Question: சத்குரு, இந்த மனதை நிறுத்துவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

சூன்ய தியானம்

உங்கள் சக்திநிலைகளின் மீது ஆளுமை இருந்தால் 100% வாழ்க்கையும் உங்கள் கைகளில் இருக்கும்.

உங்கள் மனம் ஏன் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது என்றால், அது தவறாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை அதற்கு அடையாளத்தைக் கொடுத்துவிட்டால் அது காலமெல்லாம் சுழன்று கொண்டேயிருக்கிறது. அதனால்தான் ஈஷாவின் மேல்நிலை வகுப்புகளில் சூன்ய தியானத்திற்கு தீட்சை கொடுக்கிறோம். ‘சூன்யா’ என்றால் வெறுமை. எதுவும் செய்யாமல் இருப்பது. சூன்யாவில் அமர்ந்திருந்தால், நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், உங்கள் உடல் தனியாக இருக்கிறது, உங்களுடைய மனம் தனியாக இருக்கிறது. ‘நீங்கள்’ என்பது வேறு எங்கோ இருக்கிறது. ஒருமுறை உங்களுக்கும், நீங்கள் சேகரித்த இந்த உடலுக்கும், மனதிற்கும் இடையே ஒரு இடைவெளி உருவாக்கப்படுமானால், மனம் என்பது ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம்.

மனம் ஒரு பிரச்சனையா?

‘மனம்’ என்பது ஒரு பிரச்சனையில்லை. இது ஒரு அற்புதம். ஏனென்றால், இந்த மனதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை நீங்கள் அறியவில்லை. இதை நீங்கள் விழிப்புணர்வாக பயன்படுத்தாமல் ஒரு தற்செயல் நிகழ்வாகவே பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் தான் ஒரு சிக்கலாக மாறிவிட்டது. அந்த சிக்கலின் காரணமாக தற்போது மக்கள் மனமில்லாமல் ஆவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனம் தற்போது உள்ள நிலையில் பரிணமிப்பதற்கு கோடிக்கணக்கான வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால் மக்கள் இப்போது அதை குப்பைக் கூடையில் கடாச விரும்புகிறார்கள். இது மிகப் பெரும் அற்புதம். இல்லையா? இந்த பூமியில் மனம் என்பது மிகப் பெரிய அற்புதம். ஆனால் தற்போது அது துயரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாகி விட்டது. எனவே, தற்போது அதை நிறுத்த விரும்புகிறீர்கள், வீசியெறிய விரும்புகிறீர்கள். மனம் பிரச்சனையல்ல. உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியவில்லை என்றால் எங்காவது சென்று மோதி உயிரிழப்பீர்கள் அல்லது படுகாயம் அடைவீர்கள். காரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு ஓட்டத் தெரியவில்லை என்பது தான் பிரச்சனை. இப்போதும் கூட மனம் பிரச்சனை இல்லை, நீங்கள்தான் பிரச்சனை. உங்கள் மனம் பைத்தியக்காரத்தனமாய் போகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு?

உங்கள் விதி உங்கள் கைகளில்

ஒரு காலத்தில் உடலைப் பொறுத்தவரை எல்லாமே சரியாக உள்ளது என்றுதான் நம்பினோம். இன்று உடலைப் பற்றி எல்லோருமே சிந்திக்கிறார்களா இல்லையா? உடற்பயிற்சிகளை சரியாகச் செய்யாவிட்டால் உங்கள் உடல் நோய்வாய்ப்படும் இல்லையா? ஒருகாலத்தில் நலவாழ்வு என்றால் இப்படி இருப்பதுதான் என்று நினைத்தோம். இன்று நலவாழ்வு என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த மாற்றம் எப்போது நடந்தது? உங்கள் உடல் பற்றி புரிதல் அதிகரிக்கும்போது தான் இந்த மாற்றமும் நடந்தது. உடலுக்கு நீங்கள் செய்வதைப் போலவே, உங்கள் மூளைக்கும் செய்ய வேண்டும். உங்கள் உயிர் சக்திக்கும் செய்ய வேண்டும். யோகாவின் மூலம் உங்கள் உயிர்சக்தியோடு தினமும் பயிற்சி செய்தால் இங்கே நீங்கள் முற்றிலும் மாறுபட்ட மனிதராக வாழ்வீர்கள்.

உங்கள் உடலின் மீது உங்களுக்கு ஆளுமை இருக்குமானால் 15-20% சதவீதம் வாழ்க்கையும், விதியும் உங்கள் கைகளில் இருக்கும். உங்கள் மனதின் மீது ஆளுமை இருந்தால் 50% உங்கள் கைகளில் இருக்கும். உங்கள் சக்திநிலைகளின் மீது ஆளுமை இருந்தால் 100% வாழ்க்கையும் உங்கள் கைகளில் இருக்கும். யோக அறிவியல் என்பது இதுதான். உங்கள் விதியை உங்கள் கைகளில் எடுப்பது.