மனச்சோர்விலிருந்து வெளிவர என்ன தேவை?
அனைவருமே ஆனந்தமாக வாழவே விரும்புகிறோம். ஆனாலும் சில நேரங்களில் நாம் சோர்ந்து போய்விடுகிறோம். அந்தச் சூழ்நிலையை, அத்தகைய மனநிலையை எப்படிக் கையாள்வது?
 
மனச்சோர்விலிருந்து வெளிவர என்ன தேவை?, Manasorvilirunthu velivara enna thevai?
 

Question:அனைவருமே ஆனந்தமாக வாழவே விரும்புகிறோம். ஆனாலும் சில நேரங்களில் நாம் சோர்ந்து போய்விடுகிறோம். அந்தச் சூழ்நிலையை, அத்தகைய மனநிலையை எப்படிக் கையாள்வது?

சத்குரு:

முதலில் உங்களுக்கு துயரம் எப்படி ஏற்படுகிறது? ஒரு விஷயம் குறிப்பிட்ட விதத்தில் நடக்க வேண்டுமென்று சில மனிதர்களையோ, சில சம்பவங்களையோ, ஏன் விதியையோகூட எதிர்பார்த்திருப்பீர்கள். அது வேறு மாதிரியாக நடைபெற்றுவிடுகிறது. அப்படி ஒரு தனிமனிதர் அல்லது ஒரு சம்பவம் அல்லது வாழ்க்கையின் போக்கு ஏதோ ஒன்று உங்களுக்கு எதிராக இருக்கிறது என்று நீங்கள் கருதும்போது, அதற்கேற்ப உங்கள் மனச்சோர்வும் துயரமும் அதிகரிக்கிறது.

மனதில் சோர்வும் துயரமும் சூழ்ந்திருக்கிறபோது, வாழ்க்கையை அதன் உண்மையான தன்மையில் உணரமுடியாது.

இந்தச் சோர்வும் துயரும் உலகை உருவாக்கிய ஆற்றலின்மீது நீங்கள் நிறைவேற்றுகிற ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம். யாருக்கு ‘தான்’ என்கிற உணர்வு அதிகம் இருக்கிறதோ, அவர்கள் மிக விரைவில் இதுபோன்ற மனக்காயங்களுக்கு ஆளாகிறார்கள். மனச்சோர்வு கொண்ட பலரின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்கள் ஆணவம் மிகுந்தவர்களாய் இருந்தது தெரியவரும்.

இத்தகைய மனச்சோர்வு பெரிதாக வன்முறையை ஏற்படுத்தாது. ஆனால், தனக்கே ஒரு சேதத்தை ஏற்படுத்தும். பொதுவாக மனச் சோர்வு உள்ளவர்கள் கொலை செய்வதில்லை. தற்கொலை செய்து கொள்ளவே முயல்வார்கள். தங்களுக்குத் தாங்களே துன்பம் விளைவித்துக் கொள்வார்கள். இது அடுத்தவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சி.

மனம் புண்படுகிறது என்கிறீர்களே, அதன் பொருள் என்ன? உங்களுக்குள் இருக்கிற அகங்காரம் புண்படுகிறது என்பதுதான் பொருள். வேறுவிதமாய் புண்பட முடியுமா என்ன? ஒருவர் ஆயுதம் கொண்டு தாக்கினால், உங்கள் உடல் காயப்படும். மற்றபடி உங்கள் மனம் காயமடைகிறது என்றால், அது உங்கள் அகங்காரத்தில் ஏற்படுகிற காயத்தைத்தான் குறிக்கும்.

மனதில் சோர்வும் துயரமும் சூழ்ந்திருக்கிறபோது, வாழ்க்கையை அதன் உண்மையான தன்மையில் உணரமுடியாது. மனது சரியில்லை என்கிறபோது, ஒரு மலரைப் பார்த்தால்கூட அதன் அழகை உங்களால் உணர முடியாது. வெளியில் இருக்கும் அழகை உணர உள்நிலையும் அழகாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. துயரத்தைக் கையாள்வதற்கென்று பலமுறைகள் உள்ளன. சிலருக்குத் துயரம் ஏற்பட்டால், தங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாய் கருதி வருத்தத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். சிலரோ, துயரமான மனநிலையையும், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய கர்மயோகிகள் ஆகியிருக்கிறார்கள்.

சாகாயத்திரி மலை பசுமையான கதை...

எதிர்மறை என்பதாக எதுவுமே இல்லை. எதிர்மறையானதும் அடிப்படையில் நேர்மறையானதுதான்.

மத்தியப் பிரதேசத்தில் ஒருவர், சாகாயத்திரி மலைகளுக்கு அருகே ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்தார். இரண்டு குழந்தைகளுமே நோய்வாய்ப்பட்டு ஒருவர் பின் ஒருவராக இறந்துபோனார்கள். அதன் பிறகு, தன் மனைவி மேல் மிகுந்த அன்பு வைத்து அவரையே சார்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு வருடத்துக்குப் பின் அவரது மனைவியும் இறந்துபோனார். இந்த மனிதர் நிராதரவாக நின்றார்.

யார் யாரையெல்லாம் தன் வாழ்வின் ஆதாரங்கள் என்று கருதினாரோ, அவர்களை எல்லாம் இழந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் சுற்றிவந்து சாகாயத்திரி மலைகளுக்குள் சென்றுவிட்டார். குழந்தைப் பருவம் தொடங்கி அவர் பார்த்துக்கொண்டே இருந்த மலை. செழிப்பாகவும் பசுமையாகவும் இருந்த அந்த மலை, இப்போது மரங்களே இல்லாமல் வறண்டு பசுமையிழந்து காணப்படுவதை உணர்ந்தார். சில நாட்கள் மலையிலேயே திரிந்து, அங்கிருந்த காய்கனிகளை உண்டு காலம் கடத்தினார். சில நாட்கள் கழித்து அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இந்த மலையே வறண்டுபோனதால்தான் தன் வாழ்க்கையும் வறண்டுபோய்விட்டதாகக் கருதினார். இது உண்மையோ இல்லையோ, அப்படி ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றிவிட்டது. அதனால் அங்குமிங்கும் விழுந்துகிடந்த விதைகளைப் பொறுக்கி ஆங்காங்கே நட்டுவைக்கத் தொடங்கினார்.

25 ஆண்டுகளில் ஒரு தனிமனிதராக 4 லட்சம் மரங்களை வளர்த்தார். அந்தத் தனிமனிதரின் செயலால் இன்றும் சாகாயத்திரி மலையில் லட்சக்கணக்கான மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. அவருக்கு யாரும் யோகா பயிற்றுவிக்காத போதும், அவர் ஒரு யோகிதான். உங்கள் மனதில் தோன்றக்கூடிய எந்த எண்ணத்தையும் உங்களால் ஆக்கப்பூர்வமான சக்தியாய் ஆக்கிவிட இயலும். சொல்லப்போனால், எதிர்மறை என்பதாக எதுவுமே இல்லை. எதிர்மறையானதும் அடிப்படையில் நேர்மறையானதுதான்.

ஒரு பல்பு எரிவதற்கு நெகடிவ், பாசிடிவ் என்று இரு இணைப்புகளும் தேவை. எனவே, எதிர்மறை சக்தி என்பது தவிர்க்கப்பட வேண்டியது அல்ல. சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டியது. துயரம் என்கிற உணர்வு ஏற்படுமேயானால், அதைப் பயன்படுத்தி, அதன் மூலமாகவே இதயத்தை அன்புமயமாக்கிக்கொள்ள முடியும். மாறாக, துயரத்தின் விளைவாக எரிச்சலும் கோபமும் ஏற்படுகிறதென்றால், அது முட்டாள்தனம். வாழ்வில் மகிழ்ச்சியாய் இருப்பது ஒன்று மட்டுமே முக்கியம் இல்லை. எந்த உணர்ச்சியையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளத் தெரிகிற பக்குவம்தான் முக்கியம்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1