மனச்சோர்வைத் தடுக்க ஏதாவது வழி உள்ளதா? இன்றைய சமுதாயத்தில் மனச்சோர்வு பரவலாகக் காணப்படும் நோயாக மாறியுள்ளதன் காரணத்தை விளக்கி, இந்நிலையை எப்படி மாற்றுவது என்று சத்குரு விளக்குகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற நோய்கள் இன்று அதிகரித்து வருகின்றன. முந்தைய தலைமுறைகளோடு ஒப்பிடுகையில், இந்த நோய் இவ்வளவு அதிகரித்திருப்பதற்கு சமுதாயத்தில் நடந்திருக்கும் மாற்றம் என்ன?

சத்குரு:

மனச்சோர்வு சார்ந்த பிரச்சனைகள் இன்று பரவலாகக் காணப்படுவதற்கான அடிப்படைக் காரணம், இந்த தலைமுறையில் நாம் மிக அதிகமாக சாப்பிடுகிறோம், ஆனால் போதுமான உடலுழைப்பு இல்லாமல் இருக்கிறோம். உடலமைப்பில் இரசாயன அளவில் சமநிலை காக்க உடலுழைப்பு அத்தியாவசியமான அங்கம் வகிக்கிறது. கடந்த சில தலைமுறைகளில் நம் உடலுழைப்பு மிகவும் குறைந்துள்ளது. அதனால் உடலளவில் இரசாயன சமநிலையைப் பேணிக்காப்பது கடினமாகிறது. மனச்சோர்வு என்பது இதனுடைய ஒரு வெளிப்பாடு. சிலர் மூலையில் உட்கார்ந்து அழுவார்கள். இருமனக் குழப்பம் கொண்டவர்களோ வன்முறையில் இறங்குவார்கள். இதைக் கையாள பொதுவான ஒரு அணுகுமுறை, இரசாயனங்கள், மாத்திரைகள் அல்லது ஊசிகள் கொண்டு அவர்களை மந்தமாக்கிட மருந்துகள் தருவது.

சமநிலை கொண்டுவர எளிமையான, மிகச்சிறந்த வழிகளில் ஒன்று, இயற்கை சூழலில் நிறைய உடலுழைப்பு செய்வது.

சமநிலை கொண்டுவர எளிமையான, மிகச்சிறந்த வழிகளில் ஒன்று, இயற்கை சூழலில் நிறைய உடலுழைப்பு செய்வது. இதை சிறு வயதிலிருந்தே துவங்குவது சிறந்தது. இன்னொரு அம்சம், இயற்கையிலுள்ள பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, சூரிய வெளிச்சம் அல்லது நெருப்பு மற்றும் ஆகாயத்துடன் விழிப்புணர்வாக தொடர்பில் இருப்பது. பழங்காலங்களில் மனிதர்கள் விழிப்புணர்வாக பஞ்சபூதங்களுடன் தொடர்பில் இருக்கத் தேவையாக இருந்தது. ஒருவேளை நீங்கள் நிலத்தில் விவசாயம் செய்யவோ, காட்டில் நடந்து செல்லவோ நேர்ந்தால், இயற்கையின் பல்வேறு அம்சங்களில் என்ன நிகழ்கின்றன, அந்த நேரத்தில் அவை உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவற்றையும் எப்படி பாதிக்கின்றன என்று அறிந்திருப்பீர்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் எப்படிப்பட்ட உணவு உண்கிறீர்கள் - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும். இன்றைய தலைமுறையினரின் வேதனைக்குக் காரணமாக இருக்கும் இன்னொரு விஷயம், உணர்ச்சியளவில் பாதுகாப்பின்மை. மனிதர்கள் தங்கள் உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த எவருமில்லை, ஏனென்றால் எவரும் நீண்டகாலம் உடனிருப்பதில்லை.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், மனச்சோர்வு அதிகரித்து வருவதன் முக்கிய காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைகளே. அதிகம் சாப்பிடுவது, போதுமான உடலுழைப்பு இல்லாமல் இருப்பது, இயற்கைக்குத் தங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது, பஞ்சபூதங்களுடன் தொடர்பின்றி இருப்பது, உணர்ச்சியளவில் பாதுகாப்பின்மை - இவைதான் இன்றைய உலகில் மனச்சோர்வு பெருவாரியாகப் பரவியிருப்பதன் முக்கிய காரணிகள். இந்த அம்சங்களை நாம் கவனித்துவிட்டால், மனச்சோர்வு மற்றும் பிற மனம் சார்ந்த பிரச்சனைகளை நாம் கணிசமான அளவு குறைத்திடமுடியும்.