தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 3

வார்த்தைகளில் விவரிக்க முடியாத சக்திமிக்க அதிர்வுகளால் நம்மை ஆட்கொள்ளும் தியானலிங்கம் ஏன் மனித வடிவத்திலோ அல்லது வேறு வடிவத்திலோ அமைக்கப்படாமல் லிங்க வடிவத்தில் அமைக்கப்படுள்ளது? இதற்கான விடையை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தனது எழுத்துக்களில் இந்தவாரப் பகுதியில் விளக்குகிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானத் தூண் அல்லது தியானக் கட்டிடம் என்று பலவிதமான வடிவங்களில் அமைத்திருக்க வாய்ப்பிருக்கும்போது, சத்குரு எதற்காக தியானலிங்கம் என்கிற இந்த சக்திப் பெட்டகத்தை, லிங்க வடிவில் அமைக்க வேண்டும்?

லிங்கம் என்றாலே சமஸ்கிருதத்தில் வடிவம் என்றுதான் பொருள். லிங்கம் என்பது உருவம், அருவம் இரண்டும் சேர்ந்த அருவுருவம்.

லிங்கம் என்றாலே சமஸ்கிருதத்தில் வடிவம் என்றுதான் பொருள். லிங்கம் என்பது உருவம், அருவம் இரண்டும் சேர்ந்த அருவுருவம்.

நாம் சிவா என்றும் சக்தி என்றும் இறைவனை அழைக்கிறோம். இது வாழ்வின் இருமை நிலையைக் குறிப்பதாகும். புலனறிவுகொண்டு இந்தப் பூமியில் வாழும்போது... நமது உணர்ச்சிகளின் மூலமே வாழ்வை உணரும்போது... இந்த வாழ்க்கையின் எல்லா அனுபவங்களுமே, குறிப்பிட்ட இருமை நிலையிலேயே இருக்கின்றன.

மரபு வழியில் சிவா மற்றும் சக்தியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இருமை நிலையை யோக மார்க்கத்தில் ஈடா, பிங்களா என்கிறார்கள். கிழக்கத்தியக் கலாச்சாரங்களில் 'யின்-யங்' என்று குறிப்பிடப்படும் இந்த இருமை நிலையை எளிமையாகக் குறிப்பிட வேண்டுமென்றால், ஆண்தன்மை, பெண்தன்மை என்று சொல்லலாம். அல்லது காரண அறிவு மற்றும் உள்ளுணர்வு என்றும் குறிப்பிடலாம். இந்த இரண்டு தன்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா மதங்களும் வளர்ந்திருக்கின்றன.

இந்த இரண்டு தன்மைகளையும் முழுமையாகக் கொண்ட, லிங்க வடிவம் என்பது சக்தி வாய்ந்த வடிவம். இந்த வடிவத்தில்தான் சக்தியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திவைக்க இயலும். மற்ற வடிவங்களில் சில காலத்துக்குப் பிறகு, சக்தி வலுவிழந்துவிடும். விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட சில கோளங்களின் புகைப்படங்களைக் கவனித்துப்பார்த்தால், அவற்றின் அடிப்படை வடிவம் லிங்க வடிவத்தில் இருப்பதைப் பார்க்கலாம்.

அணுமின் நிலையங்களில் அணுசக்தி கொள்கலன்களைப் பாருங்கள். அவை லிங்க வடிவில் இருக்கின்றன. விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், வெடித்துச் சிதறும் பட்டாசு, கேப்ஸ்யூல் வடிவத்தில் இருக்கும் உயிர்காக்கும் மருந்துகள்... இவற்றைக் கவனித்தால் பெரும்பாலும் சக்தி, லிங்க வடிவத்துக்குள் வலுவாக இருப்பதை உணர முடியும்.

லிங்கவடிவம் இந்துக்களுக்கு மட்டுமே புனிதம் என்றில்லை. இந்துக்கள் அதிகம் இல்லாத ஆப்பிரிக்கா, கிரீஸ், கம்போடியா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆகிய நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே லிங்க வடிவம் புனிதமாகக் கருதப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

‘ராஜா’ என்ற பெயரை எடுத்துக்கொள்வோம். இந்தப் பெயருக்கு ஏதாவது மத அடையாளம் சொல்ல முடியுமா? ராஜா தம்பி என்று ஒரு இந்து வைத்துக் கொள்கிறார். ராஜா ஃபாதர் என்று ஒரு கிறிஸ்தவர் வைத்துக்கொள்கிறார். ராஜா முகம்மது என்று ஒரு இஸ்லாமியரும் வைத்துக் கொள்கிறாரே.

தண்ணீர் உறைந்தால், பனிக்கட்டி. எல்லோருக்கும் தெரியும். பனிக்கட்டியை எந்த உருவத்திலும் அமைத்தல் சாத்தியம்தானே? பனிக்கட்டியில் பிள்ளையார் உருவம் அமைத்து திருமண விழாக்களில் வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதே பனிக்கட்டியை மேரி மாதாவாகவும் உருவாக்க இயலும்தானே. பிள்ளையார் பனிக்கட்டியை வைத்து, தண்ணீர் என்பதே இந்து மதத்தைச் சேர்ந்தது என்று முடிவுக்கு வர முடியுமா?

இதே போலத்தான் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும். எந்த நாட்டவர், எந்த இனத்தவர், எந்த மொழி பேசுபவர் அதைக் கண்டுபிடித்திருந்தாலும்... பிறகு அந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதற்கும் சொந்தமாகிறது. மின்சாரத்துக்கு மதம் உண்டா என்ன? அறிவியல் உண்மைகள் எப்படி அனைவருக்கும் பொதுவானதோ... அப்படி ஆன்மீக உண்மையாம் லிங்க வடிவமும், எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.

இன்னும் நமது கிராமங்களில் லிங்க வடிவங்களின் மேல் பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. தங்க லிங்கம், செல்வம் தரும். அன்ன லிங்கம், உணவு தரும். மண்ணாலான லிங்கம், நிலம் தரும். பசுஞ்சாண லிங்கம், ஆரோக்கியம் தரும். வெண்ணெய் லிங்கம், மகிழ்ச்சி தரும். ருத்ராக்ஷ லிங்கம், ஞானம் தரும். இவை இன்னும் உள்ள நம்பிக்கைகள்.

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள தியானலிங்கம் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் ஆன்மீகப் பொக்கிஷம்.

தியானலிங்கம் என்பது பல்லாயிரம் மக்களுக்கு ஒரே சமயத்தில் நன்மை தரும் என்பதால்... ஆன்மீகச் சேவையை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பல ஞானிகளுக்கும் தியானலிங்கம் அமைப்பது ஒரு முக்கிய நோக்கமாக, ஓர் உன்னதக் கனவாக இருந்திருக்கிறது. இந்திய வரலாற்றில்... ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களின்படி பார்த்தால், பீகாரில் மூன்று தியானலிங்கங்கள் யாரோ சில ஞானிகளால் அமைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவை யுத்தங்களின் போது அழிக்கப்பட்டிருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள போஜ்பூரில் ஒரு ஞானி உருவாக்க முயன்ற கிட்டத்தட்ட முழுமையை நோக்கிய ஒரு தியானலிங்கம் இன்னும் உள்ளது. அதை மக்களுக்கு அர்ப்பணிக்கும் முன்பாக கடைசி நேரத்தில் விரிசல் ஏற்பட்டு தியானலிங்கம் உருவாகாமல் போயிருக்கிறது.

இதையெல்லாம் கணக்கிலெடுத்துப் பார்த்தால்... ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள தியானலிங்கம் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் ஆன்மீகப் பொக்கிஷம். சத்குருவால் சாத்தியமாகியுள்ள ஓர் ஆன்மீகக் கனவு. அனைவருக்கும் அருள் தரும் அதிசயம்.

தியானலிங்கத்துக்குள் அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று கேட்டால்... அதற்கு சக்தியூட்டப்பட்டிருக்கிறது. தியானலிங்கத்தில் ஏழு சக்கரங்கள் தூண்டப்பட்ட நிலையில் உள்ளன. அதென்ன ஏழு சக்கரங்கள்? நமது மனித உடலின் இயக்கமும் செயல்பாடும், ஏழு சக்கரங்களால் தான் நிகழ்கிறது என்பது யோக சூத்திரம்.

அந்த ஏழு சக்கரங்களாவன:
1. மூலாதாரம்
2. சுவாதிஷ்டானம்
3. மணிப்பூரகம்
4. அநாகதம்
5. விசுக்தி
6. ஆக்ஞை
7. சஹஸ்ரஹாரம்

ஒவ்வொரு சக்கரமும் எந்தெந்தச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன என்று விரிவாகப் பார்க்கலாம்.

மூலாதாரம் என்கிற சக்கரம் அமைந்துள்ள இடம், நம் முதுகுத் தண்டின் அடிப்புறம். இது உணவு, உறக்கம், அனுபவச் சேகரிப்பு, தகவல் சேகரிப்பு ஆகியவற்றைக் கையாள்கிறது.

சுவாதிஷ்டானம், பிறப்புறுப்புக்கு மேல் அமைந்துள்ளது. உலகியல் சார்ந்த வாழ்வையும் புலன் நுகர்ச்சியையும் கையாள்கிறது இந்தச் சக்கரம்.

மணிப்பூரகம், நாபிக்கு அடியில் அமைந்துள்ளது. இது உடல் நலம், உடல் உறுதி, உழைப்பு, ஈடுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

அநாகதம் இருக்குமிடம், இதயத்துக்கு மத்தியில். படைப்பாற்றலும், அறிவும் இதன் செயல் தூண்டல்கள்.

விசுக்தி. தொண்டைக்குழியில் அமைந்துள்ள இந்தச் சக்கரம்தான் தீய எண்ணங்களைத் தடுக்கிறது.

'ஆக்ஞா' இந்தச் சக்கரம் புருவ மத்தியில் உள்ளது. ஞானம், பேரறிவு இவற்றைக் கையாள்கிறது இது.

சஹஸ்ரஹாரம் என்கிற சக்கரம் தன்னிலை மறந்த பரவசத்தை அளிக்கவல்லது. சித்தர்களின் நிலை தரும் சக்கரம் இது.

சரி... இந்த மனித உடலமைப்பில் பொதிந்துள்ள சக்தி நிலைச் சக்கரங்களை சத்குரு தியான லிங்கத்துக்குள் பொருத்தினாரா? அதெப்படி?


அடுத்தவாரம்...

தியானலிங்க வாளகத்தின் முன் அமைந்துள்ள சர்வமத ஸ்தம்பம், பதஞ்சலி யோகமுனியின் சிலை என வெளிப்புற வளாகத்தை தனது அழகிய எழுத்துக்களில் விவரிக்கிறார் திரு.பிராபகர்.

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை