Question: நான் மகாத்மா காந்தி போல புகழ் பெற விரும்புகிறேன்... அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்மையில் இது போன்ற ஆசையே ஒரு குறுகிய மனதிலிருந்துதான் தோன்றுகிறது. நீங்கள் உயர்வு பெறவேண்டும் என எப்போதும் ஆசைப்படவேண்டாம். எப்பொழுதுமே ஒரு குறுகிய மனதுதான் உயர்வுக்காக ஆசைப்படுகிறது, ஒரு சாதாரண மனதுதான் அசாதாரணமாக இருக்க ஆசைப்படுகிறது. நான் யார்? என் இலக்கணம் என்ன? என்ற கோணத்தில் உங்கள் வாழ்க்கையின் தன்மையை அமைத்துக் கொள்ள விரும்பாதீர்கள். இந்த வாழ்க்கையிலிருந்து 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற உங்கள் எதிர்ப்பார்பை நீக்கிக் கொண்டாலே நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.

காந்தி புகழுக்காக செயல்பட்டாரா?

'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற உங்கள் எதிர்ப்பார்பை நீக்கிக் கொண்டாலே நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.

உங்கள் திறமையைப் பொறுத்துத்தான் உங்கள் மகத்துவத்தை இந்த சமூகம் அடையாளம் காணும். நீங்கள் உங்கள் தெருவில் ஒரு பெரிய மனிதராய் ஆகலாம், உங்கள் வீட்டில் ஒரு பெரிய மனிதராய் ஆகலாம், உங்கள் மாநிலத்திலோ, நாட்டிலோ அல்லது இந்த உலகத்தில் கூட ஒரு உயர்ந்த மனிதராக ஆகலாம். அது அந்தந்த நேரத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்துதான் அமையும். இன்றைக்கு மஹாத்மாவே மீண்டும் வந்தால் கூட அவர் முன்பு அடைந்த சிறப்பை இன்று அடைய முடியாது. அந்த காலக்கட்டத்தில் அவருடைய பணிக்கான சூழ்நிலை இருந்தது. மிகவும் எழுச்சியுடன் அனைத்தும் நடந்தன. தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அவர் தேர்தலில் கூட வெற்றி பெறாமல் போகலாம், இல்லையா? நான் புகழ் பெறவேண்டும் என நினைத்து காந்தி அப்போது செயல்படவில்லை. எனக்கு ஏதாவது கிடைக்குமா? என்ற எண்ணத்தையும் தாண்டி அவர் பணி புரிந்ததால்தான் அவர் மகாத்மாவாக கருதப்பட்டார்.

"எனக்கு என்ன கிடைக்கும்" என்ற கணக்கு

எனவே 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற கணக்கை உங்கள் தலையிலிருந்து தள்ளி வைத்து, எந்த ஒரு செயலிலும் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அந்த அளவுக்கு செயல்படுங்கள். ஏதோ ஒரு வழியில் நீங்கள் உயர்ந்தவராகி விடுவீர்கள், அற்புதமான மனிதராகி விடுவீர்கள். உங்களுடைய சிறப்பு உங்கள் குடும்பத்திற்குள் அடையாளம் கண்டுக் கொள்ளப்படலாம் அல்லது உங்கள் நண்பர்களிடமோ, உங்கள் தெருவிலோ, ஊரிலோ, நாட்டிலோ அல்லது உலகத்திலோ கூட நீங்கள் சிறப்பானவராக அடையாளம் காணப்படலாம். இவையெல்லாம் அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தும் உங்கள் திறமையைப் பொறுத்துமே அமையும். எனவே தகுதியை, திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை மட்டுமே பாருங்கள்.

'எனக்கு என்ன கிடைக்கும்' என்பதை எடுத்து விட்டாலே, 'என்னைச் சுற்றிலும் உள்ள உயிர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியும்?' என்பதை, முழுமையாகப் பார்ப்பீர்கள். அதற்கான திறமைகளையும் வளர்த்துக் கொள்வீர்கள். ஒவ்வொருவருமே நிறைய செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. இப்படியிருக்கும்போது எனக்கு பொழுதுபோகவில்லை என்று கூறிக்கொண்டு உங்களில் சிலர் எப்படி நேரத்தை கொலை செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. எனக்கு ஏதாவது கிடைக்குமா என்று ஒவ்வொன்றிலும் பார்ப்பதால்தான், ஒரு குறிப்பிட்ட விதமான வேலையை மட்டுமே, ஒரு சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறீர்கள். தான் தனக்கு என்று நினைப்பவர் மட்டுமே என்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்வார்கள். உங்களைச் சுற்றியுள்ள தேவைகளை நீங்கள் சிறிது அக்கறையுடன் கவனித்துப் பார்த்தால் உங்களால் எப்போதும் அப்படிச் சொல்ல முடியாது.

மஹாத்மா - மகா ஆத்மா

எனவே புகழுக்கு ஆசைப்பட்டு மட்டுமே எதையும் செய்ய நினைக்காதீர்கள். அப்படி ஆசைப்படுவது உங்கள் குறுகிய மனதையே காட்டுகிறது. எனவே இந்த சிறு கணக்கை தூரப்போட்டு, உங்கள் முழு திறமைக்கேற்ப செயல்படுங்கள். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். மக்கள் உங்களை மஹாத்மா என்று அழைக்கலாம். அழைக்காமலும் போகலாம். ஆனாலும் பரவாயில்லை. நீங்கள் ஒரு மஹாத்மாவைப் போலத்தான் வாழ்வீர்கள். மஹாத்மா என்றால் மகா ஆத்மா, உயர்ந்த உயிர். அப்படி நீங்கள் வாழும்போது எங்கிருந்தாலும் நீங்கள் நிச்சயம் பிரகாசிப்பீர்கள். எந்த அளவுக்கு பிரகாசிப்பீர்கள் என்பது அந்த சூழ்நிலைக்கும் உங்கள் திறமைக்கேற்றவாறும் அமையும்.