நான் இதையெல்லாம் பேசுவது எனக்கு ஆபத்துதான். ஏனென்றால் மக்கள் இதனை திரித்துப் பேசத்தொடங்கி விடுவார்கள். ஓ! சத்குரு மூளை வளர்ச்சி இல்லாதவர்களின் உயிர்களையெல்லாம் எடுத்துவிடச் சொன்னார் என்று புரளி கிளப்பி விடுவார்கள். நான் அவர்கள் உயிரைப் பறித்து விடுங்கள் என்று கூறவில்லை. இயற்கைக்கு என்று ஒரு தரநிர்ணயம் உள்ளது. எப்படி நாம் தொழிற்சாலைகளில் தயார் செய்யும் பொருட்களுக்கு தர நிர்ணயம் வைத்துள்ளோமோ அவ்வாறே இயற்கையும் எல்லாவற்றிற்கும் ஒரு தரநிர்ணயம் வைத்துள்ளது.

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை.

இயற்கையில் இவ்வளவு பிரம்மாண்டமான தயாரிப்புகள் நடைபெறுகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிழைகள் ஏற்படுகின்றன. அதற்காக அவர்களை எல்லாம் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டுமா? அப்படி அல்ல. நாம் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ளலாம். அவர்கள் அந்த எல்லைக்குள் வரவில்லை என்றால் அவர்களை இயற்கையின் பொறுப்பில் விட்டுவிடலாம். இயற்கை அவர்களுக்கு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அதன்படி விடுவதற்கு நமக்கு மனஉறுதி வேண்டும். 90 வயதில் இறப்பவர்களைக் கூட இயற்கையாக இறக்கவிடாமல் அவர் உடலில் டியூப்களைச் சொருகி, சித்ரவதை செய்து, மருத்துவமனையில் அவரை எப்படியெல்லாம் துன்பத்திற்கு உள்ளாக்க முடியுமோ, அதையெல்லாம் செய்து, அதன்பின் அவர் உயிர் பிரியுமாறு செய்கிறோம்.

தன் கடைசி காலத்தில் இறக்கப்போகும் ஒருவர் சுகமாக இறக்கக் கூடாதா? அல்லது அவர் இறக்கவே கூடாது என்று நினைக்கிறார்களா? கடைசி வரையில் அவரை இழுத்தடித்து துன்புறுத்த வேண்டுமா? இதற்கெல்லாம் காரணம், நமக்கு ‘உயிர்’ பற்றிய புரிதல், அறிவு, ஞானம் எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்த உயிர் எப்படிச் செயல்படுகிறது, அதற்கு ஏற்ற உடல் அமைந்துள்ளதா, என்றெல்லாம் பார்க்காமல் அவரை வெறும் உடலாக மட்டுமே பார்க்கின்றோம். இது சாதனை அல்ல. உயிரைப் பற்றி புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் அசிங்கம் என்றே இதைச் சொல்லலாம். பத்து பேர் முன் நம்மை நாமே நிரூபித்துக் கொள்ள வேண்டிய தருணமல்ல இது. மேலும் இது நிரூபித்துக் காட்டும் விஷயமும் அல்ல.

எனவே இந்த விஷயத்தை இன்னும் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும். அப்படியொரு குழந்தை பிறக்கும்போது, அக்குழந்தைக்கு எந்த அளவிற்கு நாம் சிகிச்சைகள் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்கிற முதிர்ச்சி முதலில் ஏற்பட வேண்டும். எதுவரையில் நாம் உதவலாம் என்கிற பக்குவம் நிச்சயம் ஏற்பட வேண்டும். அக்குழந்தை உயிர் பிழைக்க முடியாத சூழ்நிலையிலும், எவ்வளவு மோசமான குறைபாடுகளுடன் பிறந்திருந்தாலும் அதனை உயிருடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மை நீங்க வேண்டும். நம்மையும் மீறி, ஏதோ சில குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாமல், ஆனால் நல்ல உடல்நிலையுடன் பிறந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்கென்று தனியிடம் வழங்கி அவர்களை சுகமாக வளர்க்க வேண்டியதுதான். ஆனால் இந்தக் குழந்தையை இயல்பான திறமையுடன் பிறந்துள்ள குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அந்த குழந்தைபோல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை நாம் என்னவென்று சொல்வது?

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை. யாரோ ஒருவர் காலில் ஊனமுடன் இருக்கிறார் என்றால் அவருக்கு தேவையான வசதியை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். அவரை மாடிப்படி ஏறு என்று யாரும் ஏளனம் செய்வதில்லை. அதேபோல் குறைபாடுள்ள ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டில் அழைப்பது போல அவரை சிறப்புக் குழந்தை (special child) என்று அழைக்கவும் தேவையில்லை. அவரை தரக்குறைவாக நடத்தவும் வேண்டியதில்லை. ஏதோ நம்மால் இயன்ற வரையில் அவருக்கு ஏற்ற சிறப்பான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதைத்தான்!