மஹாபாரதம் பிற பகுதி

கேள்வி : சத்குரு, பண்டைக்காலத்தில் இருந்தே நம் கலாச்சாரத்தில் வேள்விகள் மேற்கொள்வதன் முக்கியத்துவம் என்ன? அவை இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துமா? ஒருவர் வேள்விகளில் இருந்து எப்படி பலனடைவது?

சத்குரு: ஒரு வேள்வி என்றால், ஒருவருக்குள் உள்ள உள்நிலை சாத்தியத்தை பொதுவெளியில் கையாள்வது. உள்நிலை சம்பந்தப்பட்ட ஒரு சாத்தியத்தை நீங்கள் பொதுவெளியில் கையாளும்போது, அதன் அளப்பரிய தன்மையும், அந்த சாத்தியத்தின் ஆழமும் குறையும், ஆனால் அந்த சாத்தியத்தின் வீச்சு, அது எத்தனை மக்களை தொடுகிறது என்பது மேம்படுகிறது. அமர்ந்து தியானம் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது வேள்வி செய்வதாக இருந்தாலும் சரி - எதுவாக இருந்தாலும், ஆழத்திற்கும் வீச்சிற்கும் இடையே சமநிலை கொண்டு வருவதுதான் சவால் - அதிக எண்ணிக்கையிலான மக்களை தொடுவதற்காக எவ்வளவு ஆழத்தை தியாகம் செய்வீர்கள் அல்லது ஆழமாக தொடுவதற்காக நீங்கள் எந்தளவுக்கு வீச்சை கட்டுப்படுத்துவீர்கள்.

வேள்வி என்றால் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு முறையான செயல். நீங்கள் இங்கே அமர்ந்து தியானம் செய்த பிறகு, உங்கள் தியானம் அனைவருக்கும் பலனளிக்க வேண்டும் என்பதற்காக நடனமாடுகிறீர்கள் - இது ஒரு வேள்வி. ஒரு வேள்வியை எப்படி நிகழ்த்துவது? இதற்கு பல வழிகள் இருக்கிறது. நீங்கள் சாதாரணமாக காண்பதெல்லாம் இந்த செழிப்பான வேள்வி கலாச்சாரத்தில் எஞ்சியவையே, பெரும்பாலும் வியாபார நோக்கம் கொண்ட மக்கள் பாதுகாத்தவை. ஆதியோகி லிங்கத்தை நாம் பிரதிஷ்டை செய்தபோது ஒரு அபாயகரமான படியை எடுத்தோம். உதவிக்கு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, தனிப்பட்ட அளவில் இதை நிகழ்த்தியிருந்தால், மிக எளிமையாகவும், சாதாரணமாகவும் நடந்திருக்கும். கோவிலில் ஒரு பகுதி பிரதிஷ்டையை நிகழ்த்திய பிறகு ஆதியோகி ஆலயத்திற்கு லிங்கத்தை கொண்டுவந்து, அனைவரும் பார்க்கும் வகையில் பிரதிஷ்டையை முழுமையாக நிகழ்த்துவதாகதான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் வாழ்க்கை சூழ்நிலைகள் நம்மை ஆட்கொண்டது. கோவிலில் நாம் எதுவுமே செய்யவில்லை, அனைத்தையுமே இங்கே ஆதியோகி ஆலயத்தில்தான் நிகழ்த்தினோம். இது பிரதிஷ்டை செயல்முறையை நிகழ்த்தும் ஒருவரின் உயிருக்கே அபாயம் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் நமக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏற்கனவே தேதி முடிவு செய்யப்பட்டு, பதினோராயிரம் மக்கள் பிரதிஷ்டையில் பங்கேற்க வந்து காத்திருந்தார்கள், ஏனென்றால் தங்கள் வாழ்நாளில் தாங்களாகவே செய்துகொள்ள முடியாத ஒரு ஆழமான அம்சத்திலிருந்து பலனைடைய அவர்கள் விரும்பினார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தொடும்படி மிக ஆழமான ஒன்றை நாம் அங்கு நிகழ்த்தினோம். இது எனது உயிரையே பலி வாங்கியிருக்கக்கூடும், ஆனால் அந்த பதினோராயிரம் மக்களும் மிக அற்புதமானவர்களாக இருந்தார்கள். ஒரே ஒரு மனிதர் மட்டுமே இருப்பதைப் போல அனைவரும் ஒருமித்து அமர்ந்திருந்தார்கள். இது அந்த செயல்முறையை மிக எளிதாக்கியது. ஆனாலும் இதுபோன்ற செயல்முறைகளை தனிப்பட்ட அளவில், நெருக்கமானவர்களின் துணையோடு நிகழ்த்துவதே பாதுகாப்பானது. ஏனெனில் பொதுவெளியில் நிகழும்போது ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

வேள்விகளில் பல வகைகள் இருக்கிறது. வேள்வி என்பது ஒரு மந்திர வடிவில் இருக்கலாம் அல்லது தூய்மையான சக்தி வடிவிலும் இருக்கலாம். இன்றும் சக்திவாய்ந்த செயல்முறைகளை செய்யும் மக்கள் இருக்கிறார்கள், ஆனால் அவை பெரும்பாலும் அதன் சாரத்தை இழந்து வியாபாரமயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் வேள்விகள் நிகழ்வதை குறைப்பதோடு, இது அறிவுசார்ந்த செயல்முறையாகவும் மாற்றமடைய வேண்டும்.

நீங்கள் பங்கேற்கும் ஈஷா யோகா அல்லது இன்னர் இன்ஜினியரிங் வகுப்பும் ஒருவகையான வேள்வியே. வேள்விக்கே உரித்த உறுதியுடன் வகுப்பு நிகழ்த்தப்படுகிறது. நீங்கள் நமது நிகழ்ச்சிகளுக்கு வந்தீர்களானால், ஒரு வேள்விக்கு சற்றும் குறையாத ஒன்றையே நாம் நிகழ்த்துகிறோம். அங்கே நெருப்பும் உச்சாடனமும் மட்டும் தான் இல்லை, ஆனால் ஒரு மனிதரின் மனக்கூர்மையை கொண்டு நாம் வேள்வியை நிகழ்த்துகிறோம்.

வேள்வியை நிகழ்த்துவதற்கு பல வழிகள் இருக்கிறது. உங்கள் உடலைக் கொண்டு வேள்வி நிகழ்த்த முடியும். உங்களைச் சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டு, பஞ்சபூதங்களைக் கொண்டு, உங்கள் மனதைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் உணர்ச்சிகளைக் கொண்டும் உங்களால் வேள்வி நிகழ்த்த முடியும். லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் நிகழும் ஒருவிதமான வேள்வி மிக உணர்ச்சிகரமாக இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் உயிர்சக்தியைப் பயன்படுத்தியும் உங்களால் வேள்வி நிகழ்த்த முடியும். உங்களால் ஆத்ம வேள்வியை நிகழ்த்த முடியும். வேள்வியை நிகழ்த்துவதற்கு பல வழிகள் இருக்கிறது. இன்றைய உலகில், மக்களுக்கு கிடைக்கும் கல்வி முறையின் காரணமாக, அவர்களைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் அணுகுமுறையின் காரணமாக, அவர்களுக்கு மிகச்சிறந்த பலனளிக்கும் வேள்வி என்றால், அவர்களின் புத்திகூர்மையைப் பயன்படுத்தி நிகழ்த்துவதே சிறந்ததாக, குறைந்தபட்ச முதல்படியாக இருக்கும். மக்கள் திறந்த நிலையை எட்டினால், இன்னமும் அவர்களுக்குள் இதயம் துடித்துக் கொண்டிருப்பதை நாம் கண்டால், அப்போது நாம் உணர்ச்சி வேள்வியை நிகழ்த்தலாம். தங்கள் உயிர்சக்தியை பயன்படுத்துமளவு அவர்களுக்கு திறன் இருந்தால், நாம் சக்தி வேள்வியை நிகழ்த்தலாம். பிறகு, ஏதோ ஒரு நாளில் ஆத்மவேள்வியையும் அவர்களுக்கு நாம் கற்றுத்தரக்கூடும்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.