Question: மகாத்மா காந்தி போன்ற பல தலைசிறந்த மனிதர்கள் குறித்த புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். நானும் அவர்களைப் போல சிறப்பாக வாழ விரும்புகிறேன். என் பெயரும் சரித்திரத்தில் இடம் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மற்றவர்களை விட சிறந்தவராக இருக்கும் விருப்பம் அற்ப மனதில் இருந்து உருவாகிறது. எப்பொழுதுமே ஒரு சாதாரண மனம்தான் அசாதாரணமாக இருக்க விரும்புகிறது. நீங்கள் சிறப்பாக இருப்பதற்கும், அசாதாரணமாக இருப்பதற்கும் விரும்பவேண்டிய அவசியம் இல்லை. தன்னலம் நோக்கியே உங்கள் வாழ்க்கையை அமைக்காமல், "நான், எனக்கு" என்ற உங்கள் கணக்கை விட்டு விட்டால் நீங்கள் எப்பொழுதும் ஒரு சிறந்த மனிதர்தான். எந்த அளவிற்கு நீங்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள் என்பது உங்கள் திறமை பொறுத்த விஷயம். உங்கள் வீட்டில், உங்கள் வீதியில் நீங்கள் உயர்ந்த மனிதராக இருக்கலாம் அல்லது உங்கள் தேசத்தில், ஏன் உலகத்தின் உயர்ந்த மனிதராக கூட இருக்கலாம். இது பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து நடக்கும் விஷயம். நீங்கள் எந்த விதமான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.

'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற ஒரு கணக்கை விட்டு விட்டு, உங்கள் முழு திறமையோடு செயல்படுங்கள். ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருப்பீர்கள்.

மகாத்மா காந்தி இன்று வந்தால், அந்த கால கட்டத்தில் இருந்தது போல இன்று பிரபல மனிதராக இருக்க மாட்டார். ஏனென்றால் அந்த சமயத்தில் நாட்டில் ஒரு விதமான சூழ்நிலை நிகழ்ந்து கொண்டிருந்தது. சரியான சமயத்தில் சரியான உத்வேகம் மற்றும் அதைப் பொறுத்து விஷயங்கள் நடந்தன. தான் சிறப்பான அடையாளம் பெற வேண்டும் என்று விரும்பியதால் அவர் உயர்வடையவில்லை. "நான், எனது" என்பதைக் கடந்து அவர் வாழ்க்கையைப் பார்த்ததால்தான் அவர் உயர்வடைந்தார்.

எனக்கு என்ன கிடைக்கும்?

'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற ஒரு கணக்கை விட்டு விட்டு, உங்கள் முழு திறமையோடு செயல்படுங்கள். ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருப்பீர்கள். ஒரு அற்புதமான மனிதராக இருப்பீர்கள். எப்பொழுது 'எனக்கு என்ன கிடைக்கும்' என்ற கணக்கை விட்டு விடுகிறீர்களோ, அப்போது இயல்பாகவே 'என்னை சுற்றி இருக்கும் இத்தனை உயிர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்' என்று பார்க்கத் தொடங்குவீர்கள். இப்படி பார்க்க ஆரம்பித்தது முதல் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். ஏனென்றால் செய்வதற்கு நிறைய செயல்கள் காத்திருக்கின்றன. இந்த தேசத்தில் இன்னும் செய்வதற்கு ஏராளம் இருக்கும்போது, மக்கள் வேலையின்மை பற்றி பேசுவது எனக்குப் புரிவதில்லை. எனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் உங்களின் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது. குறிப்பிட்ட விதமான வேலைகள் செய்வதற்கும் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே விருப்பப்படுகிறீர்கள். எனவே வேலை இல்லை என்று நினைக்கிறீர்கள். இல்லையென்றால் இந்த தேசத்தில் செய்வதற்கு ஏராளம் இருக்கிறது. எப்படி நீங்கள் வேலை இல்லாமல் இருக்க முடியும்?

இந்த ஒரு கணக்கை எடுத்து விட்டு உங்கள் முழுத் திறமையோடு செயல்படுங்கள். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். மக்கள் உங்களை மகாத்மா என்று அழைக்கலாம் அல்லது அழைக்காமல் போகலாம். பரவாயில்லை. ஒரு மகாத்மாவாக வாழ்வீர்கள். நீங்கள் ஒரு மகாத்மாதான். மகாத்மா என்றால் நீங்கள் ஒரு சிறந்த உயிர் என்று பொருள். இந்த ஒரு கணக்கை உங்கள் தலையிலிருந்து எடுத்த நொடியில் இருந்து நீங்கள் ஒரு உயர்ந்த உயிர். பிறகு எங்கிருந்தாலும் நீங்கள் ஒளிர்வீர்கள்.