சத்குருவுடன் வாராந்திர தரிசன நேரத்தில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு 12 வயது வீடியோ மூலமாக கேட்ட கேள்வி இது : என் பெயர் வசீர் கேம்ராஜ். என்னைப் பார்க்க 16 வயது போல் தெரியலாம். ஆனால் எனக்கு 12 வயதுதான் ஆகிறது. சில குழந்தைகள் அவர்களுடைய நேரத்தை ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற போலி ஹீரோக்களின் திரைப்படங்களை பார்ப்பதில் செலவிடுகிறார்கள். நான் எனது நேரத்தை, ஒரு விவேகமான, அற்புதமான மனிதர்... அதாவது, சத்குரு நீங்கள் பேசுவதை கேட்க தேர்வு செய்கிறேன். இங்கே கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எல்லாக் குழந்தைகளும் என் அளவிற்கு புத்திசாலித்தனமாக தேர்வு செய்வதில்லை. என்னுடைய ஜோக்கிற்கு நானே சிரிக்க வேண்டியதாக இருக்கிறது, யாருமே சிரிப்பது இல்லை. சத்குரு, ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். "அது எப்படி உன்னை பாதிக்கும்? போ.. போய் பார்" என்கிறார்கள். "தொலைக்காட்சியில்தானே யாரோ ஒருவர் இறக்கிறார், நீ இறக்கவில்லையே..." என்கிறார்கள். இந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள், ரெஸ்ட்லிங் மேட்ச், வன்முறையான விளையாட்டுக்கள், கம்ப்யூட்டரில் விளையாடுவது... இது தினசரி வாழ்க்கையில் நம்மை எவ்வாறு பாதிக்கிறது? நன்றி!

சத்குரு: இவர் பெயர் என்ன? வஷீர் கேம்ராஜ். வஷீர்... தினசரி அளவில் இந்தக் குழந்தைகள் எவ்வளவு வன்முறையை பயிற்சி செய்கிறார்கள் என்று பார்த்தால், எனக்கு எண்களும், சதவிகிதமும் சரியாக தெரியவில்லையென்றாலும், நம்மை சுற்றிலும் பார்ப்பதை வைத்து, குழந்தைகள் விளையாடுவதை சும்மா பார்ப்பதை மட்டும் வைத்து, என்னை சுற்றி இது மிக நெருக்கமாக நடக்கவில்லை என்றாலும், விமான நிலையங்களில், மற்ற இடங்களில் பார்ப்பதை வைத்து, விமானத்தில் கூட குழந்தைகள் இப்படி விளையாடுகிறார்கள், என்னுடைய புரிதலில் இது தவறாகவும் இருக்கலாம், நீங்கள்தான் சொல்ல வேண்டும், கிட்டத்தட்ட 70-80 சதவிகித நேரம் அவர்களது விளையாட்டு யாரோ ஒருவரை சுட்டுத் தள்ளுவதாகவே இருப்பதைப் பார்க்கிறேன். இது சரியா? குழந்தைகள் எதோ ஒரு விலங்குடன் விளையாடுவதை நாம் பார்ப்பதில்லை, அல்லது அலைபேசியின் திரையில் ஏதோ ஒன்றை செய்வதை நான் பார்ப்தில்லை. எப்போதுமே ஏதோ ஒன்றை சுட்டுத் தள்ளுகிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்களைப் போல யாரோ ஒருவர் தோற்றமளிக்கவில்லை என்றால், அவர்கள் உங்களுக்கு கெட்டவர்கள். இதற்கு பெயர் தான் இனப்பாகுபாடு. தங்களைப் போல தோற்றமளிக்காத ஒருவரைப் பார்த்தால், ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்களை கொல்ல முயல்கிறார்கள்.

இதுதான் இனப்பாகுபாடு

ஒரு இளம் குழந்தையாக நீங்கள் ஏதோ ஒரு எண்ணிக்கையிலான மக்களை கொன்று தள்ளுகிறீர்கள் என்றால், உதாரணமாக, 100 பேரை கொல்வதாக வைத்துக் கொள்வோம். உங்களைப் பொறுத்தவரை அவர்கள் எல்லோருமே கெட்ட மனிதர்கள். உங்களைப் போல யாரோ ஒருவர் தோற்றமளிக்கவில்லை என்றால், அவர்கள் உங்களுக்கு கெட்டவர்கள். இதற்கு பெயர் தான் இனப்பாகுபாடு. தங்களைப் போல தோற்றமளிக்காத ஒருவரைப் பார்த்தால், ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்களை கொல்ல முயல்கிறார்கள். அதனால், நீங்கள் ஒரு கறுப்பின மனிதரைக் கொன்றாலும், ஒரு வேற்றுக்கிரகவாசியைக் கொன்றாலும், அதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில், ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் வந்தபோது, அதற்கு முன் அவர்களைப் பாக்காதவர்களுக்கு அவர்கள் வேற்றுகிரகவாசிகள் போலத்தான் தெரிந்தார்கள். இப்போது இதை மிக சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், வேற்றுகிரகவாசிகள் யாராவது இங்கே வந்து இறங்கினால், நாம் அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும், எரிக்க வேண்டும், கொடூரமான விஷயங்களை அவர்களுக்கு செய்ய வேண்டும் என‌ தோன்றுகிறதா? இந்த உணர்வுக்கு பெயர்தான் இனவெறி. அவர்கள் வேறு விதமாக தெரிகிறார்கள், இதுதான் நமது ஒரே பிரச்சினை. உங்களுக்கு 12 வயதுதான் ஆகிறது, ஆனால் 16 வயது போல தெரிகிறீர்கள். இது உங்கள் வார்த்தைகள், என்னுடையது இல்லை, நான் அப்படி சொல்லவில்லை.

வன்முறை புதிதல்ல

உங்களுக்கு 18 வயது ஆகும்போது, நீங்கள் உங்களது அலைபேசியின் திரையில் கடந்த 8, 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளியிருப்பீர்கள். 18 வயதாகும்போது, உண்மையான ரத்தத்தை பார்க்க வேண்டும் என நினைக்க மாட்டீர்களா? திரைப்படங்களில் நீங்கள் நிறையவே பார்த்து விட்டீர்கள். உங்களுக்கு இது தெரியும், இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தினால் நீங்கள் பார்க்கும் திரைப்படத்தில், ஒரு தோட்டா வந்து இப்படி துளைத்து, மூளையே வெடித்து சிதறும். அது போதாது என்பதைப்போல, அது உங்களுக்குப் புரியவில்லை என்று அடுத்த முறை 'ஸ்லோமோஷனில்' மெதுவாக காட்டுவார்கள். அந்த தோட்டா மெதுவாக வந்து தலையில் பாய்ந்து மூளையே சிதறும். நீங்கள் இதையெல்லாம் பார்ப்பதற்கு பணம் கொடுக்கும்போது, உங்கள் தலைக்குள் என்ன நடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறது. உங்களுக்கு 18 வயது ஆகும் வரையில் நீங்கள் பல மூளைகளை சிதறடித்திருந்தால், அது நிஜமாகவேண்டும் என விரும்பமாட்டீர்களா? நிஜமான மூளைகள் வெடித்து சிதறுவதை பார்க்க விரும்பமாட்டீர்களா?

எல்லாப் பக்கமும் அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் வெளியே போகும்போது, முன்பின் தெரியாத அந்த மக்களை இளைஞர்கள் சும்மா சுட்டுத் தள்ளுகிறார்கள். யாரைப் பார்த்தாலும் சுட்டுத் தள்ளுகிறார்கள். நீங்கள் அப்போது போய் இவர்களுக்கு என்ன ஆனது என யோசிக்கிறீர்கள். அவர்கள் 10 ஆண்டுகளாக இதைத்தான் பயிற்சி செய்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? எதனால் ஆச்சரியப்படுகிறீர்கள்? அவர்கள் இத்தனை நாளாக பயிற்சி செய்திருக்கிறார்கள். இப்போது உண்மையாக செய்கிறார்கள். எனக்கு இது சரியாகத் தெரியவில்லை, நான் சொல்லும் இந்த சதவிகிதம் தவறாகவும் இருக்கலாம். ஏனெனில், நாம் போதுமான அளவு திரைப்படங்கள் பார்க்கவில்லை. ஆனால் 70ல் இருந்து 80 சதவீத திரைப்படங்கள், யாரோ ஒருவரை அடித்து நொறுக்காமலோ, சுட்டுத் தள்ளாமலோ இருக்காது. நான் சொல்வது சரியா? சதவிகிதம் சரியா?

இவரா ஹீரோ

நிச்சயமாக 50 சதத்துக்கு மேல் இப்டித்தான் இருக்கிறது. 70ல் இருந்து 80 சதவீதம் என்றே நினைக்கிறேன். 20, 25 சதம் திரைப்படங்கள் கூட யாரோ ஒருவரியின் முகத்தில் குத்தாமலோ, யாரோ ஒருவர் தலையை வெடித்து சிதற வைக்காமலோ, குடலை வெளியே உருவாமலோ இருப்பதில்லை. அப்படி ஒரு திரைப்படம் இருக்கமுடியாது. இந்த மாதிரியான ஒரு கலாச்சாரத்தை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் பாத்திருப்பீர்கள், ஒருகாலத்தில் இந்தியாவில் நமது ஹீரோக்கள்... திரைப்பட ஹீரோக்களை பற்றி குறிப்பிடுகிறோம். இந்த சினிமா ஹீரோக்கள் மென்மையாக காட்சியளிக்கும் மனிதர்களாக, பாட்டுப் பாடுவார்கள், மரங்களை சுற்றி ஓடுவார்கள் என்பதாகவே இருந்தார்கள். மெதுமெதுவாக இப்போது இப்படி ஆகியிருக்கிறது. ஒரு ஹீரோ என்றால், தசைகளை வளர்த்து உறுதியாக இருக்க வேண்டும், அப்போதான் யாரோ ஒருவரை அடிக்க முடியும். ஹீரோவாக இருப்பது என்றால், யாரைப் பார்த்தாலும் இப்படித்தான். நான் இந்த திரைப்படங்களை பார்த்ததில்லை, ஆனால் எல்லாப் பக்கமும் இந்தப் போஸ்டரை பார்த்திருக்கிறேன். எங்கே பார்த்தாலும் இப்படித்தான், யாரோ ஒருவரை குத்துவதற்கு தயாராக இருப்பார்கள்.

நீங்கள் காணும் உலகம்

அவர் உண்மையிலேயே அப்படி செய்கிறாரா, இல்லையா என்பது விஷயம் இல்லை. எல்லா நேரமும் இப்படிப்பட்ட காட்சி தோன்றிக் கொண்டே இருக்கும்போது நிச்சயமாக நீங்கள் வன்முறையான ஒரு கலாச்சாரத்தைதான் உருவாக்குகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு உணர்ச்சியையும் இப்படித்தான் நீங்கள் கையாள நினைக்கிறீர்கள். இது யாரோ ஒருவரை அடிப்பதைப் பற்றி மட்டுமல்ல. நீங்கள் இந்த டிவி நாடகமெல்லாம் பாத்திருந்தால், நாம் ஏதோ நியூஸ் தேடிட்டு இருக்கும்போது, சிலசமயம் 10, 20 வினாடிகளுக்கு இதை பார்க்க நேர்ந்திருக்கிறது. ஏதோ ஒரு பெண்மணி கத்தியபடி எல்லாப்பக்கமும் தட்டுகளை தூக்கி வீசிக்கொண்டு இருப்பார். அந்த ஆண் ஏதோ ஒரு கதவையோ, சுவற்றையோ குத்துவார். இதைப் பார்த்து நீங்களும் இதுதான் உங்களது உணர்ச்சிகளை கையாள்வதற்கான வழி என்பது போன்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகிறீர்கள். மனிதர்களுக்கு உணர்ச்சி இருக்கிறதுதான், ஆனால் இந்த உணர்ச்சிகளை கையாள்வதற்கு இன்னும் நாகரீகமான, விழிப்புணர்வான வழி இருக்கிறதுதானே? ஏதோ ஒன்று நம்மை குத்தும்போது, மனிதர்களுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியின் சீற்றம் ஏற்படலாம். ஆனால், இதை நடத்திக் கொள்ள இன்னும் நாகரிகமான ஒரு வழி இருக்கிறதுதானே? ஆனால் அப்படி நடப்பதில்லை, 4 எழுத்து வார்த்தைகள் சொல்வது, அல்லது பொருட்களை மக்கள் மீது வீசுவது, உணவை எடுத்து மக்கள் முகத்தில் அடிப்பது, இது பேஷனாகி விட்டது. மக்கள் உணவை தூக்கி வீசவது, பாத்திரங்களை வீசவது, கதவுகளை உடைப்பது, இந்தமாதிரி காட்சிகளை உங்களைச் சுற்றி உருவாக்கும்போது, அந்தமாதிரி சமூகத்தில்தான் நீங்கள் வாழ்வீர்கள்.

மனிதர்களுக்கு உணர்ச்சி இருக்கிறதுதான், ஆனால் இந்த உணர்ச்சிகளை கையாள்வதற்கு இன்னும் நாகரீகமான, விழிப்புணர்வான வழி இருக்கிறதுதானே?

வெறும் பொழுதுபோக்கல்ல

இன்னும் அதிர்ஷ்டவசமாக சமூகத்திலோ, அல்லது உலகில் இருக்கும் இளைஞர்கள் மத்தியிலோ, மிக வலுவாக இந்த சினிமா அல்லது மற்ற பொழுதுபோக்குகளில் காட்டப்படுவதைப் பார்த்து அதை அப்படியே செய்வது வழக்கத்திற்கு வரவில்லை. அதில் நடப்பதில் 10, 15 சதவிகிதத்தை இளைஞர்கள் பின்பற்றினாலே உலகம் மிகக் கொடூரமான இடமாக இருக்கும். இப்படி பொழுதுபோக்கு வழங்குகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், வெறும் பிழைப்பை மட்டும் சம்பாதிக்காமல், இதனால் செல்வந்தர்களாக ஆகிறவர்கள், அவர்கள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் கொஞ்சமாவது மனசாட்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் திரையில் வன்முறையை உருவாக்கினால், அது எப்படி இருக்கவேண்டுமென்றால், வன்முறை மீது ஒரு அருவருப்பை மக்களிடம் அது உருவாக்க வேண்டும். நான் இப்படி இருக்கவே கூடாது என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டும்.

திரையி(ன் மறைவி)லிருந்து

ஹிந்தி சினிமாவில் இப்டியொரு காலம் இருந்தது. சிலரை ரேப் எக்ஸ்பர்ட் என அழைப்பார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு வன்முறையான கற்பழிப்பு காட்சி இருப்பது கட்டாயமாக இருந்தது. 2, 3 நடிகர்கள் இந்த காட்சிகளில் நிபுணர்களாக கருதப்பட்டார்கள். இப்போது சமூகத்தில் கற்பழிப்பு நடக்கும்போது நீங்கள் ஆச்சரியப்படுறீர்கள். நீங்கள் செய்துகாட்டினீர்கள், லட்சக்கணக்கான இளைஞர்கள் அதை பார்த்தார்கள், ஒரு பெண்ணை இப்படித்தான் கையாள வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் ஆசைகளை இப்படித்தான் கையாள வேண்டும் என நினைத்தார்கள் அப்படித்தானே? நீங்கள் மக்களிடம் உங்கள் உணர்ச்சிகள் சீற்றமாக இருக்கும்போது இப்படித்தான் கையாள வேண்டும் என காட்டினால், யாரோ ஒருவரின் முகத்தில் குத்த வேண்டும், அல்லது யாரோ ஒருவரின் தலைய சுட்டுத்தள்ள வேண்டும் என்பது மாதிரியான முன்னுதாரணத்தை நீங்கள் காட்டினால், மெதுமெதுவாக அந்த மாதிரி சமூகம்தான் உங்களுக்கு இருக்கும். இப்போது அப்படி நடக்கவும் ஆரம்பித்திருக்கிறது.

ஆச்சரியமூட்டும் அதிர்ச்சி

இது உங்களது அக்கம்பக்கத்திலோ, உங்க வீட்டிலேயோ நடக்கும்போது நீங்கள் அதிர்ச்சி அடைகிறீர்கள். நீங்கள் அதிர்ச்சியடைவதை பார்த்து நாம் ஆச்சரியமடைகிறோம். உங்கள் டிவி எப்போதுமே எதையாவது ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது, அதில் எப்போதும் இதுதான் நடக்கிறது, அதை பார்த்து நீங்கள் அதிர்ச்சியடையவில்லை. இதனுடைய இன்னொரு பரிமாணம் என்னவென்றால், தினமும் மக்கள் சுட்டுத் தள்ளப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். சர்வசாதாரணமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே மக்கள் சுட்டுத் தள்ளப்படுவதை நீங்கள் பார்த்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், உண்மையிலேயே உங்கள் முன் யாரோ ஒருவர் சுட்டுத் தள்ளப்பட்டால், அதைப்பற்றி அதிகம் யோசிக்க மாட்டீர்கள், அது சாதாரணமாக தெரியும், சரியா? நீங்கள் அதிர்ச்சியடைய மாட்டீர்கள், நீங்கள் கொந்தளிக்க மாட்டீர்கள். நீங்கள் அந்த திசையில நேர்மறையாக ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என உந்தித் தள்ளப்பட மாட்டீர்கள். ஏனென்றால், அது சாதாரணம் என நீங்கள் நினைக்க துவங்கிவிடுவீர்கள். ஏனென்றால் தினமும் இது நடந்துகொண்டுதானே இருக்கிறது.

விதைப்பது யார்

தொழில்நுட்பம் மேம்படும்போது இந்த 'டிவியில்' தெரிவது நிஜத்தைவிட அதிக நிஜமாக இப்போது தெரிகிறது. தொழில்நுட்பம் இன்னும் மேம்படும்போது, இது 3D - முப்பரிமாணமாக ஆனால், இது அப்படி மாறும் என சொல்கிறார்கள், பிறகு நீங்கள் அமர்ந்திருக்கும் அறையிலேயே மக்கள் ஒருவரையொருவர் கொன்று தள்ளியபடி இருப்பார்கள். அல்லது நீங்கள் சாப்பிடும் அறையில் சுட்டுத் தள்ளியபடி இருப்பார்கள். அப்படி மக்கள் உண்மையிலேயே ஒருவரையொருவர் கொன்று கொள்ளும்போது அது உங்களுக்கு பெரிய விஷயமாக இருக்காது. ஒரு சமூகத்துக்கு ஊட்டம் கொடுப்பதற்கு இது வழியல்ல. யார் எந்தவிதமான செயல் செய்து கொண்டு இருந்தாலும், இன்னும் ஸ்திரமான, நாகரீகமான, விழிப்புணர்வான சமூகம் உருவாக்கும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. இது எல்லோருடைய வேலை. இதை அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியாது. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள், என்ன உருவாக்குகிறீர்கள், என்ன செய்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், எல்லாமே இந்தப் பரிமாணத்தோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், பிரச்சனைகள் வீதியில் வெடிக்கும்போது, அப்போது நீங்கள் குறை சொல்வீர்கள், அழுவீர்கள். அப்போது அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. ஏனென்றால் நீங்கள் தான் அதற்கான விதைகளை விதைத்தவர்.